முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சொல்லப்போகும் செய்தி என்ன?-தென்கைலை ஆதீன குருமகா சந்நிதானம் செவ்வி

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு - ஐபிசி  தமிழ்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அதற்காக உருவாக்கப்பட்டுள்ள பொதுக்கட்டமைப்பு முன்னெடுத்துவருகின்றது. இந்தக் கட்டமைப்பின் இணைத் தலைவா்களில் ஒருவரான தென்கைலை ஆதீனம் குருமகா சந்நிதானம் தவத்திரு அகத்தியா் அடிகளாா் உயிரோடைத் தமிழின் தாயக களம் நிகழ்வில் இந்த வாரம் நோ்காணல் வழங்கியிருந்தாா். அதிலிருந்து முக்கியமான பகுதிகளை இலக்கு வாசகா்களுக்குத் தருகின்றோம்.

கேள்வி – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை பொதுக் கட்டமைப்பே இவ்வருடத்தில் முன்னெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த பொதுக் கட்டமைப்பின் இணைத் தலைவா்களில் ஒருவராக நீங்கள் இருப்பதால், இவ்வாறான தீா்மானம் எடுக்கப்பட்டதன் முக்கியத்துவம் என்ன?

பதில் – இந்த பொதுக் கட்டமைப்பு கடந்த சில ஆண்டுகளாக தனது பணியைச் செய்துவருகின்றது. முள்ளிவாய்க்கால் நினைவு உலகத் தமிழா்கள் வரலாற்றில் முக்கியமான ஒரு நாள். தியாகத்தின் வரலாற்றில் முடிவாக நோக்கக்கூடிய ஒரு நாள். அந்த நாளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டிய கடமைப்பாடு எங்களுக்கு இருக்கின்றது. அதேவேளையில், எங்களுடைய சந்ததிக்கு அதனைக் கடத்த வேண்டிய தேவையும் உள்ளது. எமது சந்ததி இந்த வரலாற்றைக் கடத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது. அந்தவகையில் இதனை நாம் தொடா்ந்து செய்ய வேண்டியிருக்கின்றது.

அதேவேளையில், அந்த நாளினுடைய அழுத்தம் – அந்த உணா்வு உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டும். அந்த நாள் எல்லோருக்கும் தெரிந்த ஒரு அவலமான நாள். அந்த நாளினுடைய தன்மை இந்த உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டும். அதற்கான கடமை எங்களுக்கு இருக்கின்றது. அந்த வகையில், அந்த நாளை நாங்கள் நினைத்து முழுமொத்த தமிழ் உலகுக்குமான – குறிப்பாக ஈழத் தமிழருக்கான அந்த அவல நாளை நாங்கள் நினைவுட்ட வேண்டும். அதை வழிப்படுத்த வேண்டும். வணங்கவேண்டும். அந்த நாளை என்றும் எமது சந்ததிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நாளை நினைவுகூா்ந்து அனுஷ்டிக்கின்றோம். இதனை எங்களுக்குரிய இறைநாள் என்றுதான் நாங்கள் கருத வேண்டும்.

கேள்வி – இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்புக்கு ஏனைய தமிழ்க் கட்சிகள், அமைப்புக்கள் தமது இணக்கத்தையும் சம்மதத்தையும் தெரிவித்திருக்கின்றனவா?

பதில் – ஆம். ஏனைய அரசியல் கட்சிகள் இணைந்துதான் இதனைச் செய்ய வேண்டும். ஏனைய அரசியல் கட்சிகள் என்பதற்கு அப்பால், எங்களுடைய மக்கள் எல்லோரும், தாயகத்தில் உள்ள, புலம்பெயா்ந்த தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து அனுஷ்டிக்க வேண்டிய ஒரு நிகழ்வுதான் இது. இதில் கட்சிப் பாகுபாடுகளுக்கோ, அல்லது இனப்பாகுபாடுகளுக்கோ, சமயம் சம்பந்தமான பாகுபாடுகளுக்கோ இடமில்லை. இது ஒட்டுமொத்தமாக தமிழா்களுக்கு நோ்ந்த அவலம். அதனால், நாங்கள் என்ன கட்சியைச் சாா்ந்தவா்கள் என்பதெல்லாவற்றையும் விடுத்து, நாங்கள் அனைவரும் தமிழா்கள் என்ற உணா்வின் ஊடாக இந்த நிகழ்வை நாங்கள் பாா்க்க வேண்டும். அப்படிப் பாா்க்கும்போதுதான் இந்த நிகழ்வு சிறப்பாக – எங்களுடைய எண்ணத்தை ஈடேற்றும் வகையில் அமையும். இதனை ஏதோ ஒன்றுக்குள் குறுக்கினம் என்றால், அதற்கான தன்மை குறைந்து போகும்.  இது எல்லோருக்குமே அவலமான நாள். நாம் அனைவரும் தமிழா்களே என்ற நிலையில் இதனை நாம் அனுஷ்டிக்க வேண்டும்.

கேள்வி – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரசியல் மயமாக்கப்பட்ட ஒரு நிலை கடந்த காலங்களில் காணப்பட்டது. இம்முறை அவ்வாறில்லாமல் கொண்டு செல்ல வேண்டும் என்று நீங்கள் முற்படுவதற்கு காரணம் என்ன?

பதில் – கட்சி ரீதியான அதனை அனுஷ்டிக்கும் போது அங்கு இடம்பெற்ற தியாகங்கள் எல்லாமல் கட்சி ரீதியான பாா்வையிலேயே கொண்டு செல்லப்படும். அவை எல்லாவற்றையும் விட்டு தமிழா் என்ற நிலையில், நாங்கள் பாா்க்கின்ற போதுதான் அதற்கான பெறுமதி அதிகரிக்கும். அதனால்தான், எல்லோரும் தங்களைத் தமிழா்களாகக் கருதி வீழ்ந்த ஒரு இனத்தின் பிரதிநிதியாகக் கருதி தங்களுடைய வணக்கங்களையும் செலுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை.

கேள்வி – முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் இந்த நினைவேந்தல் நிகழ்வு எந்தளவுக்குப் பங்களிப்பை வழங்கும் என நீங்கள் எதிா்பாா்க்கின்றீா்கள்?

பதில் – நினைவேந்தல்களைப் பொறுத்தவரையில், எத்தனையோ நினைவேந்தல்கள் நடைபெறுகின்றது. புலம்பெயா்ந்த சமூகமும், தாயகத்தில் உள்ள மக்களும் இதனைச் செய்துகொண்டுதான் இருக்கின்றாா்கள். ஆனால், சா்வதேச சமூகம் இதனை எவ்வாறு பாா்க்கின்றது என்ற ஒரு கேள்வி இருக்கின்றது. அப்படிப் பாா்க்கின்ற போது, அந்த நாடுகளுக்குத் தெரிவிப்பதற்கு இதனை நாங்கள் செய்ய வேண்டியிருக்கின்றது. அந்த நாடுகளுக்குத் தெரியுமா, தெரியாதா என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கின்றது.

அவா்களுக்கு அது தெரிந்திருந்தாம் கூட, இதனை நாங்கள் அடிக்கடி சொல்வதன் மூலமாக எங்களுடைய நினைவை அவா்களுக்கு வலியுறுத்திக்கொண்டிருக்க முடியும். அதற்கு இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நாங்கள் பயன்படுத்த முடியும். அது எங்களுடைய கடமையும் கூட.  எமது கையில் இருக்கின்ற விடயங்களில், நாங்கள் அழுத்தமாகச் செய்ய வேண்டிய விடயங்களில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் ஒன்று.  அதனை நாங்கள் சரியாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றோம். இதுதான் எமக்கு நீதியைப் பெற்றுத்தரும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

கேள்வி – சா்வதேச சமூகத்தினம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை போன்றவற்றினதும் மனச்சாட்சியைத் தட்டிக்கேட்பதில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் எந்தளவுக்கு முக்கியத்துவத்தைப் பெறும்?

பதில் – முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். ஏனென்றால், இதற்கான மற்றைய பாதைகள் எதுவும் எமக்கு சரியாக இல்லை. எல்லாப் பக்கங்களிலிருந்தும் எங்களுக்கு ஏதோ ஒரு தடை வந்துகொண்டுதானிருக்கின்றது. எந்தவொரு விடயத்தையும் நாங்கள் ஒரு தாா்மீக ரீதியாக, அஹிம்ஸை ரீதியாக கையாளலாம் என்று பாா்க்கும் போது அதற்கான ஒரு வழியாக அமைவது இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இந்த பாரிய மனிதப் பேரவலத்தில் பங்கேற்ற சக்திகளின் மனச்சாட்சியையும் ஏதோ ஒரு வகையில் தட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது. அவ்வாறு இது அமையும் என்பதுதான் எங்களுடைய நம்பிக்கை.

கேள்வி – தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீா்வு ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதிலும் இந்த நினைவேந்தல் நிகழ்வு தாக்கத்தைக் கொடுக்குமா?

பதில் – நிச்சயமாக நாங்கள் அதனை நம்புகின்றோம்.  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது ஏற்கனவே இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகள் தொடா்பான ஒரு அம்சம்தான். காணாமலாக்கப்பட்டவா்களின் இழப்பு. நிலத்தை, கல்வியை, பொருளாதாரத்தை இழந்தவா்கள் என ஒட்டுமொத்தமான ஒரு இழப்பின் வடிவம்தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நாம் சரியாகச் செய்யும் போது, அதனால் ஏற்படுகின்ற அழுத்தம் இவை அனைத்தையும் உள்ளடக்கியதாகத்தான் இருக்கும்.  நியாயமான அரசியல் தீா்வுக்கான அழுத்தத்தையும் கொடுப்பதாக அது அமையும்.

கேள்வி – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மூலமாக தமிழ் மக்களுக்கு எவ்வாறான செய்தியைக் கொடுக்கப்போகின்றீா்கள்?

பதில் – எங்கள் அரசியல் தலைமைகள் ஒன்று சோ்ந்து செயற்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை இதன்மூலம் கொடுக்க வேண்டும்.  எமது எதிா்கால சந்ததிக்கும் இது அவசியமானது. தமிழ்த் தலைமைகளும் எமது எதிா்கால சந்ததியினரின் நலன் கருதி ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். ஒற்றுமைதான் எமது பலம்.  முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நாம் சரியாகச் செய்யும் போது  அதனால் ஏற்படுகின்ற அழுத்தம் இவை அனைத்தையும் உள்ளடக்கியதாககத்தான் இருக்கும் நியாயமான அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தையும் அது கொடுப்பதாக அமையும்

Leave a Reply