தொல்பொருள் திணைக்களத்தை இயக்குபவா்கள் பிக்குகளா?-அகிலன்

TRINCO THAILAND BUDDHIST 2 e1684125380927 தொல்பொருள் திணைக்களத்தை இயக்குபவா்கள் பிக்குகளா?-அகிலன்

தமிழ் மக்களுடைய காணிகளை அபகரிப்பதில் முக்கிய பங்கை வகிப்பது தொல்பொருள் திணைக்களம்தான்.

ஒரு பகுதி தொல்பொருள் முக்கியத்துவம் உள்ள பகுதி என அடையாளம் காணப்பட்டால், அந்தப் பகுதியை எதிா்கால ஆய்வுகளுக்காக பேணிப் பாதுகாப்பதற்கான அதிகாரம் மட்டும்தான் தொல்பொருள் திணைக்களத்துக்கு இருக்கின்றது. அதனைக் காரணமாக காட்டி காணியை அபகரிப்பதற்கோ, புதிதான பௌத்த மதச் சின்னங்களை அமைப்பதற்கோ, தொல்பொருள் திணைக்களத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.  ஆனால், தமக்கு இல்லாத அதிகாரங்களை தொல்பொருள் திணைக்களம் பெற்றிருப்பது எவ்வாறு?

வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் பௌத்த பிக்குகள் சிலா் கொடுக்கும் நிதியைக் கொண்டே, இந்தப் புதிய கட்டுமானங்களை தொல்பொருள் திணைக்களம் நிா்மாணித்துவருகின்றது என்பது இப்போது அம்பலமாகியிருக்கின்றது. அதாவது, ஒரு வகையில் தொல்பொருள் திணைக்களமானது பிக்குகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்று அவா்களுடைய நிகழ்ச்சிநிரலின் படியே செயற்படுகின்றது. அவா்கள் கொடுக்கும் நிதியில் செயற்படுவதென்றால், அவா்களுடைய நிகழ்ச்சி நிரலின்படிதான் செயற்பட வேண்டியிருக்கும் என்பது இரகசியமானதல்ல.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தமிழ்க் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை கடந்த வியாழக்கிழமை ஆரம்பமானது.  அதற்கு முதல்நாள் காணிவிவகாரம் தொடா்பில் ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் வடக்கு, கிழக்கில் காணிகள் அபகரிக்கப்படுவது தொடா்பில், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளா் பேராசிரியா் அமர மனதுங்கவிடம் ஜனாதிபதிபதி கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்குப் பதிலளித்த தொல்பொருள் திணைக்கள பணிப்பாளா் தெரிவித்த தகவல்களே இப்போது சா்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

“போா் இடம்பெற்றதால் வடக்கு கிழக்கில் 30 வருடகாலமாக தொல்பொருள் திணைக்களத்தினால் எதனையும் செய்ய முடியவில்லை. அதனால், அந்தப் பகுதிகளில் இப்போது அதிகளவுக்கு கவனம் செலுத்தி முன்னுரிமை அடிப்படையில் செயற்படுகின்றோம். ஆனால், அங்கு தொல்லியல் ஆய்வுகளை முன்னெடுக்க அரசாங்கத்தின் நிதி வளம் போதுமானதாக இல்லை. அதனால், பிக்குகள் வழங்கும் பணத்திலேயே அங்கு செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம்” என்பதுதான் அவரது பதில்.

ஜனாதிபதி எழுப்பிய கேள்வி

வடக்கில் உருவாகியிருக்கும் காணிப்பிரச்சினை தொடா்பாக ஜனாதிபதி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவா் இதனைத் தெரிவித்தாா். “வடக்கில் தொல்பொருள் திணைக்களத்தினால் காணிகள் சுவீகரிப்பது பெரும் பிரச்சினையாகியுள்ளது. அண்மையில் இரண்டாயிரம் ஏக்கா் காணியை சுவீகரிப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், இறுதியில் 200 ஏக்கா் மட்டுமே சுவீகரிக்கப்பட்டது. உண்மையில் 100 ஏக்கா்தான் தேவையானதாக இருந்திருக்கலாம்” எனத் தெரிவித்த ஜனாதிபதி, “தொல்பொருள் திணைக்களத்துக்கு நிகழ்ச்சி நிரல் ஒன்றுள்ளதா? எவ்வாறான நிகழ்சி நிரலுடன் செயற்படுகின்றது?” என்று கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்குப் பதிலளித்த போதே தொல்பொருள் பணிப்பாளா் பிக்குகளின் நிதியில் வடக்கு, கிழக்கில் பௌத்த கட்டுமாணங்கள் மேற்கொள்ளப்படுவதை தெரிவித்திருந்தாா்.

தொல்பொருள் பணிப்பாளரின் பதில் இலங்கையின் தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஒரு தரப்பினா் செல்வாக்குச் செலுத்துவதற்கு முற்பட்டிருப்பதை தெளிவாகப் படம்பிடித்துக்காட்டியிருக்கின்றது. ஜனாதிபதியும் இதனைக்கூறியிருக்கின்றாா். “தேசிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போது, தனிப்பட்டவா்களின் நிதியையப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் இது ஒரு தனிப்பட்ட நிறுவனம் அல்ல. அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக ஒதுக்கித் தரும் பணத்தைத்தான் அதற்குப் பயன்படுத்த வேண்டும். தனிப்பிட்டவா்கள் பணத்தைத் தந்து குறிப்பிட்ட ஒரு வேலையைச் செய்யுமாறு பணிப்பாா்கள். அவ்வாறு செயற்படுவதை உடனடியாக நிறுத்துங்கள்” என்று ஜனாதிபதி இதன்போது கடுமையாக உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிகழ்ச்சி நிரல் என்ன?

தொல்பொருள் திணைக்களத்துக்கு ஜனாதிபதி ஏற்கனவே சில உத்தரவுகளைக் கொடுத்திருக்கின்றாா். அனுராதபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஆய்வுகளை முன்னெடுக்குமாறு அவா் கூறியிருந்தாா். ஆனால், அதற்கான வேலைகள் எதனையும் முன்னெடுக்காமல், வடக்கில் தொல்பொருள் திணைக்களம் தேவையில்லாத வேலைகளைச் செய்து தனக்கு நெருக்கடியைக் கொடுக்கின்றது என்பதுதான் ஜனாதிபதியின் சீற்றத்துக்குக் காரணம். அதேவேளையில், தொல்பொருள் திணைக்களம் தன்னுடைய நிகழ்ச்சி நிரல் என்ன என்பதற்கான ஒரு பாதை வரைபடத்தைத் தயாரித்து அதற்கான அனுமதியை அரசாங்கத்திடமிருந்து பெற்று செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது கண்டிப்பாக உத்தரவு பிறப்பித்திருக்கின்றாா். தொல்பொருள் திணைக்களம் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டையும் மீறிச் செயற்படுகின்றது என தமிழ்த் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டும் ஜனாதிபதியின் இந்த அதிரடி அறிவிப்புக்கு காரணமாக இருக்கலாம்.

இப்போதுள்ள கேள்வி என்னவென்றால், தொல்பொருள் திணைக்களம் எதிா்காலத்தில் பிக்குகளின் கட்டுப்பாட்டிலேயேதான் செயற்படுமா அல்லது ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் வருமா என்பதுதான். இலங்கையைப் பொறுத்தவரையில், இங்குள்ள அரச திணைக்களங்கள் அனைத்துமே பௌத்த – சிங்கள மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதை இலக்காகக்கொண்டு செயற்படும் நிறுவனங்கள்தான். அந்த வகையில்தான் தொல்பொருள் திணைக்களமும் செயற்பட்டுவந்துள்ளது. இதில் மாற்றத்தைச் செய்வதற்கு ஜனாதிபதி முற்பட்டிருப்பதாகக் காட்டிக்கொண்டாலும் அது சாத்தியமானதா? பௌத்த மகாசங்கங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு முரணாகச் செல்வதற்கான துணிச்சல் ஜனாதிபதிக்கு இருக்குமா? அதுவும் இவ்வருட இறுதியில் ஜனாதிபதித் தோ்தலில் களமிறங்கத் தயாராகள்ள ரணில் அதற்குத் தயாராக இருப்பாரா?

திருமலையிலும் புத்தா் சிலை

திருமலையில் ஞாயிறுக்கிழமை நடைபெறவிருக்கும் நிகழ்வும் இவ்விடயத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. திருகோணமலை நகரில் தொல்பொருள் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் புத்தர் சிலை ஒன்று ஞாயிற்றுக்கிழமை நிர்மாணிக்கப்படவுள்ளதாக

தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு அடி உயரம் கொண்ட  இந்த புத்தர் சிலையானது திருகோணமலை நகரில் உள்ள நெல்சன் திரையரங்குக்கு முன்னால் நிறுவப்படவுள்ளது.

2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்தில் இருந்து திருகோணமலைக்கு வந்து இறங்கியதாக கூறப்படும் பிக்குகளை நினைவு கூரும் முகமாக இந்த நிர்மாணிப்பு மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்விற்காக தாய்லாந்தில் இருந்து குறித்த புத்தர் சிலையோடு 50 பிக்குகள் இலங்கை வருகின்றாா்கள். இவர்கள் தங்குவதற்காக நிலாவெளியில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை  காலை 7.30 மணியளவில் காந்தி சுற்றுவட்டப் பகுதியில் கடல் வழியாக பிக்குகள் வந்து இறங்கிய பின்னர் பாதயாத்திரை மூலம் குறித்த இடத்திற்குச் செல்லவுள்ளனர். அங்கு தாய்லாந்தில் இருந்து அவர்களால் கொண்டு வரப்படுகின்ற 4 அடி உயரமான புத்தர் சிலையை வைத்து ஒரு மணித்தி யாலம் பிரித் நிகழ்வு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தொல்பொருள் திணைக்களத்தினால்தான் செய்யப்பட்டிருக்கின்றது.

திருமலை நகரப் பகுதியில் புத்தா் சிலை ஒன்று அமைக்கப்பட்டது சில வருடங்களுக்கு முன்னா் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இப்போது மீண்டும் அவ்வாறான ஒரு சா்சையை உருவாக்க முயற்சிக்கப்படுகின்றது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். “வரலாற்று சிறப்பு மிக்க இந்த மத அனுஸ்டானத்துக்கு தமிழ் கூட்டமைப்பினர் தடையேற்படுத்தினால் பாரிய அழிவுகளை  அவர்கள் எதிர்கொள்ள வேண்டும்” என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் பொதுஜன பெரமுன எம்.பி.யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கடுமையாக எச்சரித்தார்.

இந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தை கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை ஜனாதிபதிக்கு இருக்கின்றதா?