இன்று தோற்றிருப்பது இலங்கையின் பொருளாதாரம் அல்ல இந்த அரசாங்கத்தின் இனவாதமே-கி.சேயோன்

326 Views

தோற்றிருப்பது இலங்கையின் பொருளாதாரம் அல்ல

தோற்றிருப்பது இலங்கையின் பொருளாதாரம் அல்ல

இன்று தோற்றிருப்பது பொருளாதாரமோ ஏனைய விடயங்களோ அல்ல. இந்த அரசாங்கத்தின் இனவாதமே தோற்றிருக்கின்றது என்பதே இன்று நாட்டின் நிலைமை சொல்லும் உண்மையான செய்தி என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினருமான கி.சேயோன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 124வது ஜனன தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தந்தை செல்வா என்ற ஒருவர் உருவாகாமல் இருந்திருந்தால் இந்த நாட்டில் தமிழர்களின் நிலைமை மிக மோசமாக இருந்திருக்கும். தமிழரசுக் கட்சியை உருவாக்கி அவரின் தீர்க்கதரிசனத்தின் மூலம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வெளியிட்டிருந்தார். அதன் பின்னர்தான் தமிழர்சேனை பட்டிதொட்டியெங்கும் எமது உரிமைகளுக்காகப் போராட ஆரம்பித்தன.

இவ்வாறு போராட்ட வரலாறு ஆரம்பிக்கப்பட்டு எமது தமிழ் மக்களுக்காக இருந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருக்கின்ற இந்த நேரத்தில், தேசியத் தலைவரினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் மிகவும் கனதியாக இருக்கின்றது. தற்போது நாட்டில் இருக்கின்ற சூழ்நிலையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளும் மக்களுக்கு மிகவும் தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.

தற்போது இந்த நாட்டின் அரசாங்கம் பொருளாதாரக் கொள்கையில் தோல்வியடைந்து நாட்டை நிருவகிக்க முடியாமல் இருக்கின்றது. இன்று தோற்றிருப்பது பொருளாதாரமோ ஏனைய விடயங்களோ அல்ல. இந்த அரசாங்கத்தின இனவாதமே தோற்றிருக்கின்றது என்பதே இன்று நாட்டின் நிலைமை சொல்லும் உண்மையான செய்தி என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply