எல்லையில் படைகளை திரும்பப் பெறும் இந்திய – சீன ஒப்பந்தத்தை வரவேற்கிறோம்: அமெரிக்கா

இந்தியாவும் சீனாவும் எல்லையில் படைகளை திரும்பப் பெறுவது தொடர்பான ஒப்பந்தத்தை அமெரிக்கா வரவேற்கிறது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக்கின் டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் இருந்து துருப்புகளை திரும்பப் பெறுவதற்கான செயல்முறை முடிவடையும் தருவாயில் உள்ளதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பகுதிகளில் இருந்து துருப்புக்கள் திரும்பப் பெறுவதையும், உள்கட்டமைப்பை அகற்றுவதையும் இந்திய – சீன ராணுவங்கள் பரஸ்பரம் சரிபார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. எல்லை விவகாரங்களில் பரஸ்பர உடன்பாட்டைத் தொடர்ந்து இரு தரப்பிலிருந்தும் எல்லைப் படையினர் படைகளை திரும்பப் பெறும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில், வாஷிங்டனில் நேற்று (செவ்வாய்)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  மேத்யூ மில்லர், “உண்மையான கட்டுப்பாட்டு கோடு (LAC) பகுதியில் மோதல் ஏற்படும் புள்ளிகளில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கு இரு நாடுகளும் ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்துள்ளன. எல்லைப் பதட்டங்களைக் குறைப்பதை நாங்கள் வரவேற்கிறோம். இது தொடர்பாக நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தோம். ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த தகவல்களை பெற்றுள்ளோம். அதேநேரத்தில், இந்தியா – சீனா இடையேயான இந்த தீர்மானத்தில் அமெரிக்கா எந்த பங்கும் வகிக்கவில்லை” என்றார்.