ஒரு வளத்தினைக் கொண்டுவந்து இன்னுமொரு வளத்தினை அழிப்பதை அனுமதிக்க மாட்டோம்

வளத்தினை அழிப்பதை அனுமதிக்க மாட்டோம்

‘தொழிற்சாலைகள் வருவதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்க மாட்டோம். ஆனால் ஒரு வளத்தினைக் கொண்டு வந்து இன்னுமொரு வளத்தினை அழிப்பதை அனுமதிக்க மாட்டோம்’ என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு –ஏறாவூர் புன்னக்குடாவில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலை தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பிக் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் சென்றிருந்தார்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவது குறித்தான தகவல்கள் அங்கு கிடைத்ததுடன் அது தொடர்பில் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு கலந்துரையாடினார்.

குறித்த இடத்தில் வரவிருக்கும் தொழிற்சாலையின் கழிவினை சுத்திகரித்து கடலினுள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே இக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அதனால் சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லையெனவும் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது. எனினும் குறித்த தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டாலும் கடலுடன் கலக்குமானால் கடல்வளம் பாதிக்கப்படும் சூழ்நிலையேற்படும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம், “மட்டக்களப்பு புன்னக்குடா கடற்பகுதியில் மர்ம குழாய்கள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மர்மம் விளங்கவில்லையென ஓரிரு நாட்களில் செய்திகளில் பார்த்தோம்.அதனை நேரடியாக கண்காணிப்பதற்காக இந்த பகுதிக்கு விஜயம்செய்தேன்.நாங்கள் இதற்குள் நுழையும் நுழைவாயிலில் இராணுவமுகாம் ஒன்று அமைக்கப்படுகின்றது.

குழாய்கள் கடலுக்குள் சுமார் 200மீற்றர் தூரத்திற்கு புதைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அதிகாரிகளுடன் பேசினேன். தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பெயர்ப்பலகை இடப்பட்டுள்ளது.சுமார் 13கோடிரூபா பெறுமதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புன்னக்குடா பகுதியில் சுமார் 200ஏக்கருக்கு அதிகமான பகுதி முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆடைத்தொழிற்சாலைக்கு மேலாக நூல்களுக்கு வர்ணம் சேர்க்கும் தொழிற்சாலையொன்றும் நிர்மாணிக்கப்பட வுள்ளதாக அறியமுடிகின்றது.

இது தொடர்பில் பிரதேச செயலாளரிடம் கேட்டபோது அவரும் இதனை உறுதிப்படுத்தினார். தொழிற்சாலைகள்  வருவதை நாங்கள் வரவேற்கின்றோம்.அந்த தொழிற்சாலைகள் இன்னொரு வளத்தினை கொடுத்து ஒரு வளத்தினை அழிப்பதாகயிருக்ககூடாது.மட்டக்களப்பு மாவட்டத்தில் பனை அபிவிருத்திசபை மற்றும் பனை உற்பத்தியாளர்களுக்கான பனை மூலப்பொருட்களை வழங்கும் முக்கிய பகுதியா இதுவுள்ளது.அதிகளவான பனைமரங்களைக்கொண்ட பகுதி.அந்த பனை மரங்கள் அழிக்கப்படக்கூடாது” என்றார்.

Tamil News