பிரிட்டனிலுள்ள புலம்பெயர்ந்தோருடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கொடுங்கள்; பிரிட்டன் அமைச்சரிடம் ஜனாதிபதி கோரிக்கை

371 Views

கலந்துரையாட சந்தர்ப்பம் கொடுங்கள்

ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ‌, அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கொடுங்கள் என்று ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் தாரிக் அஹமட்டிடம் கோரிக்கை விடுத்தார்.

இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பிரிட்டன் அமைச்சர் தாரிக் அஹமட் ஜனாதிபதியை நேற்று சந்தித்துப் பேசினார். இதன்போதே ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளன என்று இதன்பொது தெரிவித்த தாரிக் அஹமட், அதனை மேலும் வலுப்படுத்துவதற்கு, நடைமுறை மற்றும் இலக்குகளை அடையக் கூடிய அணுகுமுறைகளுடன் முன்னோக்கிச் செல்வதன் மூலம் இலங்கையில் உள்ள அனைத்து மனித உரிமை பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

“இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரனைகளுக்கும் தீர்வு காண்பதுடன், மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும். அதற்கு, ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்குமாறும் அமைச்சர் தாரிக் அஹமட்டிடம் கேட்டுக்கொண்டார்.

ஐக்கிய இராச்சியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 2023இல் 75 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இதற்காக ஒரு விழாவை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில், இரு நாடுகளின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை, கலாசார நிகழ்வுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்தும் வகையிலான நிகழ்வுகளை நடத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹுல்டன், முதன்மைச் செயலாளர் மத்யூ டெய்த், அமைச்சர் தாரிக் அஹமட்டின் உதவியாளர் இசபெல் ஸ்கொட், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Tamil News

Leave a Reply