வேறு மாற்று வழி இல்லாத காரணத்தினால் ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றினோம்- காவல்துறை கருத்து

120 Views

ஜனாதிபதி செயலகத்தை ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு அமைதியாக விலகிச் செல்லுமாறு பல தடவைகள் தெரிவித்திருந்த போதும் அவர்கள் அதனை நிராகரித்து பாதுகாப்பு கடமையில் இருந்த காவல்துறையினரிடமும் உயர் காவல்துறை அதிகாரிகளிடமும் ஆத்திரமூட்டும் வகையில் செயல்பட்டதாக  கவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் பெறுமதிமிக்க பொருட்கள் மற்றும் ஆவணங்களை பாதிப்படையாமல் பாதுகாக்க வேண்டியதை கவனத்தில் கொண்டும் வேறு மாற்று வழி இல்லாத காரணத்தினாலுமே நேற்றைய தினம் ஆர்ப்பாட்டக்காரர்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, அமைதி மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

அரசியலமைப்பின் மூலம் நாட்டின் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் மட்டுப்படுத்தலை கவனத்திற்கொண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறும் காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகப் பகுதியில் தங்கியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று அதிகாலை அங்கிருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பில் விரிவான தெளிவுபடுத்தலை காவல்துறை ஊடகப் பிரிவு நேற்று வெளியிட்டுள்ளது. அச்சுறுத்தல்களை விடுத்தல், அழுத்தங்களை பிரயோகித்தல், வன்முறை அல்லது கலகங்களை மேற்கொண்டு அமைதி மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தல், துன்புறுத்தும் வகையில் செயற்படுதல் ஆகியவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதே வேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல் மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தி அவர்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply