எமது தொல்லியல் மரபுரிமை அடையாளங்களை நாமும் பாதுகாக்கலாம் (நேர்காணல்)-பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம்

சிறீலங்கா அரசு சிங்களவர்கள் மற்றும் போர்க்குற்றவாளிகளைக் கொண்ட அரச தலைவர் செயலணி ஒன்றை தொல்பொருள் ஆய்வுக்கென அண்மையில் கிழக்கு மாகாணத்தில் நியமித்துள்ளது. இது தமிழ் இனத்தின் வரலாற்றை அழிக்கும் திட்டமிட்ட நடவடிக்கை என்பது தெளிவனது.

இந்த நிலையில் இது தொடர்பில் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் வரலாற்றுத்துறை தலைவரும்,மூத்த பேராசிரியருமான பரமு புஸ்பரத்தினத்துடன் நாம் மேற்கொண்ட நேர்காணலை இங்கு தருகின்றோம். பேராசிரியர் புஸ்பரத்தினம் அவர்கள் யாழ் கலாச்சார நிலைய பணிப்பாளராக பணியாற்றி வருவதுடன்,தொண்டி மீள் புனரமைப்பு பிரிவின் முக்கிய ஆலோசகராகவும் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி -எமது வரலாற்று தொல்பொருட்களை பாதுகாப்பதில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு என்று ஒரு சட்ட ஷரத்துக்கள் ஏதாவது இருக்கின்றதா?

பதில்– இலங்கை தொல்லியல் சட்டத்தில் நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மண்ணிற்குள் புதையுண்ட மண்ணிற்கு வெளியே தெரிகின்ற வரலாற்று பெறுமதியுடைய சான்றுகள் அனைத்தும் குறிப்பிட்ட பிரதேசத்தின் மரபுரிமைச் சின்னங்களாக பிரகடனப்படுத்துவதற்கு தொல்லியல் சட்டத்தில் இடமுண்டு.

அந்த மரபுரிமைச் சின்னங்கள் ஒரு தொல்லியல் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுவதற்கு சட்டத்தில் இடமுண்டு. அதை தொல்லியல் திணைக்களம் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. பொது அமைப்புக்கள் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியோடு அந்த மரபுரிமைச் சின்னங்களை கண்டறிந்து, பாதுகாப்பதற்கும், அதை ஒரு மரபுரிமைச் சின்னமாக தொல்லியல் திணைக்களம் ஊடாக பிரகடனப்படுத்துவதற்கும் வாய்ப்புக்கள் உண்டு.

உதாரணமாக வடமாகாண முதலமைச்சராக கௌரவ நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் பணியாற்றிய காலகட்டத்தில் அவரின் முயற்சியால், கலாச்சார திணைக்கள பணிப்பாளர் நாயகமும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தையும் அழைத்து ஒரு கலந்துரையாடல் மேற்கொண்ட போது,இந்தக் கேள்வியை நான் அவர்களிடம் கேட்ட போது, அவர்கள் தங்கள் அனுமதியோடு இந்த மரபுரிமைச் சின்னங்களை பாதுகாப்பதற்கு பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை போன்றவை சில வருமானங்களை ஈட்டுவதற்கும் இடமுண்டு என்பதை அவர்கள் உறுதி செய்துள்ளார்கள்.

ஆகவே எங்கள் மரபுரிமைச் சின்னங்களை நாங்களே பாதுகாப்பதற்கு சட்டத்தில் இடமுண்டு. உதாரணமாக கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஹிஸ்புல்லா அவர்களின் முயற்சியால் கிழக்கிலங்கையில் பல மில்லியன் ரூபாய்கள் செலவில் ஒரு இஸ்லாமிய கலாசார அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டதை இந்த இடத்தில் நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

கேள்வி-எந்த வகையில் தமிழர்களின் வரலாற்று சான்றிதழ்களை உலகில் ஏதேனும் ஒரு அமைப்புக்கள் மூலம் பாதுகாக்க முடியும்? அல்லது பாதுகாக்க வேண்டும்?

பதில்-அது செய்வதற்கு இடமுண்டு. பருத்தித்துறையில் தெருமூடி மடம் என்பது சுவிஸில் உள்ள பருத்தித்துறை பொது மக்களின் ஒன்றியத்தின் முயற்சியால் பாதுகாக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவில் வரலாற்றுப் பழைமை வாய்ந்த திருக்கு மரமும் அதனோடு இணைந்த வரலாற்றுச் சின்னங்களும் ஆவணப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த மரபுரிமைச் சின்னங்களை பாதுகாக்கின்ற போது, அதற்கான உதவிகளை வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்குகின்ற போதுஇ தனிப்பட்டவர்கள் அந்த நிதியை பெற்றுச் செய்வதில் சில சட்டச் சிக்கல்கள் உண்டு.தப்பான விமர்சனங்கள் உருவாகுவதற்கும் வாய்ப்புக்கள் உண்டு.theru moodimadam எமது தொல்லியல் மரபுரிமை அடையாளங்களை நாமும் பாதுகாக்கலாம் (நேர்காணல்)-பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம்

ஆகவே அந்த நிதியை ஒரு அரசாங்க அதிபர் ஊடாக அல்லது பிரதேச செயலாளர் ஊடாக அல்லது பல்கலைக்கழகத்தின் ஊடாக நாங்கள் நிதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறானதொரு மரபுரிமைச் சின்னத்தை வெளிநாட்டு உதவியோடு மீள் புனரமைப்புச் செய்கின்ற போது அதற்கான ஒரு முன்மொழிபை தொல்லியல் திணைக்களத்திற்கு அனுப்பி அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தால் சட்டச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

அது மட்டுமல்லாமல் அவ்வாறு செய்வதை தொல்லியல் திணைக்களம் அங்கீகரிக்கவும் தயாராக இருக்கின்றது. அவர்களுடைய மேற்பார்வைகளும் சில ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்புக்கள் உண்டு. ஆகவே எங்கள் மரபுரிமைச் சின்னங்களை ஒரு வெளிநாட்டு உதவியோடு நாங்கள் பாதுகாப்பதற்கு சட்டத்தில் இடமுண்டு.

இந்த இடத்தில் இன்னுமொன்றை குறிப்பிட விரும்புகின்றேன். இலங்கையில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட இடங்களில் மரபுரிமை சின்னங்கள் உண்டு. அவை அனைத்தும் பாதுகாக்கப்பட்டதாக கூறமுடியாது. எங்களின் பிரதேசத்திலுள்ள மரபுரிமைச் சின்னங்களை அரசு அல்லது தொல்லியல் திணைக்களம் என்பன பாதுகாக்க முற்படவில்லை என்ற ஒரு விமர்சனம் இருப்பதையும் நான் நன்கு அறிவேன். ஆனால் நாங்களாகவே முயற்சி எடுத்து எங்களின் மரபுரிமைச் சின்னங்களை பாதுகாப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உண்டு என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

கேள்வி- நிலத்துக்கு கீழான அகழ்வுகள் மேற்கொள்ளப்படாமலேயே  2300 ஆண்டுகள் தொன்மையான தொல்பொருட்கள் எமது ஈழ தேசத்தில் கண்டறியப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் இடம்பெறுகின்ற போது அதற்கு முந்தைய பல தொல்பொருட்கள் கிடைப்பதற்குரிய வாய்ப்புக்கள் இருக்கிறது. இந்நிலையில் இலங்கையில் அகழ்வாராய்ச்சிகள் இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றனவா?

பதில் -நிறைய இருக்கின்றது. இலங்கையில் 1970இற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் தமிழ் மொழியின் தொன்மை, தமிழர் பண்பாடு தொடர்பான பல ஆதாரங்கள் தென்னிலங்கையிலும் கண்டுபிடிக்க்பபட்டுள்ளது. வட இலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஒரு தொய்வான நிலை காணப்படுகிறது.

ஆனால் நாங்கள் தொல்பொருள் சின்னங்கள் எதிர்பாராமல் கிடைத்தது என்று சொல்வதைவிட அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்த சான்றுகளை வரலாற்று வெளிச்சத்திற்கு கொண்டு வருவதில் சில பின்னடைவுகள் உண்டு. அதை தவிர்த்து மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு வருவதற்கு ஊடகங்கள் மிக முக்கிய பங்காற்ற வேண்டும்.

உதாரணமாக 2017, 2018ஆம் ஆண்டுகளில் கோட்டையிலே மிகப்பெரிய அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சிக்கு உலகில் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் Christopher Davis அவர்களும், அவரின் குழுவினரும் மேற்கொண்ட போதுஇ யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து நானும் எனது மாணவர்களும் பங்கு கொண்டோம்.Jaffna kottai எமது தொல்லியல் மரபுரிமை அடையாளங்களை நாமும் பாதுகாக்கலாம் (நேர்காணல்)-பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம்

அகழ்வின் முடிவிலே கருத்தரங்கு நடைபெற்ற போது, குறிப்பிட்ட யாழ்ப்பாணக் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரால் கட்டப்படுவதற்கு முன்பு 2700 ஆண்டுகளுக்கு முன்பே கோட்டைப் பிரதேசத்தில் மக்கள் வாழ்ந்ததற்கும் அந்த மக்கள் தமிழ்நாடு, தென்னிந்தியா, வட இந்தியா, அரேபியா, சீனா, ஆபிரிக்கா போன்ற நாடுகளில் வணிகத்தில் ஈடுபட்டதற்கும் கோட்டை இருந்த பிரதேசம் அன்று தொட்டு மேற்கு ஆசியா,கிழக்கு ஆசியா,தென்கிழக்காசியா, ஆபிரிக்க நாடுகளுக்கு இடையிலான வணிக பரிமாற்று மையமாக இருந்தது என்பதையும் அவரும் நானும் அதைக் குறிப்பிட்டிருந்தோம்.

முக்கியமான ஒரு குறிப்பு. கந்தரோடை, சாட்டி, பூநகரி, அநுராதபுரம், தமிழ்நாடு, இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் ஒரு நாகரீகம் பண்பாட்டோடு தோன்றியதோ அந்த மக்கள் யாழ்ப்பாண கோட்டை பிரதேசத்திலும் வாழ்ந்துள்ளார்கள். யாழ்ப்பாண நகரம் என்பது இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னரே ஆக்கம் பெற்றிருந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கருத்து எல்லா மக்களிடமும் கொண்டு செல்லப்பட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை. இது தொடர்பாக ஆங்கிலத்திலும். தமிழிலும் செய்திகள் பல கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றது. சில விடயங்கள் மக்கள் மத்தியிலே செல்லும் போது எங்களின் மரபுரிமையைப் பற்றி நாம் அறிவது மட்டுமல்லாமல் அவற்றை பாதுகாக்க வேண்டும் என்னும் விழிப்புணர்வு ஏற்படும் என்பது எனது கருத்தாகும்.

ஆகவே எங்கள் தமிழ் மக்களின் தொன்மையான தொடர்ச்சியான வரலாற்றை கண்டறிவதற்கான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. அது மக்களிடம் எவ்வாறு செல்கின்றது என்பதில் தான் ஒரு தொய்வு நிலை காணப்படுகின்றது.

கேள்வி- இலங்கையின் தமிழர்களின் இருப்பையும், தொன்மையையும் எடுத்துக் காட்டுகின்ற வடமாகாணத்தில் காணப்படுகின்ற தொல்பொருள் சான்றுகளில் முக்கியமான சான்றுகளாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள்? அவற்றின் காலமதிப்பீடு தொடர்பான உங்கள் கருத்து என்ன?

பதில் – வடமாகாணத்தில் ஏறத்தாள 380 இற்கு மேற்பட்ட இடங்களில் முக்கிய வரலாற்று மையங்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவற்றில் கணிசமானவை தொல்லியல் திணைக்களத்தினால் மரபுரிமை சின்னங்களாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் மிக முக்கியமான தொல்லியல் மரபுரிமை சார்ந்த இடங்கள் என்று பார்க்கின்ற போது கந்தரோடை ஒரு முக்கியமான தொல்லியல் மரபுரிமை இடமாகப் பார்க்கப்படுகிறது.

கந்தரோடையை ஒத்த தொன்மையான பண்பாடு பிற்காலத்தில் சாட்டி,காரைநகர், பூநகரி போன்ற இடங்களிலும் அண்மையில் கட்டுக்கரை போன்ற இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கந்தரோடை அகழ்வாய்வில் கிடைத்த சான்றுகளில் இங்கு வாழ்ந்த பூர்வீக மக்கள் தமிழ்நாட்டை ஒத்த மக்கள். இவர்கள் தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்திருக்கலாம். அல்லது இங்குள்ள மக்கள் தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கலாம்.

இத்தகைய குடியிருப்பு கந்தரோடை முதல் புத்தளம் வரை பரவியிருந்தது என்ற கருத்தை முன்வைத்திருந்தார். அவர் முன்வைத்த கருத்தை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் பிற்காலத்தில் பூநகரி,கட்டுக்கரை போன்ற இடங்களில் மேற்கொண்ட அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீங்கள் கேட்டது போல முக்கிய இடங்களாக கந்தரோடை, பூநகரி, கட்டுக்கரை போன்ற இடங்களைக் குறிப்பிடலாம்.

இவற்றைவிட முக்கியம் என்று சொன்னால் 2017ஆம் ஆண்டு கிழக்கிலங்கையில் கிளிவெட்டியில் திருமங்கலா என்ற இடத்தில் ஆய்வு செய்த போது, இற்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் மக்கள் வாழ்ந்ததற்கு அந்த இடங்களிலே தமிழ் மக்கள் வழிபட்ட ஆலயங்கள் இருந்ததற்கு நம்பகரமான கல்வெட்டு ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருமங்கலா என்ற இடத்தில் 1964இல் இருந்து மக்கள் புலம் பெயர்வதற்கு முன்னர் பல ஆண்டு காலமாக தமிழ் மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

மூன்றாவதாக 2017ஆம் ஆண்டிலிருந்து கட்டுக்கரையில் மிகப் பெரிய அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பொழுது நாங்கள் கீழடி அகழாய்வை முதன்மைப்படுத்தும் அதே நேரத்தில் கட்டுக்கரையில் கிடைத்த தொல்லியல் ஆதாரங்களையும் கருத்திற் கொள்ள வேண்டும். நான் நினைக்கிறேன் கந்தரோடையை அடுத்து வட இலங்கையில் தொன்மையான பூர்வீகமான மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கட்டுக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.kattukaraikulam mannar எமது தொல்லியல் மரபுரிமை அடையாளங்களை நாமும் பாதுகாக்கலாம் (நேர்காணல்)-பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம்

இந்தக் கட்டுக்கரையை பார்வையிட்ட தென்னிந்திய தொல்லியல் அறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் ராஜன் அவர்கள் கொடுமணல், பொருந்தல் போன்ற ஒரு தொன்மையான மக்கள் குடியிருப்பு கட்டுக்கரையில் வாழ்ந்ததாக குறிப்பிடுகின்றார். இந்த அகழ்வாராய்ச்சியை பார்வையிட்ட தென்னிலங்கை அறிஞர்கள்கூட மாதகலில் இருந்து அநுராதபுரம் செல்கின்ற வழியில் ஒரு தொன்மையான நகரமாக இது எழுச்சி பெற்றிருக்கின்றது என்பதை அந்த ஆதாரங்கள் உறுதிப்படுத்துவதாக குறிப்பிடுகின்றனர்.

அதைவிட யாழ்ப்பாணத்தில் மட்டும் 86 இடங்கள் முக்கிய தொல்லியல் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அனைத்தும் முக்கியமான தொல்லியல் மையங்கள் தான். அவற்றிற்கு இடையில் எங்களின் பூர்வீக இருப்பை அடையாளப்படுத்தக்கூடிய தொல்லியல் இடங்களாக கந்தரோடை, பூநகரி,சாட்டி கட்டுக்கரை போன்ற இடங்களைப் பார்க்கின்றேன்.

கேள்வி -இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர்களையும் தமிழர்களின் தொல்பொருட்களையும் பாதுகாப்பது மற்றும் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபடுவதில் பல்வேறு நெருக்கடிகளும். சிக்கல்களும்,அடக்குமுறைகளும் இருக்கின்றது. இந்த அடக்குமுறைகளை களைவதற்கு புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் எந்த வகையான தங்களின் பங்களிப்பை செய்ய வேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில் – எங்கள் பகுதிகளில் அகழ்வாய்வுகளை மேற்கொள்வது, பாதுகாப்பது போன்றவற்றில் சில சட்டச் சிக்கல்கள் உண்டு என்றாலும், அவற்றிலிருந்து விடுபட்டு நாங்கள் அதை செய்வதற்கு சட்ட ரீதியிலான வாய்ப்புக்கள் உண்டு.

உதாரணமாக 2019- 2020 ஆண்டுகளுக்கான அனுமதியை நான் தொல்லியல் திணைக்களத்தில் பெற்றிருக்கின்றேன். நான் எந்த நேரத்திலும் போய் அங்கு அகழ்வு செய்வதற்கு தயாராக இருக்கின்றேன். ஆனால் சூழ்நிலைகள் சாதகமாக இல்லாமையினால், கைவிடப்பட்டுள்ளது. ஆனால் மரபுரிமைச் சின்னங்களை பாதுகாக்க எவ்வளவு உதவும் என்பதில் எங்களுக்கு தடைகள் இருந்தாலும், எங்கள் மக்களாக வந்து அவற்றை பாதுகாப்பதில் தடைகள் இல்லை.prof .pushparetnam எமது தொல்லியல் மரபுரிமை அடையாளங்களை நாமும் பாதுகாக்கலாம் (நேர்காணல்)-பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம்

கலாநிதி திருமுருகன் அவர்கள் சிவபூமியிலே மூன்று மாடிகளைக் கொண்ட பெரிய அருங்காட்சியகம் ஒன்றை அமைத்திருக்கின்றார். அங்கு எங்களிடமிருந்து மறைந்து போகின்ற, அழிந்து போகின்ற அல்லது விற்கப்படுகின்ற பல மரபுரிமைச் சின்னங்களை மக்கள் முன்வந்து பாதுகாப்பதில் எந்தவித தடையும் இல்லை. அதை தடுப்பதற்கு தொல்லியல் திணைக்களம் முயலும் என்று நான் கருதவில்லை. அனுமதி பெற்று அந்த தொல்லியல் சின்னங்களை நாம் பாதுகாக்க முடியும்.

இப்படியான அகழ்வாராய்ச்சிகளை, மரபுரிமைச் சின்னங்களை பாதுகாப்பதற்கு புலம்பெயர் மக்களால் தான் அதை செய்ய முடியும். ஆனால் இங்குள்ளவர்கள் அதை செய்வதற்கு சட்டச்சிக்கல்கள் வராமல் இருப்பதற்கு நான் முன்னர் சொன்னது போல இங்குள்ள மரபுரிமைச் சின்னங்கள் புலம்பெயர் நாடுகளில் பேணப்படலாம். ஆவணப்படுத்தலாம். அதை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

உதாரணமாக சுவிஸ் தமிழ் கல்விச் சேவை, தமிழ் மக்களின் பாரம்பரிய மரபுரிமைச் சின்னங்களை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அதன் இயக்குநராக உள்ள திரு. பார்த்திபன் கந்தசாமியினுடைய முயற்சியினால் எங்களின் மரபுரிமைச் சின்னங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. வடபகுதியிலோ அல்லது தமிழ்ப் பிரதேசங்களிலோ ஆய்வு செய்வதற்கும் மரபுரிமைச் சின்னங்களை பேணிப் பாதுகாப்பதற்கும் புலம்பெயர் தமிழர்கள் உதவி செய்வதற்கு தடையில்லை.

ஆனால் அவர்களின் நிதி அரச அதிபர், அல்லது பல்கலைக்கழகம், அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பின் ஊடாக மேற்கொள்ள வேண்டும். தனிப்பட்ட ஒருவரிடம் வரும் போது பல விமர்சனங்கள் வருவதற்கும்இ சில சட்டச் சிக்கல் வருவதற்கும் வாய்ப்பு உண்டு.ஆகவே சட்ட ரீதியான முறையை அணுகி புலம்பெயர் தமிழர்கள் இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் உங்களுடைய மரபுரிமைச் சின்னங்களை பாதுகாப்பதற்கும் உதவ முடியும் என்பது தான் எனது கருத்து.

அதற்காகத் தான் குறிப்பிட்டிருந்தேன். கிழக்கிலங்கையில் பல மில்லியன் செலவில் இஸ்லாமிய கலாச்சார சின்னங்களை பேணிப் பாதுகாப்பதற்கான ஒரு அருங்காட்சியகம் கிழக்கு மாகாண சபையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்படியான ஒரு முயற்சியை வடமாகாண சபையும் செய்திருக்கலாம். ஆனால் செய்ய முடியவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரிய விடயமாகும்.

மூன்றாவது மிகப்பெரிய குறைபாடு எங்களின் மக்கள் எங்களின் மரபுரிமைச் சின்னங்கள் இருக்கும் இடங்களிலே குடியிருப்புகளைஇ சாலைகளை அமைத்திருப்பதனாலே அந்த இடங்களில் அகழாய்வு செய்வதற்கு அல்லது மரபுரிமைச் சின்னங்களை பாதுகாப்பதற்கு மக்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். ஏனெனில் தொல்லியல் சட்டத்தில் ஒரு மரபுரிமைச் சின்னம் ஒரு தனி மனிதருடைய காணியில் இருக்குமானால் அவருடைய அனுமதியுடனேயே தொல்லியல் திணைக்களமும் அதனை பாதுகாக்கலாம். தனிப்பட்ட நிறுவனங்களும் பாதுகாக்கலாம்.manthiri mannai எமது தொல்லியல் மரபுரிமை அடையாளங்களை நாமும் பாதுகாக்கலாம் (நேர்காணல்)-பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம்

ஆனால் அதை செய்வதற்கு தனிப்பட்ட நில உரிமையாளர்கள் முன்வருவது மிகமிகக் குறைவு. உதாரணமாக நாங்கள் மந்திரி மனை இருந்த பிரதேசம் 2010ஆம் ஆண்டு தொல்லியல் திணைக்களத்தால் மரபுரிமைச் சின்னமாக பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கான விளம்பரப் பலகைகளும் அதிலே போடப்பட்டது. ஆனால் அதை மீளுருவாக்கம் செய்வதற்கு நாம் முயற்சி செய்த போதுஇ அந்தக் காணியை தமக்குரியதென்று மூவர் உரிமை கோரினார்கள்.

நில உரிமையாளரின் அனுமதியின்றி ஒரு மரபுரிமைச் சினன்த்தை நாங்கள் கட்டாயமாக பாதுகாப்பதென்பது பிரச்சினைக்குரிய விடயமாகும். அவர் நீதிமன்றத்தின் உதவியை நாடுவாராக இருந்தால் அது தடையாக இருக்கும். உதாரணமாக கோட்டையில் சங்கிலியன் கோட்டை என்னும் ஒரு இடம் இருந்தது. பல்கலைக்கழகத்தில் நிதியுதவியைப் பெற்று அதை ஆய்வு செய்வதற்கு முற்படுகின்ற போது, வெளிநாட்டிலுள்ளவர் அதற்குரிய அனுமதியைப் பெறாததனால் தொல்லியல் திணைக்களம் அந்த இடத்தில் ஆய்வு செய்வதை நிறுத்தியிருந்தது.

அப்படியான சில பிரச்சினைகளும் உண்டு. ஆனால் உங்களுடைய பிரதேசத்தைப் பாதுகாப்பதற்கு பல வழிமுறைகள் உண்டு. ஒரு பிரதேச சபையிலே பருத்தித்துறையில் உள்ள வெளிச்ச வீட்டை பராமரித்து பாதுகாத்து சுற்றுலா இடமாக பிரதேச சபை செய்யலாம். எங்கள் யாழ்ப்பாண மாநகரசபை சரியான ஒரு திட்டமிடலோடு தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியோடு யாழ்ப்பாண கோட்டையைக்கூட தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஒரு சுற்றுலா மையமாக மாற்றலாம்.jaffna exhib 291216 seithy 4 எமது தொல்லியல் மரபுரிமை அடையாளங்களை நாமும் பாதுகாக்கலாம் (நேர்காணல்)-பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம்

சில அரசியல் சிக்கல் தடைகள் இருந்தாலும் அந்த முயற்சிகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புக்கள் உண்டு என்று தான் நான் கருதுகின்றேன். இப்படியான முயற்சிகளுக்கு வெளிநாட்டிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் உதவலாம்.

அந்த உதவிகள் வந்து அரசிற்குத் தெரியக்கூடிய வகையில் ஒரு பல்கலைக்கழகத்தின் ஊடாகஇ அரசாங்க அதிபர் ஊடாக பிரதேச செயலாளர் ஊடாக, பொது அமைப்பின் ஊடாக அனுமதி பெற்று செய்வதில் தடைகள் இல்லை என்பது எனது கருத்தாகும்.