தமிழர்களின் எல்லைக் கிராமங்களைப் பாதுகாக்க நாம் எந்த எல்லைக்கும் போகத் தயார்-ரவிகரன்

May be an image of 10 people, people standing, tree and outdoors

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசச்செயலாளர் பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான கருநாட்டுக்கேணியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்களக்குடியேற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கு முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

குறிப்பாக கொக்கிளாய் , கருநாட்டுக்கேணிப் பகுதியில் பொலிஸ் நிலையத்தைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய காணிகளே, இவ்வாறு அபகரிக்கப்பட்டு 180சிங்களக்குடும்பங்களை குடியேற்றம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் கீர்த்தி தென்னக்கோனின் வழிகாட்டலில், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினாலேயே இந்த சிங்கள குடியேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் அவ்வாறு சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை பார்வையிடுவதற்கு, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் 03.04.2023 இன்று கருநாட்டுக்கேணிப் பகுதிக்கு வருகைதந்திருந்தனர்.

இந் நிலையில் குறித்த ஆக்கிரமிப்புச் செயற்பாட்டிற்கு முன்னாள் வடமாகாணசபை துரைராசா ரவிகரன் மற்றும், காணிகளுக்குரிய தமிழ் மக்கள் ஆகியோர் இணைந்து தமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

கடந்த 1973, 1979ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமக்கு உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்ட இக் காணிகளில் தாம் குடியிருந்ததுடன், பயிர்ச்செய்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாகவும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

தமது பூர்வீகமான இக்காணிகளில் சிங்களக்குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு தாம் ஒருபோது இடமளிக்கமுடியாதெனவும் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

May be an image of 8 people, people standing, outdoors and tree

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களான கெக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நீர்ப்பாசன வயல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயா பகுதி சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களுக்குச்சொந்தமான மானாவாரி விவசாய நிலங்கள் பலவும் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழலில் தற்போது தமிழ் மக்களின் குடியிருப்புக் காணிகளையும் அபகரிப்புச்செய்து அங்கு சிங்களக்குடியேற்றங்களை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறான நடவடிக்கை தமிழ் மக்களை மேலும் அதிர்ப்திக்குள்ளாக்குவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆக்கிரமிப்பு முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதித் தமிழ் மக்களும், ரவிகரனும் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத்  தெரிவிக்கையில்,

May be an image of 1 person, smoking and sky

“முல்லைத்தீவு மாவட்டத்தின் பூர்வீக எல்லைக் கிராமமான கருநாட்டுக்கேணி தமிழ் மக்களின் குடியிருப்புக்காணிகளை ஆக்கிரமிப்புச் செய்து அங்கு சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளும் முயற்சிகள் தற்போது முனைப்புப் பெற்றுள்ளன.

குறிப்பாக கருநாட்டுக்கேணிப் பகுதியிலுள்ள பொலிஸ் நிலயத்தைச் சூழவுள்ள, தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை அபகரித்து அங்கு 180சிங்களக் குடும்பங்களை குடியேற்றுவதற்கான முயற்சிகள் இங்கு இடம்பெறுவதாக அறிகின்றோம்.

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளரான கீர்த்தி தென்னக்கோன் என்னும் நபருடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையே இந்த சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று அறியக்கூடியதாகவுள்ளது.

இந்தப் பகுதிகளிலுள்ள காணிகள் அனைத்திலும் எமது தமிழ்மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்தனர். இந்நிலையில் கடந்த 1973மற்றும், 1979ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட காணி உத்தரவுப் பத்திரங்கள் அவர்களுடைய கைகளிலே இருக்கின்றன.

இந்த கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி எனப்படுகின்ற இந்த எல்லைக் கிராமங்கள், பூர்வீக பழந்தமிழ் கிராமங்களாகும்.

இங்கு வாழ்ந்த மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு இந்தப் பகுதிகளிலிருந்து சிங்கள இனவெறி இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டனர்.

அவ்வாறு வெளியேற்றப்பட்டபின்னர் இங்குள்ள தமிழ் மக்கள் நெற்பயிற்செய்கைக்காக பயன்படுத்திய நீர்ப்பாசனக்குளங்கள் அவற்றின் கீழான வயல் நிலங்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களமக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந் நிலையில் தமிழ் மக்கள் 1984ஆம் ஆண்டுக்குமுன்னர் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்திய உந்திராயன் குளம், மறிச்சுக்கட்டிக்குளம், ஆமையன்குளம் ஆகிய குளங்களையும் அவற்றின் கீழான வயல் நிலங்களையும் தற்போது சிங்களவர்களே பயன்படுத்தி வருகின்றார்கள்.

இதுதவிர தமிழ் மக்களுடைய மானாவாரி விவசாய நிலங்கள் பலவும் தற்போது சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவருகின்றது.

அத்தோடு கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி தமிழ்மக்கள் தமது மானாவாரி விவசாய நிலங்களில் பயிற்செய்கை நடவடிக்கை செய்யும்போது மகாவலி அபிவிருத்தி அதிகிரசபை, வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்களால் இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. சிங்கள மக்களாலும் கூட இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றது.

எமது எல்லைக்கிராமங்களிலுள்ள தமிழ் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும்பான்மையினத்தவர்களால் தாக்கப்படுவதும், தமிழர்ளுடைய கால்நடைகள் திருடப்படுகின்ற சம்பவங்கள் கூட ஒருபுறம் இடம்பெறுகின்றன.

இவ்வாறாக எல்லைக்கிராமங்களிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் பலவித அழுத்தங்களுக்கு மத்தியிலேயே வாழ்கின்றனர்.

இவ்வாறான சூழலில் தற்போது தமிழ் மக்களின் குடியிருப்புக்காணிகளில் கூட சிங்களவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முனைப்புப் பெற ஆரம்பித்துள்ளன.

இவ்வாறான ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளின் ஊடாக, இங்கு வாழும் ஆதிக்குடிகளான தமிழ் மக்களை முற்றுமுழுதாக அப்புறப்படுத்திவிட்டு, தமிழர்களின் எல்லைக் கிராமங்களில் சிங்களவர்களை குடியேற்றவேண்டும் என்ற நோக்குடனேயே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த ஆக்கிரமிப்பு முயற்சிக்கு ஒருபோதும் இடமளிக்கமுடியாது. எமது தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களை பாதுகாப்பதற்கு நாம் எந்த எல்லைக்கும் போகத் தயாராக உள்ளோம் – என்றார்.

Leave a Reply