“பொருளாதார வீழ்ச்சிக்கு யுத்தம் காரணமல்ல” : ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கான உண்மையான காரணம் யுத்தம் இல்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை பின்பற்றிய கொள்கையும் பொருளாதார மோசடிகளும் ஊழல்களும் நாடு இந்த நிலைக்கு தள்ளப்பட காரணமாக அமைந்தன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்களின் பின்னர் நாடு வங்குரோத்து அடைந்தது. உண்மையான காரணம் யுத்தமல்ல. அவ்வப்போது பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு காரணங்களை கூற முயன்றனர்.
சிலவேளை யுத்தத்தையும் சிலவேளை இயற்கை அனர்த்தங்களையும் தொற்றுநோய்களையும் காரணங்காட்டினார்கள்.

வீழ்ச்சிகளுக்கு காரணம் தேடினார்கள். ஆனால் எந்த நிலைமைக்கும் தாக்குப்பிடிக்கக் கூடிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
கடந்த காலத்தில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் யுத்தம் வெடிக்கும் நிலை ஏற்பட்ட போது நாடு வீழ்ச்சியடையும் என்று கருதினார்கள்.

மத்திய கிழக்கில் யுத்த நிலை ஏற்பட்ட போது நாடு விழும் என்று நினைத்தார்கள். அமெரிக்கா வரிவிதித்த போது நாடு வீழ்ச்சியடையும் என்றார்கள். டித்வா சூறாவளி ஏற்பட்ட போது நாடு சரிவடையும் என்று கருதினார்கள். அவ்வாறான எந்தவொரு நிலைமையிலும் வீழ்ச்சியடையாத பொருளாதாரத்தை உருவாக்கும் எதிர்பார்ப்புடன் நாம் பணியாற்றுகிறோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.