மணிப்பூரில் ஆல் ட்ரைபல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் (அனைத்து பழங்குடியினர் மாணவர் சங்கம்) நடத்திய பொது பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து, வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டவுடன் சுடும் உத்தரவை நிர்வாகம் பிறப்பித்துள்ளது.
மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அண்டை மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து ஆகியவை மணிப்பூரில் வசிக்கும் தங்கள் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் மேதே சமூகத்தினரை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில், 10 மலைப் பிரதேச மாவட்டங்களில் புதன்கிழமை நடந்த ‘பழங்குடியினர் ஒற்றுமைப் பேரணி’யில் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் பரவியதால், அண்டை மாவட்டங்களில் பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேதே சமுதாயம் மற்றும் பழங்குடியின மக்களுக்கிடையே பல இடங்களில் ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது.
மாநிலம் முழுவதும் ஏராளமான கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டன.
கலவரத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு வன்முறையில் ஈடுபடுவகளை கண்டதும் சுட உத்தரவிட்டிருந்தது. இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட 9 ஆயிரம் பேர் இராணுவம் மற்றும் துணை இராணுவப்படையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இறந்தவர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.