வவுனியாவடக்கு பிரதேசசெயலாளர் பிரிவில், பட்டிக்குடியிருப்பு கிராமஅலுவலர் பிரிவிற்குட்பட்ட தமிழ்மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் ஒன்றான விண்ணாங்கம்பிட்டிக் கிராமத்தை மீளக்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் உருக்கமாக வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளனர்.
அப்பகுதி மக்களின் முறையீட்டிற்கு அமைவாக கடந்த 11.10.2026 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த விண்ணாங்கம்பிட்டி பகுதிக்கு நேரில்சென்று நிலைமைகளை ஆராய்ந்தார். இதன்போதே அப்குதிமக்கள் தமது கிராமத்தை மீளக்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தோடு தமது மீள்குடியேற்றத்திற்குத் தடையாக வனவளத்திணைக்களம் செயற்பட்டுவருவதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் அப்பகுதி மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் குறித்த விண்ணாங்கம்பிட்டி கிராமத்தினை மீள்குடியேற்றுவதுதொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியாவடக்கு பிரதேசசெயலாளர் பிரிவில், பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட விண்ணாங்கப்பிட்டி கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்ததாக விண்ணாங்கம்பிட்டி கிராமமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்தனர்.
குறிப்பாக 1984ஆம் ஆண்டில் அயற் கிராமமான ஒதியமலையில் 32 தமிழ்மக்கள் படுகொலைசெய்யப்பட்டமை மற்றும் பட்டிக்குடியிருப்பில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவங்களையடுத்தே விண்ணாங்கம்பிட்டிக் கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் குடும்பங்கள் இடம்பெயரவேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததாகவும் அப்பகுதி மக்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்ப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் குறித்த விண்ணாங்கம்பிட்டி கிராமம் மீளக்குடியமர்த்தப்படாததால், அப்பகுதிக்குரிய மக்கள் தற்போது அயற்கிராமங்களில் உறவினர்களது வீடுகளிலும், வாடகைக்கும் தங்கி வாழ்வதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.
எனவே தமது பூர்வீக வாழ்விடமான விண்ணாங்கம்பிட்டிக் கிராமத்தினை மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கோரிக்கையொன்றையும் முன்வைத்தனர்.
அந்தவகையில் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளையும், குறைபாடுகளையும் கேட்டறிந்துகொண்டதுடன், அந்தமக்களின் பூர்வீக வாழ்விடக்காணிகளையும் நாடாளுமன்றஉறுப்பினர் துரைராசா ரவிகரன் இதன்போது பார்வையிட்டார்.
அத்தோடு வனவளத்திணைக்களம் விண்ணாங்கம்பிட்டி கிராம மக்களுடைய பூர்வீக வாழ்விடக் காணிகளை அபகரித்துவைத்துக்கொண்டு, அவர்களை அங்கு மீள்குடியேறவிடாமல் தடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.
மேலும் இதுவரை மீளக்குடியமர்த்தப்படாத விண்ணாங்கம்பிட்டி கிராமத்தின் மீள்குடியேற்றம் தொடர்பில் வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் மற்றும் வவுனியா மாவட்டசெயலாளர்என உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன், பாராளுமன்றிலும் இதுதொடர்பில் வலியுறுத்தப்படுமெனவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீள்குடியமர்த்துவது தொடர்பில் தம்மால் தொடர்ச்சியாக கவனஞ்செலுத்தப்படுமெனவுந் தெரிவித்தார்.



