வவுனியா நாம்பன்குளத்தில் வனவளத் திணைக்களத்தினர் மக்களின் காணிகளுக்குள் எல்லையிட முற்பட்டமையினால் மக்கள் ஒன்றுதிரண்டு இன்று அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
வவுனியா நாம்பன்குளத்தில் 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் தமது பயன்பாட்டுக்காக வெட்டிய காணிகளை யுத்தம் காரணமாக கைவிட்டு சென்றுள்ளனர்.
மீண்டும் 2013 ஆம் ஆண்டு தமது காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் தருமாறு பிரதேச செயலகத்தில் விண்ணப்பித்திருந்த நிலையில் இதுவரை அவர்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் குறித்த காணி மேட்டுப்பகுதியாக காணப்பட்டமையினால் கிரவல் அகழ்வதற்கு சிலரால் அனுமதி கோரப்பட்டு பிரதேச செயலாளரினால் அரச காணி என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது வனவளத்திணைக்களம் குறித்த காணி தமக்கு உரியது எனவும் அதற்கு எல்லையிடுவதற்காக குழிகளை தோண்டி எல்லைக்கற்களையும் இன்று குறித்த பகுதிக்கு கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் சிலர் ஒன்றுதிரண்டு எல்லை போடுவதற்கு தடுத்திருந்தனர். இதனால் வனவளத்திணைக்களத்தின் அதிகாரி மற்றும் கூலியாட்கள் அவ் வேலையை கைவிட்ட நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளருடன் மக்களுக்கான கூட்டம் ஒழுங்கமைத்து நடத்திய பின்னர் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என வனவளத் திணைக்களத்தினர் தெரிவித்து அங்கிருந்த சென்றிருந்தனர்.