யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்குமாகிய விசேட கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (12) யாழ் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முன்னிலைபடுத்திய போராட்டம் மற்றும் எதிர்காலத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என்று கோரிக்கை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திடம் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினை என்பது தனியே எரிவாயு அடுப்பு, மின்சாரம் என்பனவற்றுக்குள் எமது கோரிக்கைகள் உள்ளடங்கவில்லை. மாறாக பயங்கரவாத தடைச் சட்டம் என்பதும் எமது தமிழ்மக்களின் பிரச்சினைகளில் ஒரு பகுதியாகவே இருக்கின்றது.
வசந்த முதலிகே ஆறுமாத காலம் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் தான் இது குறித்து ஆழமாக நீங்கள் பார்க்கின்றீர்கள். ஆனால் எமது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் காணாமலாக்கப்பட்டும் சுட்டுபடுகொலையும் செய்யபட்டுள்ளார்கள். ஆக போராட்டம் என்பது எமக்கு புதிதல்ல குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் பயங்கரவாத தடைச் சட்டம் சிங்களவருக்கும் எதிராக திசைமாறும் போது சிங்களவர்கள் புரிவார்கள் என்று அன்று கூறியது இன்று நிச்சயமாகியுள்ளது.
ஆக எமது பிரச்சினைகளை தெற்கிற்கு கொண்டு சென்று இனி போராட்டங்களின் போது இதனை முன்னிலைபடுத்துகின்ற பொழுது எமது நிலைப்பாடுகள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடனான உறவுநிலைகளை ஆரோக்கியமாக்கும் என தெரிவித்திருந்தோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர ்குறிப்பிட்டனர்.
இந்நிலையில் எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் எமது தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து பல்கலைக்கழக மாணவர்களிடையே தெளிவுபடுத்தல்களை மேற்கொள்வதற்கும் சிங்கள நகரங்களில் சிங்கள மக்கள் மத்தியில் கவனயீர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எதிர்காலத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்து புரிதலை ஏற்படுத்த வேண்டும் எனவும் இதே நிலையில் இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு யுத்தமே பொருளாதார நெருக்கடிக்கு காரணமா எனவினவிய பொழுது அது பிரதான காரணியாக தாம் ஆமோதிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் கருத்து தெரிவித்த எமது பிரதிநிதிகள் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடையை தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து புரிதலை ஏற்படுத்தும் செயற்திட்டத்தை வரவேற்கின்றோம். இதே நேரம் முறைமையான கலந்துரையாடல் ஒன்றை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமாக எடுத்து அதன் பின்னர் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் அபிலாசைகளை அடிப்படை பிரச்சிகனைகளுக்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குரல் கொடுக்கின்ற பொழுது அது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று எனவும் மாணவர்களுக்கூடாகவே நாட்டின் பிரச்சினைகளை தீர்க்கமுடியும் அந்த அடிப்படையில் சிங்கள மாணவர்களின் தெளிவுபடுத்தலுக்காக பின்வரும் விடயமும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு கையளிக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தமது உரிமைக்காக கடந்த 70 வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடினர். தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தினை பயங்கரவாதமாக தெற்கில் சிங்கள மக்களிடத்திலும், சர்வதேசத்தின் மத்தியிலும் சித்தரித்த சிறிலங்கா அரசானது இலட்சக்கணக்கான தமிழ் மக்களை படுகொலை செய்து, கொடுங்கோல் அடக்குமுறை இராணுவத்தினால் தமிழர் தாயகம் எங்கும் ஆக்கிரமித்து உள்ளனர்.
இலங்கைத் தீவு பிரித்தானியாவின் காலனித்துவத்திலிருந்து விடுதலை அடைந்த காலம் முதல், ஈழத் தமிழர்களாகிய நாங்கள் எமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி சாத்வீக முறை போராட்டங்களை மேற்கொண்டு வந்தோம்.
இப்போராட்டங்கள் வன்முறையினூடாக அடக்கப்பட்டதினால், ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டோம். தமிழ் மக்களின் தேசிய ஆயுதப் போராட்டம் சிறிலங்கா பேரினவாத அரசினால் கொடுங்கரம் கொண்டு மிகப்பெரும் மனிதப் பேரழிப்பினூடாக முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது.
இந்த இறுதியுத்தத்தின் போது இறுதி ஆறு மாதங்களில் மட்டும் எழுபதினாயிரத்துக்கு (70,000) மேற்பட்ட எமது உறவுகள் கொல்லப்பட்டதை ஐ.நா. செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக்குழுவின் 2012 கார்த்திகை மாத அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கைக்குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். 2017 ஆம் ஆண்டு மாசி மாதம் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசக் கருத்திட்டமானது (ITJP), தமிழ்ப் பெண்கள் “பாலியல் அடிமைகளாக” கையாளப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட “பாலியல் வன்முறை முகாங்கள்” பற்றிய விபரங்களை ஐ.நா விடம் கையளித்தது.
ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் 2013 சித்திரை மாதத்திற்குரிய அறிக்கைக்கு அமைவாக, தமிழர் தாயகத்தில் 90,000 க்கும் மேற்பட்ட யுத்தமூல விதவைகள் உள்ளனர். இவ்வாறு நீண்ட நெடிய காலமாக இனவழிப்புக்கு உள்ளாகிக்கொண்டிருக்கும் எமதினதிற்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது.
யுத்தம் நிறைவடைந்து கடந்த பதினொரு ஆண்டுகளில் வடக்கு-கிழக்கை இராணுவ மயமாக்கிவரும் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் கலாசார, பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன் வடக்கு-கிழக்கு பூர்வீக குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி, தமிழ்த் தேசியத்தைச் சிதைவடையச் செய்து, அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காக பல வகையிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இதன் அடிப்படையில் தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், நிலவள திணைக்களம், பௌத்த சாசன அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக பௌத்த மயமாக்கல், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை சிறிலங்கா அரசாங்கமானது முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருகிறது.
வடக்கு-கிழக்கில் உள்ள சுமார் 200 ற்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த தமிழ் ஆலயங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறன. அத்துடன் தமிழர் தாயகம் எங்கிலும் பெளத்த விகாரைகள் அமைக்கப்பட்டும், தொடர்ந்தும் அமைக்கப்படுவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
இன்று பொருளாதார பிரச்சனையாலும், சிறிலங்கா அரசின் அடக்குமுறையாலும் பாதிக்கப்பட்டுள்ள தென்பகுதி சிங்கள தரப்பினர், தற்போது வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அணுகத்தொடங்கி உள்ளார். அவ்வாறு அணுகும் எந்த தரப்பினரும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையின் அடிப்படைகளை புரிந்துகொள்ளவதுடன் பின்வரும் விடயங்களில் தமது உறுதியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும்.
- வடக்கு கிழக்கை தாயகமாக கொண்ட தமிழ் மக்கள் தனித்துவமான மொழி, மதம், கலாச்சார அடையாளங்களை கொண்ட தனித்துவமான தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- ஒன்றிணைத்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய மரபுவழி தாயகம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- தமிழினம் தன்னாட்சிக்கு உரித்துடையவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- தேசிய இனத்துக்குரிய சுயநிர்ணயம், தமிழினமும் உரித்துடையது என்பதை ஏற்றுக்கொள்வதுடன், அதன்வழி தமது அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் உரிமையும் அவர்களுக்குண்டு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- தமிழினம் தமது அரசியல் தலைவிதியை தீர்மானிக்க, சர்வதேசத்தினால் நடாத்தி கண்காணிக்கப்படும் சர்வஜன வாக்கெடுப்பினுடாக சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- தமிழினத்தின் மீது காலகாலமாக நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு, இனப்டுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி பொறிமுறையினுடாக நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- தமிழர் தாயகத்தில் நிலைகொண்டுள்ள சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் உடனடியாக வெளியேற்றப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழரின் நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- சிறிலங்கா அரசியல் அமைப்பின் 6ம் திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசையை வெளிப்படுத்தும் அரசியல் வெளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு, நீண்டகாலம் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுவிக்கப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேற்படி விடையங்கள் தீர்க்கமான வெளிப்படுத்தலை வெளியிடும் இடத்தேதான் இனப்பிரச்சனைக்கு நிரந்திர தீர்வையும் அதன்வழி பொருளாதார பிரச்சனைக்கு ஓர் தீர்வையும் எட்ட முடியும்.
இதன் பொழுது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே,யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார், யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் ஜெல்சின் , திறந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் றிபாத், தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் திலான், ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர்அசான் , ஜெயவர்த்தனபுர, கொழும்பு, இணைப்பாளர் பிரசாந், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.