மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் குடும்பத்தினருக்கு அரச மற்றும் எதிர் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதன்படி, ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவு, தமிழ்த் தேசிய இன விடுதலை வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
சிவாஜிலிங்கத்தின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் தமிழ்த் தேசிய அரசியலில் உறுதியாகச் செயற்பட்ட அவர், 2013ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் தனது பதவிப் பிரமாணத்தை முள்ளிவாய்க்கால் மண்ணில் மேற்கொண்டமையையும் சிறீதரன் நினைவுகூர்ந்துள்ளார்.
அத்துடன், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான வேலுப்பிள்ளை மற்றும் பார்வதி அம்மாள் ஆகியோரின் இறுதிக்கிரியைகளை நெருக்கடியான காலகட்டத்தில் முன்னின்று நடத்திய அவரது துணிச்சலையும் அவர் பாராட்டியுள்ளார்.
தமிழர்களின் அரசியல் உரிமைகள், நீதி மற்றும் தேசிய அபிலாசைகளுக்காக இறுதிவரை குரல் கொடுத்த சிவாஜிலிங்கத்தின் மறைவு அவரது வாழ்வைப் பூர்த்தி செய்தாலும், அவர் விதைத்த இலட்சியங்கள் தொடர வேண்டும் என்றும் சிறீதரன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், தமது கொள்கைகளுக்காகவும் இறுதிவரை சமரசமின்றிப் போராடிய சிரேஷ்ட அரசியல்வாதியான வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
‘அரசியல் ரீதியாக எமக்கிடையே வெவ்வேறு நிலைப்பாடுகளும் மாறுபட்ட கருத்துக்களும் இருந்தபோதிலும், தனிப்பட்ட ரீதியில் அவருடன் நான் கொண்டிருந்த நட்பும் புரிந்துணர்வும் மிகவும் ஆழமானது.
அண்மையில் அவரை நேரில் சந்தித்து உரையாடிய தருணங்கள் இன்றும் எனது நினைவில் பசுமையாக உள்ளன. அந்தச் சந்திப்பின் போதும், வழமை போலவே மிகவும் உற்சாகத்துடனும், தமிழ் மக்களின் எதிர்காலம் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் குறித்த ஆழ்ந்த சிந்தனையுடனும் அவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
தாம் கொண்ட கொள்கையில் எவ்விதத் தளர்வுமின்றி, துணிச்சலுடன் குரல் கொடுக்கும் அவரது பண்பு என்றும் போற்றுதற்குரியது. அன்னாரது அரசியல் பயணம் மிகவும் நீண்டதும் போராட்டங்கள் நிறைந்ததுமாகும்” என்று கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.
அதேநேரம், உடல் நலத்துடன் மீண்டெழுவார் என்று தாம் கொண்டிருந்த நம்பிக்கையை, எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவுச் செய்தி உடைத்துவிட்டதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“எண்ணிய இலக்கு ஒன்றாக இருந்தபோதிலும், அதனை அடைவதற்கான பயணத்தின் வழிமுறைகளும் பொறிமுறைகளும் எம்மை இருவேறு பாதைகளில் பயணிக்கச் செய்தன. ஆயினும், அரசியல் களத்தில் நண்பர் சிவாஜிலிங்கத்துடனான உறவு இறுதிவரை நீடித்தது.
அவர் நேசித்த தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோவுடன் சகோதர இயக்கம் என்ற வகையில் நானும் உறவில் இருந்தேன். போராட்டக் காலங்களிலும், உள்ளக ஆபத்துகள் ஏற்பட்ட வேளைகளிலும், சக இயக்கம் நெருக்கடிகளைச் சந்தித்தபோது அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி உறுதுணையாக இருந்துள்ளேன். அந்தக் காலப்பகுதிகளில் நண்பர் சிவாஜிலிங்கமும் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்” என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மலையகப் பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ஜீவன் தொண்டமான் மற்றும் பெருந்தோட்டத்துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் போன்றோம் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.



