ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் தாக்குதல் விமானங்களை நகர்த்தும் அமெரிக்கா

காலாவதியாகும் ஏ-10 ரக தாக்குதல் விமானங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு நகர்த்தியுள்ள அமெரிக்கா அங்குள்ள மிக நவீன தாக்குதல் விமானங்களை ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு நகர்த்த திட்டமிட்டுள்ளது.

உலகில் படையினரின் பரம்பல் என்பது தொடர்ந்து மாறக்கூடியது. அமெரிக்க மக்களினதும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சர் முடிவெடுப்பார் என அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்ரகனின் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் பற்றிக் ரெய்டர் தெரிவித்துள்ளார்.

தாய்வான் பிரச்சனை தொடர்பில் சீனாவுடனான போருக்கு தன்னை தயார் படுத்துவதற்காக அமெரிக்கா ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தனது படை பலத்தை அதிகரித்து வருகின்றது. அதேசமயம், ரஸ்யாவுடனான மோதலுக்கு ஏதுவாக ஐரோப்பாவிலும் அமெரிக்கா தனது பலத்தை அதிகரித்து வருகின்றது.

உலகில் மாற்றம் நிகழ்ந்து வருகின்றது. இந்த மாற்றத்தை நாம் கடந்த 100 வருடங்களில் காணவில்லை என சீனா அதிபர் பூட்டீனிடம் இந்த வாரம் தெரிவித்திருந்ததுடன், ரஸ்ய அதிபரும் அதனை ஏற்றுக்கொண்டிருந்தார்.

அதேசமயம், தென் சீன கடலில் உள்ள பரசால் தீவுகளுக்கு அண்மையாக உள்ள கடல் பகுதிக்குள் பலவந்தமாக நுளைந்த அமெரிக்காவின் தாக்குதல் கப்பலை தமது கடற்படை தடுத்துள்ளதாக சீனாவின் படைத்தரப்பு கடந்த வியாழ்க்கிழமை (23) தெரிவித்துள்ளது.