அமெரிக்க தூதரகம் பயண எச்சரிக்கை
இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
இலங்கையில் இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நாடு தழுவிய அளவில் “வாகனப் போராட்டம்” நடத்தப்படவுள்ளமை தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளுக்கான பயண எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண எச்சரிக்கையில் மேலும், அனைத்து வாகனங்களையும் வீதிகளில் நிறுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் சமூக ஊடகங்களில் இதற்கான அழைப்பு அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ளதுடன், சுமார் ஐந்து மணிநேரத்திற்கு போராட்டம் நடத்தி வாகன நெரிசலை ஏற்படுத்தும் வண்ணம் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது வீதிகளில் வாகன நெரிசலை ஏற்படுத்தும். அமைதியான ஆர்ப்பாட்டங்கள் கூட விரைவில் மோதலாகவும் வன்முறையாகவும் மாறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களைத் தவிர்ப்பதுடன், பெரிய கூட்டங்கள், போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் இடங்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் இலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.