எதிர்கால போருக்காக 886 பில்லியன் டொலர்களை ஒதுக்கிய அமெரிக்கா

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் மற்றும் எதிர்காலத்தில் சீனாவுடன் ஏற்படப்போகும் போர் ஆகியவற்றை எதிர்கொள்ளும் முகமாக அமெரிக்கா தனது பாதுகாப்பு செலவீனத்தை இந்த வருடம் 886 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிப்பில் படையினருக்கான ஊதியத்தையும் 5.2 விகிதம் அதிகரித்துள்ளதுடன், புதிய ஆயுதங்களின் உற்பத்திக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு நிதி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளது.

இது கடந்த ஆண்டை விட 28 பில்லியன் அதிகமாகும். புதிய ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை வேறு நிறுவனங்களிடம் இருந்து கொள்வனவு செய்யவும் முதல் தடவையாக அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.

உக்ரைன் சமரில் அமெரிக்கா தன்னிடம் உள்ள அதிகளவான ஆயுதங்களை வழங்கியுள்ளதாகவும், சீனாவுடன் மோதல் ஒன்று ஏற்பட்டால் அதிகளவு ஆயுதங்கள் தேவைப்படும் என்பதாலும் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

ஜவலின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், பல்குழல் உந்துகளை செலுத்திகள், ஸ்ரிங்கர் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் என 36 பில்லியன் டொலர்கள் பெறுமதியான தனது ஆயுதங்களை 2022 ஆம் ஆண்டு அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியிருந்தது.