ஏமனிலிருந்து ஹவுதி போராளிகள் ஏவிய ஏவுகணைகளை, அமெரிக்கா வழங்கிய ‘தாட்’ வான் தடுப்பு ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் நடுவானில் இடைமறித்து அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை ஏவுகணைகளை இஸ்ரேல் பயன்படுத்துவது இதுவே முதல் முறை.
இஸ்ரேல் மீது ஈரான் கடந்த அக்டோபர் 1-ம் திகதி பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இவற்றை இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ வான் தடுப்பு ஏவுகணைகளால் நடுவானில் இடைமறித்து அழிக்க முடியவில்லை. இதனால் இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா, ‘தாட்’ என்ற அதிநவீன வான் தடுப்பு ஏவுகணைகளை வழங்கியிருந்தது.
இந்நிலையில் ஏமன் நாட்டிலிருந்து ஹவுதிக்கள் இஸ்ரேல் மீது நேற்று முன்தினம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இவற்றை நடுவானில் இடைமறித்து அழிக்க தாட் ஏவுகணைகளை இஸ்ரேல் முதல் முறையாக பயன்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் வெற்றிபெற்றதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.