வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை: ஐ.நா சாசனத்திற்கு எதிரானது!

வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின்  நடவடிக்கை ஒருதலைபட்சமானது என்றும், ஐ.நா சாசனத்திற்கு எதிரானது என்றும் உலகின் பல நாடுகள்  குற்றம்சுமத்தியுள்ளன.

இந்த விவகாரத்தில்,  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெனிசுவேலாவின் சமீபத்திய நிகழ்வுகள் மிகுந்த கவலைக்குரியவை. அங்கு உருவாகி வரும் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த விவகாரத்தில் ஈரான் நேரடியாக அமெரிக்காவை குறி வைத்துப் பேசியுள்ளது, ஹெஸ்பொலா அமைப்பும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

“வெனிசுவேலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான தனது ஆதரவை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பராமரிக்க, பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான வழிமுறைகள் மூலம் பிரச்னைகளைத் தீர்க்க அனைத்து தரப்பினரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்”என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெனிசுவேலாவில் நீடித்து வரும் ‘நெருக்கடிக்கு’ முற்றுப்புள்ளி வைக்க, நிதானத்துடனும் பதற்றத்தைத் தணிக்கும் வகையிலும் செயல்படுமாறு பாகிஸ்தான் ஞாயிற்றுக்கிழமைவேண்டுகோள் விடுத்துள்ளது.

“வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் ராணுவத் தாக்குதலையும், அந்த நாட்டின் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அப்பட்டமாக மீறியுள்ள செயலையும் இரான் வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டிக்கிறது” என்று ஈரானின் வெளியுறவு அமைச்சகம் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

“மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் எந்த வடிவிலான வெளிநாட்டுத் தலையீட்டையும், பலத்தைப் பயன்படுத்துவதையோ அல்லது அச்சுறுத்துவதையோ” மலேசியா எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது.

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் சமூக வலைதளப் பதிவு ஒன்றில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குத் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

கத்தார் வெளியுறவு  அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெனிசுவேலாவின் தற்போதைய நிகழ்வுகள் குறித்து கத்தார் அரசு தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தச் சூழலில், நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், பதற்றங்களைக் குறைக்குமாறும், நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்க பொருத்தமான பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வெனிசுவேலாவின் சமீபத்திய நிகழ்வுகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வெனிசுவேலாவின் நிலைத்தன்மை, மக்களின் அமைதி மற்றும் நலனுக்கு துருக்கி முக்கியத்துவம் அளிக்கிறது. தற்போதைய சூழ்நிலை பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாத வகையில், அனைத்து தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று என்று துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

லெபனானைத் தளமாகக் கொண்ட ஹெஸ்பொலா அமைப்பு, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குக் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது.

“வெனிசுவேலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கும், அங்கு நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்கும்” ஆதரவளிப்பதாக ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.