பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்கும் அதேவேளை, தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை வாபஸ் பெறுமாறு அல்லது சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்க ஆகியோரிடம் வலியுறுத்துமாறுகோரி அமெரிக்காவில் இயங்கும் சர்வதேச மன்னிப்புச்சபை பொதுமக்களுக்கான பிரசாரமொன்றை ஆரம்பித்துள்ளது.
அப்பிரசாரத்துக்கான அடிப்படைக்காரணம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ள மன்னிப்புச்சபை கூறியிருப்பதாவது:
அமைதிப்போராட்டக்காரர்கள்மீது இலங்கை அரசாங்கம் அடக்குமுறைகளைப் பிரயோகித்துவருவதுடன் சுமார் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் விமர்சகர்களை அடக்குவதற்கும் தடுத்துவைப்பதற்கும் சித்திரவதைகளுக்கு உட்படுத்துவதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றது.
அவ்வாறிருக்கையில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தின் ஊடாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதன் மூலம் தமது மீறல்களை மறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிக்கின்றது.
பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப்போலவே பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமும் இலங்கை மக்களுக்கு மிகவும் ஆபத்தானதாகும். எனவே அச்சட்டமூலம் முழுமையாகக் கைவிடப்படவேண்டும் அல்லது சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படவேண்டும்.
இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்டிருக்கும் தாக்கத்துக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள். அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளும், குற்றங்களுக்குத் தண்டனை வழங்காத போக்கும் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதித்திருப்பதுடன் நாட்டின் வளங்களையும் வீணடித்துள்ளது.
அதனையடுத்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கை மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். அப்போராட்டங்கள் இராணுவ ஒடுக்குமுறை மற்றும் மிகமோசமான பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகம் ஆகியவற்றின் ஊடாக இலங்கை அதிகாரிகளால் அடக்கப்பட்டன.
அமைதியான முறையில் தமது கருத்துக்களையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துவதற்கான உரிமை நாட்டுமக்களுக்கு இருக்கும் அதேவேளை, அதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டிய கடப்பாடு அரசுக்கு உள்ளது.
எனவே அமைதிப்போராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவுக்குக்கொண்டுவருவதுடன் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான மக்களின் உரிமையைப் பாதுகாக்கவேண்டும் என்று மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.
அதுமாத்திரமன்றி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்க ஆகியோரிடம் இதனை வலியுறுத்துமாறு பொதுமக்களிடம் கோரியிருக்கும் மன்னிப்புச்சபை, அதன் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் கோரிக்கைப்படிவமொன்றையும் வெளியிட்டுள்ளது.