பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் – 6 பேர் கைது

களனி பகுதியில் நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த பல்கலைக்கழக மாணவர்களில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கெலும் முதன்நாயக்க மற்றும் மாணவர் செயற்பாட்டாளர் ஹர்ஷன திஸாநாயக்க ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி மாணவர்களினால் இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த பல்கலைக்கழக மாணவர் சங்க செயற்பாட்டாளர்கள் இருவரும் கடந்த ஜனவரி 2 ஆம் திகதி தலங்கம  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் திகதி அன்று கல்வி அமைச்சுக்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், அவர்களை விடுவிக்கக் கோரி களனி பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க காவல்துறையினர்  கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்திருந்தனர்.

நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த களனி பல்கலைக்கழக மாணவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை இன்றைய தினம் மஹர நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் விஜித நாணயக்கார, கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். அமைதியான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது அதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதற்கு எதிராக சுயாதீன ஆணைக்குழு என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.