ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவின் திறனுக்கு அருகில் கூட இல்லை: அதிபர் டிரம்ப் தெரிவிப்பு

காஸாவில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த தான் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக பேச்சுவார்த்தை நடத்தும் தரப்பினர் அது நடக்க பணியாற்ற வேண்டும்என, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இன்று ஐ.நாவில் அவர் ஆற்றிய உரையில்,

சமீபத்தில் பல அதிகாரமிக்க நாடுகள் பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. அந்த நடவடிக்கை ஹமாஸின் கொடுமைகளுக்கான வெகுமதியாக இருக்கும்.

அமைதியை விரும்புபவர்கள், ‘பணயைக்கைதிகளை இப்போதே விடுவிக்க வேண்டும்’ என்ற ஒற்றைச் செய்திக்கு பின்னால் இணைய வேண்டும் என்றார்.

ஐநாவையும் விமர்சித்தார். அவர் கூறுகையில், போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் “ஐநா எங்களுடன் இல்லை.’ “ஐநாவின் நோக்கம் என்ன?” என அவர் ஐநா பொதுச்சபையை நோக்கி கேள்வியெழுப்பினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபைக் கூட்டத்தொடருக்குக் கூடியிருந்த உலகத் தலைவர்களிடம், டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்துவது தொடர்பான தன் கூற்றுகளை மீண்டும் வலியுறுத்தினார்.

அவர் கூறுகையில், “எப்போதும் முடிவுறாது என கருதப்பட்ட ஏழு போர்களை வெறும் ஏழு மாதங்களில் நான் நிறுத்தியுள்ளேன். அதில் இரண்டு போர்கள் 31 ஆண்டுகளாக நடந்தன. ஒரு போர், 36 ஆண்டுகளாக நடந்தது. மற்றொரு போர் 28 ஆண்டுகளாக நடந்தது. அதில் தாய்லாந்து-கம்போடியா, கொசோவா-செர்பியா, காங்கோ-ருவாண்டா, பாகிஸ்தான் – இந்தியா, இஸ்ரேல்-இரான், எகிப்து-எத்தியோப்பியா மற்றும் அர்மேனியா-அஸர்பைஜான் ஆகியவை அடங்கும்.” என கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபை தங்கள் நாட்டின் திறனுக்கு அருகில் கூட இல்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.