இலங்கையில் சட்டங்கள் தயாரிக்கப்படும் முறைமை குறித்து ஐ.நா வதிவிடப் பிரதிநிதி கருத்து

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட வேளையில், நான் சுமார் 45 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கதைத்தேன். ஆனால் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக அவர்களில் பலர் வாக்களித்திருந்தார்கள். ஏனெனில் நிகழ்நிலைக் காப்புச் சட்ட வரைவை அவர்கள் வாசித்திருக்கவில்லை. ஒரு சட்டம் அல்லது கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும்போது அதனை முழுமையாக வாசிப்பது என்பது அடிப்படையான ஒரு விடயம். அதனைச் செய்யமுடியாவிடின், பாராளுமன்ற உறுப்பினராகக் கூடாது என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆன்ரே பிரான்சே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இலாப நோக்கற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை முடக்குவதற்கும், சிவில் சமூக இடைவெளியை சுருக்குவதற்கும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் தர நியமங்கள் அரசாங்கத்தினால் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புக்களை உள்ளடக்கிய இலங்கை சிவில் சமூக நிதி நடவடிக்கைப் பணிக்குழு வலையமைப்பு தொடர்ச்சியாகக் கரிசனை வெளியிட்டு வந்தது.

இந்நிலையில் இவ்வாண்டு நிதி நடவடிக்கைப் பணிக்குழுவின் இலங்கை தொடர்பான மதிப்பீடு நடைபெறவுள்ள நிலையில், இதன்போது பரிசீலிக்கப்படவேண்டிய விடயங்களை உள்ளடக்கி இலங்கை சிவில் சமூக நிதி நடவடிக்கைப் பணிக்குழு வலையமைப்பினால் தயாரிக்கப்பட்டு, நிதி நடவடிக்கை பணிக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிழல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வு  வியாழக்கிழமை (17) கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிவில் சமூகப் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பன்னாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரது பங்கேற்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஐ.நா வதிவிடப் பிரதிநிதி, நிதி நடவடிக்கைப் பணிக்குழுவுக்கு இவ்வாறானதொரு நிழல் அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தியதுடன், இந்நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அரச சார்பற்ற சிவில் சமூக அமைப்புக்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளபோதிலும், பல சந்தர்ப்பங்களில் அப்பங்களிப்பு குறைத்து மதிப்பிடப்படுவதாகக் கரிசனை வெளியிட்டார். அத்தோடு, ‘சிவில் சமூக அமைப்புக்களைத் தமது பங்காளிகளாகப் பேணுவது அரசுக்கும் நாட்டுக்கும் நேர்மறையான விளைவுகளையே பெற்றுத்தரும்.

ஒரு கண்காணிப்புக் கட்டமைப்பாக செயற்படக்கூடிய சிவில் சமூக அமைப்புக்கள் உலகளாவிய நிலைவரங்களுக்கும் உள்நாட்டு யதார்த்தத்துக்கும் இடையிலான பாலமாகத் தொழிற்படும். அதுமாத்திரமன்றி சிவில் சமூகத்தின் இடைவெளியை உறுதிப்படுத்துவது என்பது இரண்டாம் பட்சமான விடயமல்ல. மாறாக அமைதி, மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை நிலைநாட்டுவதற்கு அது இன்றியமையாததாகும். எனவே சிவில் சமூக அமைப்புக்கள் சுயாதீனமாக இயங்குவதற்கு இடமளிக்கப்படவேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேபோன்று நாட்டில் துடிப்புடன் இயங்கிவரும் சிவில் சமூக அமைப்புக்களுக்கு நிதி அளிப்பது என்பது நாட்டின் முன்னேற்றத்துக்கான முதலீடாகவே அமையும் எனச் சுட்டிக்காட்டிய ஐ.நா வதிவிடப் பிரதிநிதி, கடந்த ஆண்டு ‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தின் பின்னரான மீட்சி நடவடிக்கைகளில் சிவில் சமூக அமைப்புக்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நினைவுகூர்ந்தார்.
அதேவேளை பயங்கரவாத ஒழிப்பு எனக் கூறி ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரயோகிக்கப்பட்டமை நினைவுறுத்திய அவர், தற்போது அரசாங்கத்தினால் புதிதாக கொண்டுவரப்படும் சட்டங்கள் தொடர்பில் போதுமான கலந்தாலோசனைகள் முன்னெடுக்கப்படவில்லை எனக் கரிசனை வெளியிட்டார்.
நிகழ்நிலைக் காப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட வேளையில், நான் சுமார் 45 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கதைத்தேன். ஆனால் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக அவர்களில் பலர் வாக்களித்திருந்தார்கள். ஏனெனில் நிகழ்நிலைக் காப்புச் சட்ட வரைவை அவர்கள் வாசித்திருக்கவில்லை. ஒரு சட்டம் அல்லது கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும்போது அதனை முழுமையாக வாசிப்பது என்பது அடிப்படையான ஒரு விடயம். அதனைச் செய்யமுடியாவிடின், பாராளுமன்ற உறுப்பினராகக் கூடாது’ என்றும் அவர் தெரிவித்தார்.