இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் கடும் விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து கடும் விமர்சனம் காணப்படுவதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படாதமை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவல்துறையினரால் தடுத்துவைக்கப்படுபவர்கள் உயிரிழப்பதும் சட்டவிரோத படுகொலைகள் அதிகரித்துள்ளதும் குறித்தும் தெரிவித்துள்ள மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள் சுயாதீனமாக இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் 17 பக்க அறிக்கை பயங்கரவாத தடைச்சட்டத்தில் அவசர சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான அவசியம் குறித்து அதிகளவு வலியுறுத்தியுள்ளது.
காவல்துறையினரால் தடுத்துவைக்கப்படுபவர்கள் கொல்லப்படுவதும் சட்டவிரோத படுகொலைகளும் அதிகரித்துள்ளதாக மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசாங்கம் நிலைமாற்றுக்கால நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான முறையான நம்பகரமான புதிய திட்டமொன்றை உருவாக்கவில்லை என மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.