ஆபிரிக்க நாடான மாலியில் உள்ள தீவிரவாதிகளுடன் இணைந்து மாலி நாட்டு படையினரையும், அவர்களின் பயிற்சியாளர்களான ரஸ்ய படையினரை யும் உக்ரைன் படையினர் கொலை செய்ததற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை நட வடிக்கை எடுக்க வேண்டும் என ஆபிரிக்காவின் சாகேல் பிராந்திய நாடுகளின் கூட்டணியில் உள்ள மாலி, நெஜெர் மற்றும் பேர்கினோ பசோ ஆகிய நாடுகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த ஜுலை மாதம் இடம்பெற்ற இந்த தாக்குதலில் சில டசின் மாலி படையினரும், ரஸ்யாவின் பயிற்சியாளர்களும் கொல்லப்பட்டிருந்தனர். இந்த தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு உக்ரைன் படையினர் உதவிகளையும் ஆயுதங்களையும் வழங்கியதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக இந்த 3 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு கடந்த செவ்வாய்கிழமை(20) எழுதிய கடித்தில் தெரிவித்துள்ளனர்.
ஆபிரிக்க பிராந்தியத்தில் பணங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு உக்ரைன் முயன்று வருகின்றது. அனைத்துலக சட்டவிதிகளின் பிரகாரம் இது மிகவும் மோசமான நடவடிக்கை. இது ஆபிரிக்க பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது. வெளிநாடு ஒன்று எமது பிராந்தியத்தின் அமைதியை சீர்குலைக்க முற்படுவதை ஐ.நா தடுக்க வேண்டும் என்பதுடன் உக்ரைன் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அந்த கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை தமது புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டதாகவும், மேலும் தாக்குதல்கள் நடைபெறும் எனவும் உக்ரைன் அதிகாரிகள் இந்த தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்டிருந்தது, மேற்கு ஆபிரிக்க நாடுகளுக்கும் உக்ரைனுக்குமிடையிலான முறுகல் நிலையை அதிகரித்துள்ளது.