இங்கிலாந்து பிரதமர் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை

1 66 இங்கிலாந்து பிரதமர் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை

இங்கிலாந்தில் வெளிநாட்டிலிருந்து குடியேறுபவர்களுக்கு எதிராக, தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ரொபின்சன் தலைமையில் லண்டனில் ஒரு பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பேரணியின் போது, போராட்டக்காரர்களுக்கும், பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 26 பொலிஸார் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் அமைதியாகப் பேரணியை நடத்தாமல் வன்முறையில் ஈடுபட்டதாக அந்நாட்டுப்  காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், போராட்டக்காரர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால், இங்கிலாந்து சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு என்பதை மறந்துவிடக் கூடாது. நமது நாட்டின் கொடி நமது பன்முகத்தன்மையைக் குறிக்கிறது. அதை மதிக்காமல், இன ரீதியான மிரட்டலை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம். ஏனையவர்களை அச்சுறுத்துவதன் மூலமாகவோ அல்லது பணியில் இருக்கும் அதிகாரிகளைத் தாக்குவதன் மூலமாகவோ அவர்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இடம்பெற்ற போராட்டத்தால் புலம்பெயர்ந்தோர் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.