இறைமையுள்ள ஈழத்தமிழரை மோதலாளர்களாக மாற்றும் பிரித்தானியா தலைமையிலான அனுசரணைக்குழுவினர் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 359

புதிய தாராண்மைவாதமானது உலகளாவிய நிலையில் நாடுகளையே விழுங்கி வரும் அபாயகரமான இன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவிலேயே அரசாங்கம் செயலிழக்கும் அளவுக்கு பொருளாதார நெருக்கடி வேகம் பெற்றுள்ள நேரத்தில்  தன்னியக்க ‘ட்ரோன்களால்’ சுவர் எழுப்பி வானைப் பாதுகாக்கும் முயற்சியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அக்கறை செலுத்தும் காலத்தில்,  காசாவில் ட்ரம்பின் தலைமையில் ரோனி பிளேயர் நிர்வாகத்தில் உருவாக்கப்படும் ஆட்சி முறைமையே பலஸ்தீனத்தை நாடுகள் பல அங்கீகரித்தாலும் நடைமுறை தீர்வு எனப் பிரகடனம் செய்யப்படுவதை யாராலுமே தடுக்கவியலாத கோலத்தைக் காண்கின்றோம். இந்நேரத்தில் மகிந்த கோத்தபாய ஆட்சியாளர்கள் இனப்பிரச்சினை இல்லை அரசியல் அதிகாரப்பரவலாக்கல் தேவையில்லை சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த நாம் அவர்களுக்கே அரசியல் பணிகள் செய்வோம் எனக் கூறித் தொடங்கிய ஒரு கட்சி ஒரு சட்டம் என்ற நோக்கின் அநுர ஆட்சித் தொடர்ச்சியாகப் பிரித்தானியா தலைமை வகிக்கும் அனுசரணைக் குழுவிடம் இனப்பிரச்சினை என்பதை மோதல்கள் என மாற்றக் கேட்டதாகவும் அதனால் தாங்கள் அவ்வாறு மாற்றியுள்ளதாகவும் பிரித்தானியா விளக்கமளித்ததாக சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள்  03.10.2025ம் திகதிய வீரகேசரிப் பத்திரிகையின் முன்பக்கச் செய்தியில் தெரிவித்துள்ளார். கூடவே நீதி விசாரணை முறைமைகள் குறித்த முன்னைய கடும்போக்கான அணுகுமுறைகளை கூடச் சிறிலங்கா கேட்டதற்கு இணங்க மாற்றியுள்ளதாகவும் செய்தி தெரிவிக்கின்றது. அப்படியானால் இன்றைய பிரித்தானிய லேபராட்சியாளர்களும் அன்றைய லேபர் கட்சி 80 ஆண்டுகளுக்கு முன்னர் சோல்பரி அரசியலமைப்பயை 09.10. 1945 இல் வெளியிட்டு ஈழத்தமிழர்களின் இறைமையுடன் கூடிய தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை இழக்க வைத்தது  போல் செயற்படுகிறார்களா? என்ற நியாயமான கேள்வி எழுகிறது.
1948 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் எத்தகைய இனஅழிப்புக்குள் இனங்காணக்கூடிய அச்சத்துடன் வாழ் கின்றார்கள் என்பது உலகெங்கும் தெளிவாக்கப்பட்ட நிலையிலும் மீளவும் சிங்களவர்கள் சார்பாகவே செயற்படுவது என்பது 1945 இல் சிங்களவர்களிடம் ஈழத்தமிழரிறைமையை கையளித்த பிரித்தானியா 2025 இல் சிங்களவர்க்கு ஈழத்தமிழர் தேசிய நீக்கத்துக்கு உதவுகிறது என்ற கருத்தினையே இலக்கு வெளிப்படுத்த வைக்கிறது. இந்நிலையில் சிறுபான்மையினம் என்பதையும் இழந்து சிறுபான்மையினத்தவர்க்கான அனைத்துலகச் சட்டப்பாதுகாப்பையும் ஈழத்தமிழர்கள் இழக்கின்ற இன்றைய காலகட்டத்தில் எவ்வாறு ஈழத்தமிழர்கள் தங்கள் எதிர்காலத்தை அமைக்கப் போகிறார்கள் என்பதற்கு ஈழத் தமிழர்கள் ஒருமைப்பாட்டால் மட்டுமே அதனைச் செய்யலாம் என்பதே இலக்கின் இவ்வாரப்பதில்.
இவ்விடத்தில் ஈழத்தமிழர் இறைமை மீளுறுதியைச் சட்டத்தால் வெல்லுவோம் என்பவர்களுக்கும் அனைத்துலகத் தொடர்பால் வெல்வோம் என்பவர்களுக்கும் முதலில்  பிரித்தானிய காலனித்தவ காலத்து வரலாற்றை அவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்வது அவசியம். பிரித்தானிய காலனித்துவ கால வரலாற்றை இங்கு சுருக்கமாக மீள்வாசிப்பு செய்ய இலக்கு விரும்புகிறது. எண்பது ஆண்டுகளுக்கு முன்பு 26.07.1945 இல் பிரித்தானியாவில் லேபர் கட்சியின் பிரதமர் அட்லி பிரபு ஆட்சிப்பொறுப்பேற்றார். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதி பிரித்தானியாவில் லேபர் கட்சி பிரதமர் அட்லி பிரபு தலைமையில் சோல்பரி அரசியலமைப்பைச் சிங்களவர்களுக்குச் சாதகமாக வெளியிட்டது. இதன் மூலம் தாங்கள் 1796 இல் போர்த்துக்கேய ஒல்லாந்த காலனித்துவ ஆட்சியாளர்கள் வழி கைவசப்படுத்திய ஈழத்தமிழரின் யாழ்ப்பாண அரசினது இறைமையையும் தன்னாட்சியையும்,  1832 இல் நேரடியாகக் கைபபற்றிய வன்னியரசினது இறைமையையும் தன்னாட்சியையும்,  சிங்களப்பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமை கொண்ட சிலோன் என்னும் தாங்கள் தன்னிச்சையாக ஈழத்தமிழரின் விருப்புப் பெறப்படாது ஈழத்தமிழரின் இறைமையுள்ள அரசுக்களின் எல்லைகளைச் சிங்களவர்களின் எல்லைகளுடன் இணைத்து 1833இல் உருவாக்கிய அரசாங்கத்திற்குச் சுதந்திரத்தை வழங்க முற்பட்டதன் மூலம் ஈழத்தமிழரின் இறைமையையும் தன்னாட்சியையும் சிங்களவர்களிடம் கையளித்தனர் என்பது வரலாறு.
பிரித்தானிய காலனித்துவ அரசாங்கத்தின் 1931ம் ஆண்டின் டொனமூர் அரசியலமைப்பின் மூலம் இலங்கைத்தீவில் தனியான அரசுக்களுடன் வடக்கு கிழக்கில் யாழ்ப்பாண வன்னி அரசுக்களின் நிலப்பரப்பில் தமக்கான தனித்துவமான தேசஇனத்தன்மையுடன் வாழ்ந்து வந்த எண்ணிக்கையில் சிங்களவர்களை விட குறைவான மக்கள் தொகையைக் கொண்டிருந்த ஈழத்தமிழர்களுக்கும், அதனைக் கவனத்தில் எடுக்காது சிங்களவர்க்களுக்கும் பொதுவான சட்டசபையினை அமைத்து 18 வயதடைந்த எல்லோருக்கும் வாக்குரிமையெனத் தோற்றுவித்த பிரதிநிதித்துவ முறை மூலம் சிங்களப் பெரும்பான்மையினம் தமிழ்ச் சிறுபான்மையினம் என்ற இனத்துவ வடிவ ஆட்சி அமைப்பைத் தோற்றுவித்து ஈழத்தமிழர்களின் தேச இனத்தன்மையை இல்லாதொழித்தனர். இவற்றை எல்லாம் கவனத்திற்கு எடுத்து 03.11. 1945 இல் அக்கால ஈழத்தமிழர்களின் தலைவரான ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் காலனித்துவ நாடுகளின் செயலாளராக விளங்கிய ஜோர்ஜ் ஹென்றி ஹோலுக்கு சோல்பரி அரசியலமைப்பு ஈழத்தமிழர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாகக் கூறி அதனை ஏற்க இயலாமைக்கான காரணங்களை விளக்கி தெளிவான கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதற்கு முன்னரே 13.06.1945 இல் இலங்கையின் பிரித்தானிய ஆளுநராகிய சேர். எச் மூருக்கு ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் பிரித்தானிய காலனித்துவ நாடுகளுக்கான செயலாளர், இலங்கையின் அமைச்சரவையின் தலைவரான டி.எஸ். சேனநாயக்காவுக்கும் இலங்கைக்கான அரசியலமைப்புக் குறித்துப் பேசும் பொழுது சிங்கள பௌத்தரான அவர் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினால் அது சிங்கள பௌத்த பேரினவாத அரசை உருவாக்குமென்பதை விளக்கித் தமிழர்களின் பிரதிநிதியையும் இணைத்து வைத்துப் பேசும்படி அறிவுறுத்தியிருந்தார்.
இதனை ஆளுநர் சேர். எச் மூர் தந்தி மூலம் அக்கால காலனித்துவ நாடுகளின் செயலாளர் ஸ்டான்லி ஒலிவர் பிரெட்ரிக் ஜோர்ஜ்க்கு தெரிவித்திருந்தார். அத்துடன் பிரித்தானிய ஆளுநருக்கும் டி. எஸ. சேனநாயக்காவுக்கும் இடையில் இருந்த உறவுநிலையால் ஆளுநர் ஜி.ஜி. பொன்னம்பலத்தைச் சந்திக்க அனுமதிக்க வேண்டாம் என்றும் ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். இதனாலேயே ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் இலண்டனுக்கு நேரடியாகச் சென்ற போதிலும் கூட பிரித்தானிய காலனித்துவ நாடுகளுக்கான செயலாளர் அவரைச் சந்திக்க அனுமதிக்கவில்லை. ஆயினும் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் காலனித்துவ நாடுகளின் செயலாளராக இருந்த கிரிச் யோன்ஸ் ஆதரின் நிர்வாக அதிகாரியிடம் தனது கருத்துக்களை விளக்கிவிட்டு நாடு திரும்பியமை வரலாறாக உள்ளது.
1937ம் ஆண்டு முதல் 17.10. 1944 வரை இலங்கைக்கான பிரித்தானிய ஆளுநராக இருந்த கல்கெட் அன்ரூ அவர்கள் சிலனிஸாக விடயங்களை அணுகப் பழக்கும் நோக்கில் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களின் சட்டசபையில் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவ எண்ணிக்கை சிங்களவர்களின் எண்ணிக்கைக்கு சமமாக அமைக்கப்பட்டாலே சிங்கள பெரும்பான்மைப் பாராளுமன்றக் கொடுங்கோன்மை உருவாவதைத் தடுக்கலாம் என்பதனை எதிர்த்து வந்தார்.  இந்த ஆளுநர்  17.10. 1944 இல் இலங்கையிலிருந்து நீங்கி சேர் ஹென்றி மூர் புதிய ஆளுநராகப் பதவியேற்ற பின்னரே 29.10.1945 இல் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரசை நிறுவி 1939 அக்டோபர் முதலான சிறுபான்மையினத்தவரின் அரசியல் பிரதிநிதித்துவத்தை சரியான முறையில் அமைப்பதன் மூலம் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தனது சட்டரீதியான சிந்தனைகளை வளர்த்து, 50க்கு 50 என்கின்ற விகிதத்தில் பாராளுமன்றத்தில் சிங்கள மற்றும் சிறுபான்மையின பிரதிநிதித்துவத்தைப் பெற முயன்று வந்தார்.
இந்நேரத்தில் 1944 செப்டெம்பர் மாதம் 1ம் திகதியே தமிழகத்தின் தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த திருகோணமலை றோயல் நேவியில் மருத்துவராகப் பணியாற்றிய எஸ் பொன்னையா அவர்கள் பிரித்தானியக் காலனித்துவச் செயலாளருக்கு “தமிழ் இலங்கை” என இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களை அறிவிக்கும்படி அனுப்பியிருந்த மனுவானது ஈழத்தமிழர்களின் தாயக இறைமை தேசியத் தனித்துவம் தன்னாட்சி என்பன ஈழத்தமிழர்களின் பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கும் வளரச்சிகளுக்கும் மட்டுமல்ல இந்திய சிறிலங்கா இடையான நாடாக இருநாடுகளினதும் அனைத்துத் தொடர்பாடலுக்கும் முக்கியமானது என்பதையும் இதனை பிரித்தானியா செய்யாது விட்டால் தமிழர்கள் இனஅழிப்புக்கு பண்பாட்டு இனஅழிப்புக்கு இனத்துடைப்புக்கு உள்ளாவார்கள் என்பதையும் விளக்கியிருந்தது. இம்மனு குடிசார் அமைப்பு கோரிக்கையாக இருந்தும் இதனையும் பிரித்தானியா கவனத்தில் எடுக்கவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக 03.11.1945 இல் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் காலனித்துவ நாடுகளின் செயலாளர் ஹோல் அவர்களுக்கு அனுப்பிய மிக நீண்ட மனு சட்டரீதியாக இலங்கைத் தமிழர்களின் தேவைகளை வெளிப்படுத்திய மிகவும் அறிவார்ந்த மனு. இதனையும் பிரித்தானியா கவனத்தில் எடுக்கவில்லை. இறுதியாக  15.01. 1946 இல் லேபர் கட்சியின் பிரதமர் அட்லி அவர்களுக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் செயலாளர் எஸ். சிவசுப்பிரமணியம் அவர்கள்  அனுப்பிய மனுவில் லேபர் கட்சி உலகில் சிறுதேச இனங்களின் தன்னாட்சி உரிமைக்கு மதிப்பளித்து அவர் களுக்கான அரசியலமைப்புக்கள் அமைய உதவி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டி ஈழத்தமிழர்களும் சிறுதேச இனம் என்ற வகையில் அவர்களின் தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்த உதவுமாறு கேட்டிருந்தார்.
இவைகளை எல்லாம் கவனத்தில் எடுக்காது லேபர் கட்சி ஆட்சியில்தான் 04.02.1948இல் சிங்களப் பெரும்பான்மை பாராளுமன்ற ஒற்றையாட்சிக்குள் ஈழத்தமிழர்களின் இறைமையுடன் கூடிய தாயக தேசிய தன்னாட்சி உரிமைகள் ஒடுக்கப்பட்டு22.05. 1972 வரையான ஆட்சி முறைமைக்குள் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து பின்னர் அதனையும் மீறிய சிறிலங்காவின் செயலால் அரசற்ற தேசஇனமாக இன்று வரை இனஅழிப்பு வழியான இனங்காணக்கூடிய அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
எவ்வாறு பிரித்தானியாவின் ஈழத்தமிழர்கள் குறித்த அக்கறையற்ற போக்கு வரலாற்றில் அவர்களை இனஅழிப்பு அச்ச வாழ்வுக்கு உள்ளாக்கியுள்ளது என்பதனை பிரித்தானிய மக்களுக்கும் உலக மக்களுக்கும் தெளிவுபடுத்துவதை முதல் நோக்காக இனிவரும் மாதங்களில் முன்னெடுப்பது இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கான உலக மக்களின் கவனத்தை வேகப்படுத்தும் என்பதே இலக்கின் இவ்வாரக் கருத்தாக உள்ளது. இதனை செய்வதற்கு முயலுவோம் தொடர்ந்து எவ்வாறு சமகாலத்தில் அனைத்துலக நாடுகளை அந்த அந்த நாட்டின் மக்கள் துணையுடன் அணுகலாமெனச் சிந்திப்போம்.
ஆசிரியர்

Tamil News