அமெரிக்க சந்தைக்காக 30 முதல் 50 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை விற்பனை செய்வதற்கு வெனிசுலா அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தனது ‘Truth Social’ சமூக வலைத்தளப் பக்கத்தில் நேற்று (06) இரவு இட்ட பதிவொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலா இடைக்கால அரசாங்கத்தின் அதிகாரிகளால், ஏற்கனவே தடைகள் விதிக்கப்பட்ட கச்சா எண்ணெய் இவ்வாறு அமெரிக்காவிற்கு வழங்கப்படவுள்ளதாக டிரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை அமெரிக்காவே நிர்வகிக்கும் என்றும், வெனிசுலா மக்கள் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் அந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் கிரிஸ் ரைட்டிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கப்பல்களில் சேமிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் பீப்பாய்களை நேரடியாக அமெரிக்கத் துறைமுகங்களுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இது குறித்து வெளிநாட்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஒருவர், குறித்த கச்சா எண்ணெய் ஏற்கனவே பீப்பாய்களில் அடைக்கப்பட்டு, அவற்றில் பெரும்பாலானவை தற்போது கப்பல்களில் உள்ளதாகத் தெரிவித்தார். இவை அமெரிக்கக் கடற்பரப்பில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படவுள்ளன.
எவ்வாறாயினும், 30-50 மில்லியன் பீப்பாய் எண்ணெய் என்பது பெரிய அளவாகத் தோன்றினாலும், கடந்த மாதம் அமெரிக்கா நாளொன்றுக்கு 20 மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய் எண்ணெயைப் பயன்படுத்தியுள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. எனவே, இந்த எண்ணெய் வரவால் எரிபொருள் விலையில் ஏற்படும் தாக்கம் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்க எண்ணெய் விலை பீப்பாய்க்கு ஒரு டொலரால் (சுமார் 2%) குறைந்து, 56 டொலராகப் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெனிசுலா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் தற்போதைய மதிப்பு 55 டொலராகும். 50 மில்லியன் பீப்பாய்கள் விற்கப்பட்டால் 1.65 முதல் 2.75 பில்லியன் டொலர் வரை வருமானம் கிடைக்கக்கூடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இவ்வளவு பெரிய அளவிலான எண்ணெயை வழங்குவதன் மூலம் வெனிசுலாவின் சொந்த எண்ணெய் கையிருப்பு குறையும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.



