காசா பகுதியில் குண்டுவீச்சு நடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை (03) இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
2023 ஒக்டோபர் 7 அன்று தொடங்கிய சுமார் 2 வருடங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்கத் திட்டத்தில் பணயக்கைதிகள் மற்றும் வேறு சில நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டதை அடுத்து ட்ரம்ப் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பணயக்கைதிகளை விடுவித்து ஏனைய பாலஸ்தீனியர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்க ஹமாஸ் தயாராக இருப்பதாகவும், ஆனால் திட்டத்தின் ஏனைய அம்சங்களுக்காக பாலஸ்தீனியர்களிடையே மேலும் ஆலோசனைகளை கோருவதாகவும் கூறியது.
ஹமாஸ் அறிக்கையை வரவேற்ற ட்ரம்ப், “அவர்கள் ஒரு நீடித்த அமைதிக்கு தயாராக இருப்பதாக நான் நம்புகிறேன்” என்று கூறினார்.
அத்துடன், காசா மீதான குண்டுவீச்சை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும், அப்போதுதான் பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியேற்ற முடியும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், ஹமாஸின் பதிலைத் தொடர்ந்து இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ட்ரம்பின் காசா திட்டத்தின் முதல் கட்டத்தை “உடனடியாக செயல்படுத்த” இஸ்ரேல் தயாராகி வருவதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் சிறிது நேரத்திற்குப் பின்னர், இஸ்ரேலிய ஊடகங்கள், நாட்டின் அரசியல் பிரிவு காசாவில் தாக்குதல் நடவடிக்கைகளைக் குறைக்க இராணுவத்திற்கு அறிவுறுத்தியதாக செய்தி வெளியிட்டன. எவ்வாறெனினும், ஹமாஸின் அறிக்கையில், அவர்கள் ஆயுதங்களை களைவது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இது ட்ரம்பின் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு முக்கிய இஸ்ரேலிய கோரிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.