ஈரான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். தவறான தகவல்களைப் பரப்ப ஈரான் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிபருக்கான ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ பிரத்யேக விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போதுட்ரம்ப் இதனை தெரிவித்தார். ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்ட ஆர்வமாக இருப்பதாக டிரம்ப் கூறினார். இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் குறித்து, “நாங்கள் அவர்களுடன் பேசி வருகிறோம், ஆனால் அவர்கள் இன்னும் தயாராக இல்லை என்று நினைக்கிறேன், இருப்பினும் அவர்கள் மிகவும் நெருக்கமாகி வருகின்றனர்” என்றார் டிரம்ப்.
இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஞாயிற்றுக்கிழமை ஈரான் “ஒருபோதும் போர் நிறுத்தத்தை நாடவில்லை அல்லது பேச்சுவார்த்தைகளை நாடவில்லை” என்று கூறினார்.
ஈரானுக்கு எதிரான வெற்றியை அறிவிக்கத் தயாரா என்று டிரம்பிடம் கேட்டபோது, “அதைச் செய்ய எந்த காரணமும் இல்லை” என்றார். “நாங்கள் இப்போது அவர்களை விட்டுவிட்டால், அவர்கள் மீண்டும் எழுந்து நிற்க 10 ஆண்டுகள் ஆகும்” என்றும் அவர் கூறினார்.
மொஜ்தபா காமனெயிக்கு ஆதரவாக ஒரு சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பது போன்ற படங்கள், “தற்கொலைப் படகுகள்” பற்றிய கூற்றுகள் மற்றும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மீதான தாக்குதல் பற்றிய தகவல்கள் ஆகியவை இரானால் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்றும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இருப்பினும், இதற்கு அவர் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.



