உக்ரைன் அதிபருக்கு நிபந்தனை விதித்த ட்ரம்ப்!

ரஷ்யாவிடமிருந்து கிரிமியாவை திரும்பப் பெறுவது, நேட்டோவில் உறுப்பு நாடாவது போன்ற எண்ணங்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கைவிட்டுவிட்டால், போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்​பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் சமீபத்தில் சந்​தித்​துப் பேசினர். அப்​போது ரஷ்​யா – உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வது தொடர்​பாக விரி​வாக ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. தொடர்ந்து, டொனால்டு ட்ரம்​ப்பை, உக்​ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வாஷிங்​டனில் இன்று சந்​தித்​துப் பேசுகிறார். இந்தச் சந்திப்புக்கு முன்னதாக ‘கிரிமியா, நேட்டோவை மறந்துவிட்டால் போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியம்’ என்று ஜெலன்ஸ்கிக்கு ‘செக்’ வைத்துள்ளார் ட்ரம்ப்

1991-ல் சோவியத் யூனியன் உடைந்தபோது உருவான நாடுதான் உக்ரைன். இதில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்கள் அதிகமாக உள்ள கிரிமியா    ஒரு தீபகற்ப பகுதியானது. எல்லை ரீதியாக உக்ரைனுடன் இருந்தாலும், அங்கே ரஷ்யர்களே அதிகமாக இருந்தனர். அதனால் ரஷ்ய இனக் குழுக்களுக்கும், உக்ரைன் இனக் குழுக்களுக்கும் இடையே புகைச்சல் இருந்தது.

மேலும், ரஷ்ய ஆட்சியாளர்களும் கிரிமியா ரஷ்யாவுடைய பிராந்தியம் என்று தொடர்ச்சியாகக் கூறி அந்தப் புகைச்சலுக்கு வலு சேர்த்துக் கொண்டே இருந்தனர். இந்த நிலையில், ரஷ்யா கடந்த 2014-ம் ஆண்டு கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இது உக்ரைனுக்கு பேரிழப்பானது.

கிரிமியாவை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததன் மூலம், ரஷ்யா கருங்கடலில் தனது ராணுவ இருப்பை பலப்படுத்தியுள்ளது. அதேவேளையில் இயற்கை வளங்கள், ராணுவ முக்கியத்துவம், சுற்றுலா வருமானம் என மூன்று விஷயங்கள் உக்ரைனுக்கு பறிபோனது. அது மட்டுமல்லாது இன, கலாச்சார ரீதியாகவும் கிரிமியா உக்ரைன் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அதனாலேயே, “கிரிமியா எங்களின் பிராந்தியம். அதை மீட்டெடுக்க வேண்டும்,” என்று உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.