‘வெனிசுவேலா அதிபராக’ தன்னை அறிவித்துக்கொண்ட டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத் தளமான ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் தன்னை வெனிசுவேலாவின் ‘தற்காலிக அதிபர்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதில் டிரம்பின் அதிகாரப்பூர்வ படத்துடன் ‘தற்காலிக அதிபர்- வெனிசுவேலா’ என்று எழுதப்பட்டுள்ளது.

மேலும், டிரம்ப் அமெரிக்காவின் 45-வது மற்றும் 47-வது அதிபர் என்றும், அவர் 2025 ஜனவரி 20 அன்று பொறுப்பேற்றார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், டெல்சி ரோட்ரிக்ஸ் தான் வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக இருக்கிறார்.

இந்த மாத தொடக்கத்தில், வெனிசுவேலா மீது அமெரிக்கா ‘பெரிய அளவிலான’ தாக்குதலை நடத்தியது. அதில் அந்நாட்டு நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டார்.

மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் நியூயார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் மீது “போதைப்பொருள் கடத்தல்” குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வெனிசுவேலாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட வேண்டிய 5 கோடி பேரல் எண்ணெய் வந்துகொண்டிருப்பதாகவும், அதன் மதிப்பு சுமார் 4.2 பில்லியன் டாலர் என்றும் கூறினார்.