ஏற்படப் போகும் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ஒன்றிணைவோம்;தமிழ் மக்கள் பேரவை அழைப்பு!

உலக வல்லரசுகளின் ஒழுங்கமைப்பையே மாற்றி அமைக்கப் போகும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவுகள் இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கப் போவதற்கான சாத்தியக் கூறுகள் தெளிவாகத் தெரிகின்றன இந்த நிலையில் எமது பிரதேச பொருளாதாரமும் ஒரு பாரிய நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இருக்கும் எமது பொருளாதாரத்தை தக்கவைத்து மேம்படுத்தும் திட்டமிடல்களை செய்யத்தவறின் வறுமையும் பட்டினியும் எமைச் சூழும் அபாயம் இருக்கிறது இது எமது கல்வி, சுகாதார, அரசியல் ஸ்திரத்தன்மையிலும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் சாத்தியம் இருக்கிறது.

எமது பிரதேசத்தின் பொருளாதாரத் திட்டமிடல் சம்பந்தமான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பமாகி இருக்கின்றன பல துறைசார் வல்லுனர்களும் இது சம்பந்தமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

நிலம் மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் தக்கவைக்கும் ஒரு முக்கிய உற்பத்திச் சாதனமாக அமைகின்றது இலங்கையின் முழுநிலப்பரப்பு 6.56 மில்லியன் கெக்ரயர்கள் ஆகும் இதிலே 82% சதவீதமான நிலங்கள் அரசுடைமை நிலங்களாகும் இந்த அரசநிலத்தில் 37% சதவீதமானவை மடடுப்படுத்தப்பட்ட உரிமை ஆவணங்களினூடாக சிறு விவசாயிகளுக்கும் கிராம விஸ்தரிப்பு நடவடிக் கைகளுக்கும் குடியேற்றத் திட்டங்களுக்கும் பங்கிட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சிறுவிவசாயிகளுக்கு பங்கிட்டு கொடுக்கப்பட்டிருக்கும் அரச காணிகளின் அளவு வடக்கு கிழக்கு பகுதிகளில் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. அத்துடன் இப்பகுதிகளில் இராணுவம் பொதுமக்களின் நிலங்களை சுவீகரித்திருப்பதும் நிலமற்றோர் பலர் இருநதும் இப்பகுதி மக்களிற்கான குடியேற்றத் திட்டங்கள் போதுமான அளவு நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதும் கவலை தருவதாக அமைவதுடன் பொருளாதார மேம்பாட்டிற்கும் தடைக்கல்லாய் அமைகிறது.

அத்துடன் இந்தப்பகுதிகளில் சில காணிகளை பௌத்த புனித பிரதேசங்களாக பிரகடனப்படுத்தியும் வன இலாகாவிற்கு சொந்தமானது என வகைப்படுத்தியும் மகாவலி திட்டத்திற்கு உரியது என வரையறுத்தும் இருப்பதால் இந்தக்காணிகளை மக்கள் வாழ்வாதாரத்திற்குற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

தொடர்ந்து நீடிக்க இருக்கும் அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்டிருக்கும் வேலை இழப்பு, வருவாய்க் குறைவு, புலம்பெயர் தேசங்களிலிருந்து கிடைத்து வந்த வருவாயில் ஏற்படப்போகும் தாக்கங்கள், செலவின அதிகரிப்பு போன்றவை தற்பொழுது எம்முன்னே திடீரென்று எழுந்திருக்கும் சவால்கள் எனக் கொள்ளமுடியும்.
இவ்வாறான புறச் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு தேர்தல் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பொது நோக்கத்திற்காக ஒன்றுபட்ட திட்டமிடுதல்களில் ஒன்றுபடுவது காலத்தின் தேவையாக அமைகிறது.

எழுந்துவரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொள்ளும் குறகியகால உபாயங்களாக ஆடம்பர செலவகளைக் குறைத்தல் குடிவகைப் பாவனை, புகைத்தல் என்பவற்றை நிறுத்துதல் உள்ளுர் உற்பத்தி முயற்சிகளையும் அதன் பாவனையையும் மேம்படுத்தல் தனிநபர்களோ குழுக்களோ பொருளாதார அபிவிருத்தி முயற்சிகளை ஆரம்பிக்கும் போது நன்கு திட்டமிடுதலும் துறைசார் வல்லுனர்களின் ஆலோசனைகளைப் பெறுதலும் பயன்படத்தப்படாதிருக்கும் நிலங்களில் உற்பத்தி முயற்சிகளை ஆரம்பித்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இதற்கான நீண்டகாலத் திட்டமிடல் பற்றி சிந்திக்கும் பொழுது எம்மைச் சூழவுள்ள வளங்கள் சரியான முறையில் பயன்படத்தப்படவில்லை என்பது தெளிவாகத் தென்படுகிறது அதனை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் முனைப்புப் பெறவேண்டிய தேவை எழுந்திருக்கிறது எமது கல்விமுறை உள்ளுர் வளங்களை அடிப்படையாகக் கொண்ட எமது தேவைகளை பாரம்பரியங்களை கொண்ட ஒரு கல்வி முறையாக அமையவில்லை.

இவற்றை அடிப்படையாகக் கொண்ட தொழிற்பயிற்சியும் கல்வியும் ஒருங்கிணைந்த ஒரு கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட வேண்டிய தேவையை பல துறைசார் வல்லுனர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள் பாடசாலைக் கல்வியும் பல்கலைக்கழக கல்வியும் தொழிற்பயிற்சி மையங்களுடன் இணைந்ததான ஒரு கல்வித் திட்டத்தை கொண்டதாக அமையவேண்டும் என்று பலர் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.

எந்தத் தொழில் செய்பவரும் அதிலே பயிற்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமாகிறது இதுவே தரமான சேவையையும் உற்பத்தியையும் உறுதிசெய்து சந்தைப் போட்டிகளை வெற்றி கொண்டு ஸ்திரமான பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் விவசாய கால்நடை மீன்பிடி சம்மந்தமான அறிவியல் தொழிற்பயிற்சி கற்கை நெறிகள் மேம்படுத்தப்படவேண்டிய தேவை இருக்கிறது.

எமது கல்விமுறை எமது தேவைகள் வளங்கள் நோக்கியதாக அமையாததாலும் உள்ர் உற்பத்திக்கான பாரிய முதலீடுகள் ஏதும் ஏற்படுத்தப்படாத காரணத்தாலும் உள்ளுர் தொழில் வாய்ப்புக்கள் குறைந்து போக பலர் வெளிநாடு நோக்கி இடம்பெயர வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

1987இல் இலங்கை யாப்பில் ஏற்படுத்தப்பட்ட 13ம் திருத்தத்திற்கு பின்பும் இன்றுவரை மத்திய அரசே அரசகாணிகளின் கட்டுப்பாட்டில் மேலாதிக்கம் கொண்டுள்ள நிலை காணப்படுகிறது அத்துடன் கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகளில் கூட மத்திய அரசின் கட்டுப்பாடுகள் மேலோங்கி காணப்படுகின்றன.

இத்தகைய புறச்சூழலில் நாம் எமது பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள் சம்பந்தமான தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றங்கள் பயனுடையதாக அமையும் முயற்சியாளர்களுக்கு தேவையான நில ஒதுக்கீடு, அவர்களுக்கான பயிற்சியும் வழிகாட்டலும், பொருளாதார உள்கட்டுமானங்களை மேம்படுத்துதல் சிறிய தொழில் முயற்சிகளை ஊக்கப்படுத்தல், சந்தைப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் சம்பந்தமான உங்கள் கருத்துக்களை தமிழ்மக்கள் பேரவை எதிர்பார்த்து நிற்கிறது.

உங்கள் அபிப்பிராயங்களை ([email protected]) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உதவுமாறு உங்களை அன்புடன் கேட்டு நிற்பதோடு நாம் தேர்தல் அரசியல் கடந்து எமது இலக்கினை நோக்கி ஒன்றிணைந்து பயணிக்க அனைவரையும் அழைத்து நிற்கின்றோம்.

நன்றி.

தமிழ் மக்கள் பேரவை.
22.06.2020