“கைம்பெண்களிள் மேம்பாட்டுக்கு அனைத்து தரப்பினரும் உதவ முன்வர வேண்டும்”(நேர்காணல்) – மட்டு.அரச அதிபர்

இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மிக அதிகளவில் காணப்படுகின்றன. கடந்த கால போர்ச் சூழ்நிலை காரணமாக தமது கணவன்மார்களை இழந்த இலட்சக்கணக்கான பெண்கள் இன்று சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். வாழ்வாதார நெருக்கடி என்பதற்கு அப்பாலும் இவர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டு நிற்கின்றனர்.

இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் தொடர்பிலும், அவர்கள் எதிர் கொள்ளும் சவால்கள், அவர்களது மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டு வரும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம் வினவினோம். இதன்போது அவர் எம்முடன் பகிர்ந்து கொண்ட விடையங்களை இங்கு தருகிறோம்.

இந்த நேர்காணல் உலக கைம்பெண்கள் நாளையொட்டி இடம்பெறுகிறது.

வினாவடக்கு கிழக்கில் அல்லது குறித்த மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டு விதவைகளாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பாகவும் அவர்களின் வாழ்நிலை தொடர்பாகவும் மாறுபட்ட புள்ளி விபரங்கள் வெளி வருகின்றன. இது தொடர்பான பூரண விபரங்கள் தங்களிடம் உள்ளதா?

ஆம், பொதுவாக தரவுகள், தகவல்கள் பல்வேறுபட்ட அமைப்புக்கள், நிறுவனங்கள் மற்றும் நபர்களால் பெறப்படுகின்றன. அவை சரியானவையாக உள்ளனவா என்பதனை எம்மால் உறுதிப்படுத்த முடியாது.

இவ்வாறே மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை தொடர்பாக மாறுபட்ட புள்ளி விபரங்கள் வெளி வந்தாலும், மாவட்ட நிர்வாகத்திற்கான திணைக்களத் தலைவர் என்ற வகையில் கிராம மட்டத்தில் பிரதேச செயலாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகர் பிரிவுகளிலும் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மொத்தமாக 32,462 பேர் உள்ளனர். இதில் யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 3,356 ஆகும்.

கேள்வி -அவ்வாறாயின் குறிப்பாக எந்தக் காலப்பகுதியில் பெண்கள் தங்கள் கணவன்மார்களை இழந்துள்ளனர் எனக் குறிப்பிட முடியுமா?

1983 முதல் 2009 வரையான காலப் பகுதியில் பெண்கள் கணவன்மாரை இழந்துள்ளனர். குறிப்பாக 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் பாரிய யுத்த சூழ்நிலையால் பலர் கணவனை இழந்துள்ளனர். இது தொடர்பில் ஆண்டு ரீதியான விபரங்கள் பிரதேச செயலகங்களில் பேணப்பட்டு வருகின்றன.

கேள்வி- அவர்களில் அரச, அரச சார்பற்ற தொழில் செய்பவர்கள் எத்தனை பேர்? சுய தொழில் செய்பவர்கள் எத்தனை பேர்? தொழில் செய்ய முடியாத உடல்நிலை, மனநிலை மற்றும் வயது முதிர்ந்தோர் எத்தனை பேர் உள்ளனர்?

குறிப்பாக யுத்த காலத்தில் கணவன்மாரை இழந்தவர்கள் கூடுதலாக மட்டக்களப்பின் மேற்குப் பகுதியான படுவான்கரைப் பிரதேசத்தினை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களில் மிகச் சொற்பளவானவர்களே அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் தொழில் புரிகின்றனர்.

ஏனையோர் தமது சொந்தத் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். அது போல் கணிசமான அளவினர் தொழில் செய்ய முடியாத உடல் நிலை மற்றும் வயது முதிந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் ஏனையவர்களில் தங்கி வாழ்வதுடன் அரசாங்கத்தின் சமூக நலன்புரி உதவிகளைப் பெற்றும் வருகின்றனர்.

கேள்வி -அவர்களில் தற்போது தொழில் அல்லது வாழ்வாதார நிலையில் நாட்டின் சராசரி வருமான அடைவை எட்டியவர்கள் எத்தனை பேர்?

இவ்வாறு நாட்டின் சராசரி வருமான அடைவை எட்டியுள்ளவர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவில் இல்லை. எனினும் சமூக ரீதியாக ஓரளவு வாழ்க்கைத் தரம் சற்று உயர்வடைந்துள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.

கேள்வி – அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் எவையாக உள்ளன?

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான குடும்பங்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளனர். இவற்றுள் பிரதான பிரச்சினைகளாக பின்வருவனவற்றினைக் குறிப்பிட முடியும்.

நிரந்தர தொழில் ,வருமானம் இன்மை, வாழ்க்கைச் செலவுப் பிரச்சினை, குடும்பப் பாதுகாப்பு, குடும்பச் சுமை பால் நிலை அடிப்படையிலான வன்முறைகள், உள ரீதியான பாதிப்புக்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு – குடும்ப பிளவுகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

கேள்வி -அவற்றைத் தீர்க்க எவ்வாறான செயற் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன?

இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக வலையமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறான குடும்பங்களை சமூக மட்டத்தில் வலுவூட்டுவதற்கு பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக அடிப்படை வசதிகளான வீடு, குடிநீர் மற்றும் மலசல கூட வசதி என்பன வழங்குவதற்கு இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக கடன்கள், மானியங்கள் மற்றும் உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது சிறுவர் மகளீர் விவகார அமைச்சினால் கிராம மட்டத்தில் விதவைச் சங்கங்கள் அமைக்கப்பட்டு அதனூடாக மானியங்கள், சுழற்சிமுறை கடன்கள் ரூபா.30,000.00 முதல் ரூபா 100,000.00 வரை தலா ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அது போல் இலங்கைப் பெண்கள் பணியகத்தால் 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 272 நபர்களுக்கு 12.46 மில்லியன் பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி- இத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள இடையூறுகள் எவை?

இவ்வாறான பல திட்டங்கள் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் இவை நிலைபேற்றுத் தன்மையினைக் கொண்டிருக்கவில்லை. இவ்வாறு உதவிகளைப் பெறுபவர்கள் ஆர்வத்தோடு, செயற்திறனோடு செயற்படுவதில்லை. அத்தோடு எல்லோருக்கும் சம அளவில் உதவிகளை வழங்கி திட்டங்களை அமுல்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

இதனால் எதிர்பார்க்கும் அளவுக்கு உதவிகளை வழங்க முடியாத நிலையுள்ளது. அதே போல் தொழில்வாண்மை விருத்தி, பயிற்சி, அனுபவம் மற்றும் தேர்ச்சியற்றவர்களாக இருப்பதனால் முறையான திட்டமிடலுடன் திட்டங்களை முன்னெடுத்தச் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

இவ்வாறான குடும்பங்களின் வாழ்க்கைத் தொழில் முறைத் திட்டங்கள் ஒரு நிலையற்ற தன்மையானதாக காணப்படுவதும் சவாலான ஒரு விடயமாகும்.

கேள்வி – எவ்வாறான திட்டங்கள் அவர்களை விரைந்து சமூக வாழ்வில் ஈடுபட வழி அமைக்கும் என எண்ணுகிறீர்கள்?

நிலையான மாதாந்த வருமானத்தினைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான தொழில்துறை திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வாறானவர்களுக்கு உள்ளுர் வளங்களைக் கொண்ட உற்பத்தியினை ஊக்குவிப்பதற்கு தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்த வேண்டும்.,

மேலும் தன்னம்பிக்கை, மனப்பாங்கு என்பன கட்டியெழுப்பப்பட்டு சுய ஆளுமை விருத்தியடையச் செய்யப்பட வேண்டும்.,

குறிப்பாக அக் குடும்பங்களின் முன்னுரிமைத் தேவைகளை இணங்கண்டு அவற்றுக்கு வலூவூட்டுவதன் மூலம் விரைந்து அவர்களை சமூக வாழ்வில் ஈடுபட வழி அமைத்துக் கொடுக்கலாம்.,

இதனை தனிப்பட்ட அமைப்பின் ஊடாவோ அல்லது நிறுவனத்தின் ஊடாவோ செயற்படுத்த முடியாது. சமூக மட்டத்தில் எல்லோரும் பங்குதாரர்கள் என்ற வகையில் பல்வேறு பட்ட அரசியல் சமூக ஆர்வலர்கள், அரச, அரச சார்பற்ற அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் இத்தகையவர்களுக்கு உதவிகள், திட்டங்களை செய்வதற்கு முன்வர வேண்டும்.