சீன கொரோனா திரிபு அறிகுறியுடன் இந்தியாவில் மூன்று பேர் – முக்கிய 10 தகவல்கள்

1.இந்தியாவில் BF.7 திரிபின் முதலாவது பாதிப்பு கடந்த அக்டோபர் மாதத்திலேயே குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தால் கண்டறியப்பட்டது. இதுவரை, குஜராத்தில் இருந்து இரண்டு பாதிப்புகளும் ஒடிஷாவில் ஒரு பாதிப்பும் பதிவாகியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2.இந்திய சுகாதார அமைச்சர் மன்சூக் மாண்டவியா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கோவிட் மறுஆய்வுக் கூட்டத்தில், கொரோனா பாதிப்புக்கு ஒட்டுமொத்தமாக ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. ஆனாலும், வேகமாக பரவக்கூடிய தற்போதைய கொரோனா புதிய வகை திரிபின் பரவலை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய தேவை உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

3.சீனாவில் உள்ள பல நகரங்கள் தற்போது மிகவும் பரவக்கூடிய ஓமிக்ரான் திரிபால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள கொரோனா தொற்றாளர்கள் பெரும்பாலும் BF.7 திரிபு அறிகுறியுடன் காணப்படுகின்றனர். இந்த ‘வகை’ தலைநகர் பெய்ஜிங்கில் பரவும் முக்கிய திரிபாக அறியப்படுகிறது.

4.சீனாவில் BF.7 தீவிரமாக பரவும் அதே வேளையில், முன்பு கொரோனா தடுப்புக்கு பயன்படுத்தப்பட்ட அதே தடுப்பூசி மருந்து குறைவான எதிர்ப்பாற்றலையே வெளிப்படுத்துவதும் இந்த திரிபு மக்களை எளிதாக தாக்கக் கூடியதாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

5.BF.7 என்பது ஓமிக்ரான் திரிபு. அது BA.5 என்ற திரிபின் துணை வகையாகும். இது வேகமாக பரவக்கூடியது. குறுகிய காலமே இருந்தாலும் ஏற்கெனவே கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களையும் எளிதாக தாக்கவல்லது. அதனால் இதை வலுவான தொற்றாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

6.அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் உட்பட பல நாடுகளில் இது ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது.

7.புதிய வகை திரிபின் வேகமான பரவலைத் தொடர்ந்து, முன்பு கொரோனா காலத்தில் அன்றாடம் பாதிப்பு தரவுகளை மத்திய மரபணு தொடர் பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் வழக்கத்தை மீண்டும் தொடரும்படி இந்திய சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

8.மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு பரவினாலும் தமிழ்நாட்டில் அதன் தாக்கம் குறைவாகவே உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த ஏழு மாதங்களாக தமிழ்நாட்டில் ஒரு உயிரிழப்பு கூட கொரோனாவால் ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

9.கொரோனா புதிய வகை திரிபை கருத்தில் கொண்டு ரூ. 4 கோடி செலவில் ஏற்கெனவே மரபணு பகுப்பாய்வு கூடம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் உதவியுடன் மாநில அளவில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

10.சீனாவின் ஹாங்காங் பிரதேசத்தில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு கொரோனா கட்டாய பரிசோதனை நடத்தும்படியும் தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.