இது முடிவு மட்டுமல்ல ஆரம்பம்; படகில் சென்று இராமர் பாலத்தை பார்வையிட்ட சீன தூதுவர்

436 Views

இது முடிவு மட்டுமல்ல ஆரம்பம்
வடபகுதிக்கான தனது விஜயம் முடிவாக மாத்திரமன்றி ஆரம்பமாகவும் அமைந்துள்ளது என இலங்கைக்கான சீன தூதுவர் கீ ஷங் ஹொங் நேற்றுத் தெரிவித்தார்.

வட மாகாணத்திற்கான பயணத்தை நிறைவு செய்யும் வகையில், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இராமர் பாலத்தை நேற்று கடற்படைப் படகு ஒன்றில் சென்று சீன தூதுவர் பார்வையிட்டார். அதன் பின்னர் கருத்து தெரிவித்தபோதுதான், இந்த விஜயம் முடிவாக மாத்திரமன்றி ஆரம்பமாகவும் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

மூன்று நாட்களாக வட மாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்ட இலங்கைக்கான சீன தூதுவர் கீ ஷங் ஹொங் மன்னார்  தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு நேற்று முற்பகல் சென்றார்.

அங்கிருந்து தமது தூதரக பிரதிநிதிகளுடன் கடற்படை படகுகளில் இராமர் பாலத்தை நோக்கி புறப்பட்டார்.

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு தலைமை அதிகாரி கேர்ணல் காஓ பின், தலைமை அரசியல் அதிகாரி லூஓ ச்சொங் உள்ளிட்டவர்களும் தூதுவருடன் இந்த பயணத்தில் இணைந்திருந்தனர்.

கடற்படை முகாமிலிருந்து புறப்பட்டவர்கள் சுமார் ஒரு மணித்தியாலம் பயணித்து இராமர் பாலத்திற்கு அருகே சிறு படகொன்றில் ஏறினர். 17 கடல் மைல் தொலைவிலுள்ள இராமர் பாலம் மணற்திட்டை சீன தூதுவர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர்.

சுமார் 20 நிமிடங்களாக இராமர் பாலத்தில் இருந்த இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட் இராஜதந்திரிகள் பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர். மன்னார் – தாழ்வுபாடு பகுதியிலுள்ள கடற்படை முகாமிற்கு திரும்பிய சீனத் தூதுவரிடம் இந்த பயணம் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது, “இது முடிவு மட்டுமல்ல ஆரம்பம்” என பதிலளித்தார்.

தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை 32 கிலோமீட்டருக்குள் உள்ள 16 மணல் திட்டுக்களை கொண்ட பகுதி இராமர் பாலம் எனவும் ஶ்ரீ ராம்சேது என வணக்கத்திற்குரிய புனித பகுதியாகவும் இந்திய மக்களால் போற்றப்படுகின்றது.

இந்த 16 மணல் திட்டுக்களில் 8 மணல் திட்டுக்கள் இலங்கைக்கும் எஞ்சிய 8 இந்தியவிற்கும் உரியவையாகும்.

மன்னாரிலுள்ள இராமர் சேது பகுதிக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் கடந்த மார்ச் மாதம் விஜயம் செய்திருந்தனர். இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.

இதனிடையே, இலங்கைக்கான சீனத் தூதுவர் மன்னார் –  தாழ்வுபாடு பகுதியில் அமைந்துள்ள ரின் மீன் தயாரிப்பு தொழிற்சாலையையும்  பார்வையிட்டிருந்தார்.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad இது முடிவு மட்டுமல்ல ஆரம்பம்; படகில் சென்று இராமர் பாலத்தை பார்வையிட்ட சீன தூதுவர்

Leave a Reply