திருக்கோணேஸ்வரம்- காத்திருக்கும் ஆபத்து! – அகிலன்

ஈழத் தமிழர்களின் தலைநகராகக் கருதப்படும் திருகோணமலையில் உள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோணேஸ்வரம் கோவிலின் ஆபத்தான நிலை தொடர்பில் மீண்டும் பேசப்படுகின்றது.  இவ்விடயத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் உடனடியாகச் செயற்படாவிட்டால், திருக்கோணேஸ்வரம் முற்றுமுழுதாக சிங்கள மயமாக்கப்பட்டுவிடும் ஆபத்தை எதிர்கொண்டிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பகுதியாக திருமலை உள்ளது. ஆனால், வயது முதிர்ச்சி மற்றும் சுகவீனம் காரணமாக கொழும்பிலேயே தங்கியிருக்கும் சம்பந்தன் இந்த விவகாரத்தில் எந்த வகையிலும் சம்பந்தப்படுவதில்லை என தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் சிலரே குற்றஞ்சாட்டுகின்றார்கள்.

திருமலையை முற்றுமுழுதாக சிங்கள மயப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலுடன் அரச இயந்திரம் தீவிரமாகச் செயற்பட்டுவரும் நிலையில், அதற்கு எதிராக களத்தில் நின்று போராடக்கூடிய தமிழ்த் தலைவர்கள் யாரும் அங்க இல்லை என்பது தமிழர்களைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய பலவீனம்.

வரலாற்றுப் பிரசித்திபெற்ற திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் அபிவிருத்திப் பணிகளுக்குத் தொல்லியல் திணைக்களம் முட்டுக் கட்டையாக இருப்பதுடன் தற்போது அவர்களின் அனுமதியுடன் சுற்றாடலில் அமைக்கப்பட்டுள்ள சிங்களவர்களின் தற்காலிகக் கடைகளை நிரந்தர மாக்குகின்ற செயற்பாடுகளும் கனகச்சிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்த் தலைமைகளின் பலவீனத்தை இவர்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றார்கள்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சைவத்திருக்கோவிலாகிய திருக்கோணேஸ்வர ஆயத்துக்குச் செல்லும் வழியில் 2009 இற்குப் பின் அவசர அவசர மாக வீதியின் இருமருங்கிலும் இரத்தினபுரியைச் சேர்ந்தவர்கள் எந்த உத்தரவும் இன்றி தற்காலிக கடைகளை அமைத்தனர். அந்தக் கடைகள் தற்போது பெருமளவுக்கு அதிகரித்துவிட்டன. இந்தக் கடைகள் அமைப்பவர்களுக்கும் திருக்கோணேஸ்வரக் கோயிலுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. திட்டமிட்டு ஆலயச்சூழலை ஆக்கிரமிப்பதற்காக இந்தக் கடைகள் அமைக்கப்பட்டன.

இது தொடர்பாக திருக்கோணேஸ்வர நிர்வாகம் பல இடங்களி லும் முறைப்பாடு செய்த போதிலும் எவ் வித பலனும் கிட்டவில்லை. தற்போது திருக்கோணேஸ்வரம் செல்லும் பாதைக்கு அருகில் கோவில் சம தரையில் இவர்களுக்கு நிரந்தரக் கட்டடம் அமைக்க தொல்லியல் திணைக்களம் திட்டமிட்டு வருகிறது.

கடந்த வாரம் தொல்லியல் திணைக்களத்தால் திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபை தலைவரும் செயலாளரும் அழைக்கப்பட்டு தெருவோரம் வர்த்தகம் செய்வோருக்கு கோவிலுக்கு சமீபமாக நிரந்தர கட்டடம் அமைக்க தங்கள் தொல்லியல் திணைக்களம் அனுமதி அளித்துள்ளதாகவும் அதற்கு ஆலயம் சம்மதம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். கடந்த சில வருடங்களாக தொல்லியல் திணைக்களம் கோணேஸ்வரர் ஆலய திருப்பணி வேலைகளைத் தடுத்து வருவதை அனைவரும் அறிவர்.

தேரோடும் வீதியை அகலிக்கத் தடுத்தனர். அழிந்துபோன அன்னதான மடத்தை விஸ்தரிக்கத் தடுத்தனர். வாசலில் பெருங்கோபுரம் கட்டுவதற்கு திணைக் களம் இடையூறுகளை விளைவித்து வருகின்றனர். தற்போது இந்திய அரசாங்கத்திடம் திருக்கோணேஸ்வரத்தின் பாரிய திருப் பணி வேலைகளை நிறைவேற்றித் தருமாறு ஆலய அறங்காவலர் சபையும் இந்து சமய நிறுவனங்களும் வேண்டுதல் விடுத்து அவை சாதகமாக அமைய உள்ள நேரத்தில் திட்டமிட்டு ஆலய சுற்றாடலை அபகரிக்கும் நோக்கில் நிரந்தரக் கடைகளை கட்டுவதற்கு முன்வந்துள்ளனர்.

இந்த விடயத்தைக் கருத்தில் கொண்டு சகல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் களும் திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய திருப்பணி வேலைகள் நடைபெறுவதற்கும் அதேவேளையில் அங்கு அவசரமாக கட்டப்படவுள்ள வாணிப கட்டடங்களைத் தடுத்து நிறுத்தவும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய சுற்றாடலில் சிங்களவர்களுக்கான கட்டட நிர்மாணப்பணிகள் சுதந்திரமாக நடைபெற்றுவருகின்றன. திருக்கோணேஸ்வரர் ஆலய திருப்பணியை மட்டும் தொல்லியல் திணைக்களம் தலையீடு செய்து தடுத்து வருகிறது.

ஒரு பகுதி தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அடையாளம் காணப்பட்டால்,அப்பகுதியை எதிர்கால ஆய்வுகளுக்காக பேணிப் பாதுகாப்பதும், ஆய்வுகளை முன்னெடுப்பதும்தான் தொல்லியல் திணைக்களத்தின் பணி. ஆனால், வடக்கு கிழக்குப் பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தின் பணி அவ்வாறாக இருப்பதில்லை. இந்துமத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கையகப்படுத்தி அவற்றை சிங்கள – பௌத்த பிரதேசமாக மாற்றுவதுதான் அவர்களுடைய பணியாக இருக்கின்றது.  இதற்காக அரச இயந்திரத்தின் அனுசரணையுடன் அவர்கள் முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பில் யாரும் கேள்வி எழுப்பமடியாத நிலை தொடர்கின்றது,

2009 ஆம் ஆண்டுதான் கோவிலுக்குச் செல்லும் பாதையில் கடைகளை தற்காலிகமாக அமைப்பதற்கு அப்போது அமைச்சராக இருந்த புஞ்சிநிலமே ஏற்பாடு செய்திருந்தார். தன்னுடைய வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக அவர் செய்த திட்டம் இது.

இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த சிங்கள வர்த்தகர்களுக்கே இவ்வாறு கடைகளை அமைப்பதற்கு இடமளிக்கப்பட்டது. இந்தப் பகுதியை பலாத்காரமாக ஆக்கிரமித்து 13 வருடங்களாக அவர்கள் அங்கு இருக்கின்றார்கள். குறிப்பிட்ட பாதையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கடைகள் அனைத்தும் சிங்களவர்களுக்குச் சொந்தமானது என்பது கவனிக்கத்தக்கது. இந்தக் கடைகளை அகற்றுவதற்கு கோவில் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

மாவட்ட ஒருங்கணைப்புக் குழுவின் கூட்டம் ஒன்றில் இந்த வர்த்தகர்களுக்கு கோவிலுக்கு முன்பாக உள்ள வாகன தரிப்பிடம் உள்ள பகுதியில் கடைகளை அமைத்துக்கொடுப்பது எனவும், பாதையில் உள்ள கடைகளை அகற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சம்பந்தன் உட்பட திருமலை மாவட்ட எம்.பி.க்களும், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தார்கள். இருந்தபோதிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்த இடம் தமக்குப் பொருத்தமற்றது என வர்த்தகர்கள் நிராகரித்துவிட்டதுதான் இதற்குக் காரணம்.

திருக்கோணேஸ்வரம் கோவிலுக்கு அருகில் கடற்கரைப் பக்கமாக சங்கமித்த பன்சல என்ற பெயரிலான பௌத்த விகாரை ஒன்றுள்ளது. கோணேஸ்வரர் கோவிலுக்கு வருபவர்கள் அந்த பன்சலக்குச் செல்லாமல் நேரடியாக கோவிலுக்கு வருவதுதான் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுக்கும் அங்குள்ள பிக்குகளுக்கும் இப்போதுள்ள பிரச்சினை. இதனால், குறிப்பிட்ட பன்சலைக்கு சென்று அங்கிருந்து கோணேஸ்வரர் கோவிலுக்கு வருவதற்கான பாதை ஒன்றை அமைப்பதற்கும், அந்தப் பகுதிக்கு சிங்களவர்களின் கடைகளைக் கொண்டு செல்வதற்கும் இப்போது திட்டமிடப்படுகின்றது. இதற்காக சிங்கள வர்த்தகர்களுக்கு காணியை நிரந்தரமாகக் கொடுப்பதற்கு திட்டமிடப்படுகின்றது. இதன்மூலமாக குறிப்பிட்ட பகுதியை சிங்கள மயமாக்கும் நீண்டகாலத் திட்டத்துடன்தான் அரச இயந்திரம் செயற்படுகின்றது.

திருக்கோணேஸ்வரத்தைப் பொறுத்தவரையில் சிங்கள வர்த்தகர்களுக்காக கட்டங்களை அமைத்துக்கொடுப்பதற்கோ அல்லது – கோவில் நிர்வாகத்தில் தலையிடுவதற்கோ எந்தவிதமான அதிகாரங்களும் தொல்லியல் திணைக்களத்துக்கு இல்லை. இருந்தபோதிலும் கோவில் நிர்வாகத்துடன் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் தமது எல்லையை மீறிச்செயற்பட்டிருக்கின்றார்கள். “இந்த புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உங்களுடைய அனுமதி எமக்குத் தேவையில்லை. ஆனால், பிரச்சினை இருக்கக்கூடாது என்பதற்காக உங்களுடன் இது தொடர்பில் பேசுகிறோம்” என அச்சுறுத்தும் பாணியில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் நடந்துகொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பிட்ட காணி உண்மையில் கோணேஸ்வரார் கோவிலுக்குச் சொந்தமானது. அது தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி என்பதால் அதனைப் பேணிப்பாதுகாக்கும் பொறுப்பு மட்டுமே தொல்பொருள் திணைக்களத்துக்குள்ளது. ஆனால், அந்தக் காணிக்கான உரிமை தமக்குள்ளது போலவும், கோணேஸ்வரர் கோவில் தமக்கு கட்டுப்பட்டது என்பது போலவும்தான் தொல்பொருள் திணைக்கம் இப்போது செயற்படுகின்றது எனக் குற்றஞ்சாட்டுகின்றார் கோவில் நிர்வாகி ஒருவர்.

திருகோணமலை மாவட்டத்தில் 64ஆம் கட்டை பகுதியில் இராஜவந்தான் மலை உள்ளது. இந்த மலையில் அகத்தியமா முனிவர் சிவலிங்க வழிபாட்டில் ஈடுப்பட்டுள்ளார். இந்த சிவலிங்கமும் வழிபாட்டுத்தலமும் அகற்றப்பட்டுள்ள. அங்கு பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்படுகிறது. கொட்டியாபுரம் என்ற பெயரை திரிபுபடுத்தி கொட்டியாராம விகாரை என்ற பெயரில் இந்த ஆக்கிரமிப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு இராணுவமும் அரசாங்க அதிபரும் துணை நிற்கிறார்கள். இராஜவந்தான் ஆலயத்தை புனரமைப்பது தொடர்பில் அரசாங்க அதிபருடன் பேசுகையில்  அவ்விடயம் தொடர்பில் பௌத்த பிக்குவிடம் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்குமாறு அரசாங்க அதிபர் கூறுகின்றார். அரசாங்க அதிபரை விடவும் பிக்கு அதிகாரம் உள்ளவராக தீர்மானிக்கும் சக்திவாய்ந்தவராக உள்ளார் என்பதை இது உணர்ததுகின்றது.

அரச இயந்திரங்களின் பலத்துடன் இராணுவம், பொலிஸ் பாதுகாப்புடன் தொல்லியல் திணைக்களம் சிங்கள மயமாக்கலை தீவிரப்படுத்தியிருக்கும் பின்னணியில் தமிழ்த் தலைவர்கள் எனப்படுபவர்கள் வெறுமனே அறிக்கைகளை வெளியிடுவதுடன், பாராளுமன்றத்தில் பேசுவதுடன் தமது கடமை முடிந்துவிட்டதாக இருக்கின்றார்கள்.  கோணேஸ்வர ஆலயமும் பறிபோகத்தான் போகின்றதா?