‘இலங்கைக்கு எதிராக மும் முனைகளில் இந்தியா நடவடிக்கை எடுக்கும்’ – மேஜர் மதன்குமார்

174 Views

WhatsApp Image 2022 08 12 at 12.41.22 AM 'இலங்கைக்கு எதிராக மும் முனைகளில் இந்தியா நடவடிக்கை எடுக்கும்' - மேஜர் மதன்குமார்

சீனாவின் மிகப்பெரும் உளவுக்கப்பலான யுவான் வங்-5 என்னும் கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர விரிசல்களை தோற்றுவித்துள்ளது. 

இதனிடையே அமெரிக்காவின் போர்க் கப்பல் ஒன்றும் சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பில் இலக்கு ஊடகத்திற்கு தமிழகத்தை தளமாகக் கொண்ட இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி மேஜர் மதன்குமார் வழங்கிய சிறப்பு நேர்காணலை இங்கு தருகின்றோம்.

கேள்வி

சீன கப்பலின் இலங்கைக்கான பயணம் இந்திய எதிர்பையும் மீறி இடம்பெற்றால் இந்தியாவின் எதிர்கால நடவடிக்கை எவ்வாறு இருக்கும்?

பதில் :

இந்தியாவின் நடவடிக்கை என்பது மூன்று விதமாக பார்க்க முடியும்.

1-இராஜாங்க ரீதியாக ,

2-அரசியல் ரீதியாக

3-இராணுவ ரீதியாக பார்க்க முடியும்.

அதாவது   இராஜாங்க ரீதியாக பார்க்கும் போது இலங்கையின் மீது நிச்சயமாக ஒரு அழுத்தம் வரும். அந்த அழுத்தம் இந்தியாவின் நேரடி அழுத்தமாக இருக்கும் மற்றும் இந்தியாவுடைய பங்களிப்பு கொண்ட குவாட் அமைப்பு மூலமாகவும் இலங்கை அரசாங்கத்தின் மீது பெரிய ஒரு எதிர்ப்பும் இதற்க்குண்டான அழுத்தமும் இந்தியா தரப்பில் இருந்து கொடுக்கப்படும். இந்தியாவினுடைய கடன்கள், பல்வேறுபட்ட மனித உரிமை சம்பந்தப்பட்ட உதவிகளான, எரிபொருள் மற்றும் மருந்து போன்ற உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது வரையில் நான்கு மில்லியன் டொலர்  பெறுமதியான உதவிகள்  வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இனிவரும் காலங்களில் இலங்கையின் பொருளாதாரம் உடனடியாக சீரடையும் என்று நாங்கள் எதிர்ப்பார்க்க முடியாது.

இத் தருணத்தில் இந்தியாவினுடைய உதவி என்பது நிச்சயமாக இலங்கைக்கு தேவை.  நீங்கள் இதுவரை வரலாற்றை பார்த்தீர்களானால் நல்லதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும் இந்தியா தான் முதலில் Responder என்ற முறையில் இலங்கைக்கு எப்பொழுதும் உதவி செய்திருக்கிறது. உதாரணமாக சுனாமி பேரலை அழிவு, அதன் பிறகு நடந்த பல நிகழ்வுகளைக் கூறலாம்.  அந்த உதவிகளை இலங்கை இனி எதிர்ப்பார்க்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

நிச்சயமாக இந்தியாவின் மக்களின் ஆதரவு இருக்காது. இந்தியா அரசாங்கம் இராஜாங்க கொள்கையை மக்களின் மனநிலையை  சார்ந்து அமைக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஏனென்றால் மக்கள் என்பவர்கள் உணரச்சி பூர்வமாக பார்ப்பார்கள். ஆனால் இந்த இடத்தில் மக்களுக்கும் அந்த சலிப்பு வருவதென்பது தெளிவாக பார்க்க முடிகிறது.  என்னுடைய சமூக  ஊடகத்தைப் பார்த்தீர்களானால் (Twitter) இதற்கு முன்பு இந்தியா இலங்கைக்கு உதவி செய்ய வேண்டும். தமிழ் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று  கூறி வந்தவர்கள் இன்று இவர்களுக்கு உதவி செய்தாலும் இந்தியாவிற்கு எதிராக தான் போவார்கள். இவர்களுக்கு உதவி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற ஒரு கருத்தை வலியுறுத்துகின்றார்கள்.  ஆனால் அரசாங்கம் என்பது இராஜாங்க ரீதியாக, கொள்கை என்பது உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டது.

எனவே இப்படி ஒரு நிலைமை,  அரசியல் ரீதியாக எடுபடுமா என்றால் அரசியல் ரீதியாக எடுபட வாய்ப்பு இருக்கின்றது.

இது அரசியல் பிரச்சினையாக இந்தியாவில் பார்க்கப்படாதுவிட்டாலும் இப்போது இருக்கக்கூடிய மோடி அரசாங்கம் ஒரு வலிமையான அரசாங்கமாக மக்களால் பார்க்கப்படுகின்றது.  அப்படிப்பட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் அதை ஒட்டியதாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். அதனால் வருகின்ற தேர்தல்கள், மூன்று  முக்கியமான சூழலில் வருகின்றன. அந்த தேர்தலில்  எதிர்க்கட்சிகள் மோடி அரசாங்கத்திற்கு எதிராக இருக்கக்கூடிய எதிர்க் கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ்  கட்சி இப்பிரச்சினையை கையில் எடுத்து மோடி அரசாங்கம் ஒரு வலிமையற்றதனமாக செயற்படுகின்றது என்று அவர்கள் பிரசாரம் செய்தால், அது  ஆளும் கட்சியான பா.ஜ.க-வுக்கு குறிப்பிட்டளவு பாதிப்பை நிச்சயமாக ஏற்படுத்தும்.

மோடி அவர்களின் தலைமைக்கு சின்ன பாதிப்பை ஏற்படுத்தும். அந்த பாதிப்பையும் நிச்சயமாக அவர்கள் விரும்ப மாட்டார்கள். அதனால் அரசியல் ரீதியாக பார்த்தால் இது ஒரு வலிமையான நடவடிக்கையாக இருக்கும் .

மூன்றாவது  இராணுவ நடவடிக்கை என்பது இந்தியாவின் விமானம் தாங்கிய போர்க்கப்பலான INS Vikramaditya இப்பொழுது நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அது  ஏற்கனவே இந்திய கப்பல் படையினரிடம் கொடுக்கப்பட்டு விட்டது. தங்களுடைய மூன்று பணிகளையும் தன்னுடைய கடல் எல்லைக்குண்டான ஆதிக்கத்தையும் இந்திய கப்பல் படை நிச்சயமாக அதிகப்படுத்தும்.   அதற்கு உண்டான வேலைகளும் இப்பொழுது போய்க்கொண்டிருக்கிறது.

இந்த மூன்று விதமாகவும் எதிர்ப்புக்களை  இந்தியாவிடம் இருந்து நிச்சயமாக எதிர்ப்பார்க்கலாம்.

கேள்வி

அமெரிக்க கப்பலின் இந்திய வருகை தொடர்பில் இந்தியாவை போல சீனா ஏன் அக்கறை காண்பிக்கவில்லை?

பதில் :

இதைப்பார்ப்போமானால் இந்தியாவின் எல்லைக்கு 160km க்கு அருகில் சீனாவின் உளவுக்கப்பல் வருகின்றது. இது இந்தியாவினுடைய பிரச்சினை. இந்தியா இதற்கான எதிர்ப்புகளை தெரிவிக்கிறது, இதற்குண்டான நடவடிக்கைகளையும் அழுத்தத்தையும் இலங்கைக்கு கொடுக்கின்றது. ஆனால் இந்தியாவிற்கு வந்த  400டன் எடைகொண்ட அமெரிக்க போர்க்கப்பல் இந்திய எல்லைக்கு மட்டுமல்ல இந்தியாவின் சென்னை  துறைமுக இடத்தில் வந்து சேர்கிறது என்றால் அது சீன எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 2000 மைல் தள்ளி இருக்கின்றது. அதனால் இது சீனாவின்  இறையாண்மைக்கோ அல்லது சீனாவின் நேரடி பாதுகாப்பு அச்சுறுத்தலை இந்தியாவிற்கு ஏற்படுத்துகின்றதா என்றால் அது   நிச்சயமாக இல்லை.

இதுபோன்ற நிகழ்வு  தென் சீனக் கடல் பகுதியில் சீனாவை ஒட்டி இருக்கின்ற நாடுகளாக இந்தோனேஷியா,  பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலோ இந்தியா இராணுவ கப்பலோ அல்லது குவாட் அமைப்பை சேர்ந்த மற்றைய மூன்று நாடுகளின் கப்பலோ தாய்வானுக்கு சென்று அங்கு இந்தமாதிரி ஒரு பணிகளை மேற்கொண்டாலோ இல்லை தென்சீனக்கடல் பகுதியில் இருக்கக்கூடிய இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு இக் கப்பல் சென்றிருந்தால்  சீனா நிச்சயமாக, இந்தியாவைப் போன்று எதிர்ப்பை  தெரிவித்திருக்கும்.

கேள்வி

இலங்கை அரசு சீனாவை எதிர்க்கும் என இந்தியா நம்புகிறதா?

பதில் :

சீனாவை இலங்கை அரசு  எதிர்க்கும் என்று இந்தியா  நிச்சயமாக நம்புகிறது. இதற்கான காரணம் என்னவென்றால், கடந்த தை மாதம் முதற்கொண்டு இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியில் சீனாவின் பங்களிப்பு  எந்தளவிற்கு இருந்தது என்பது எமக்கு தெரியும். இந்தியாவின் பங்களிப்பு எந்தளவிற்கு இருந்தது என்பதும் எமக்கு தெரியும். இந்தியாவின் பொருளாதார நிலைமையும் இப்பொழுது தான் சீர்ப்பட்டுக்கொண்டு வருகிறது.

பொருளாதாரத்தில் இந்தியாவைவிட ஐந்து மடங்கு வலிமையான நாடு சீனா. அப்படியிருந்தும் சீனா ஒரு மனிதாபிமான ரீதியிலோ தனது நட்பு நாடு என்ற ரீதியிலோ இலங்கையை அணுகவில்லை.  அதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம்.  இந்தியா இந்த இடத்தில் முதல்  Responder என்ற முறையில் அண்டை நாடு. தனது சகோதர நாடு என்ற முறையில் இந்தியா  இதற்கான Response ஐ நிச்சயமாக செய்தது. அந்த உதவிகளை இந்தியா செய்யும் போது இலங்கை இந்தியாவின் இறையாண்மைக்கு மற்றும் அதன் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தல் இலங்கையிலிருந்து வரக்கூடாதென்பதும் அல்லது மறைமுகமாக இலங்கையின் மண்ணை இலங்கையின் கடல் எல்லையை வேறு சில நாடுகள் இந்தியாவிற்கு எதிராக இருக்கக்கூடிய பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் உபயோகப் படுத்தக்கூடாதென்பதையும் எப்பொழுதுமே இந்தியா வலியுறுத்தியுள்ளது. அந்த ஒரு வலியுறுத்தலுக்கு முதலில் “ஆம்” என்று சொல்லிவிட்டு பிறகு தன் கருத்தை மாற்றுகின்றார் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

இந்தியாவிற்கு அந்த எதிர்பார்ப்புகள் இல்லாமல்  இவ்வாறு நடப்பதற்கான  வாய்ப்புக்கள் இல்லை.  அதேசமயம் இந்தியா,  சீனா, இலங்கை மூன்று தொடர்புகளில் சீனாவிற்கும் இலங்கை நெருக்கமாக இருக்கிறது  என்ற கருத்தையும் இந்தியா புறம் தள்ளிவிட்டு பார்க்கவில்லை. இதை இரண்டையும் சேர்த்து தான் இந்தியாவின் வெளியுறவு  கொள்கையும் அதனுடைய நகர்வும் இப்பொழுது இருக்கின்றது.“

Leave a Reply