சிறிலங்காவின் இன்றைய ஆட்சியாளர்களான தேசிய மக்கள் சக்தி தனது ஈழத்தமிழர் இறைமை தேசிய நீக்க செயல்திட்டத்தின் 2026 செப்டெம்பர் 27ஆம் திகதிய செயற்பாடாகத் “மானிட அரசியல் விடுதலைக்கான அதி உன்னத அடையாளமாகிய” தியாகதீபம் திலீபனின் திருவுருவச்சிலையை அவர் உயிர்த்தியாகம் செய்த நல்லூரில் இருந்து தன்னுடைய படையினர் மூலம் அகற்றி பண்பாட்டு இனஅழிப்பு செய்துள்ளது என்பதனை உலக இனமாக உள்ள ஈழத்தமிழர்கள் உலக மக்களுக்கும் உலகின் நாடுகளின் தலைவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் எடுத்துரைக்க வேண்டும் என்பது இலக்கின் அழைப்பாகவுள்ளது.
அத்துடன் 02.10.2026 இல் அனைத்துலக அறவழிப்போராட்ட நாளை “வன்முறைக்கு இடமில்லையெனச் சொல்லுங்கள்” என உலகெங்கும் கொண்டாடும் ஐக்கிய நாடுகள் சபை, இக்காலகட்டத்தில் அறவழிப் போராட்டத்தையும் உலக அறவழிப்போராட்ட நாளையும் அவமதித்துள்ள சிறிலங்காவின் செயலைக் கண்டிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்த வேண்டுமென்று இலக்கு அனைத்துலக நாட்டுத் தலைவர்களையும் அறவழிப்போராட்ட உலகச் செயற்பாட்டாளர்களையும் கோருகிறது.
தாயகத்திலும் அனைத்துலகிலும் ஈழத்தமிழர்கள் தேசமாக தேசிய உணர்வுடன் தியாக தீபம் திலீபனின் உயிர்த்தியாகத்தின் 39 வது ஆண்டு நினைவேந்தலை 26.09.2026 இல் முன்னெடுத்த மறுநாள் காலையிலேயே நல்லிணக்கம் வேண்டுமென்னும் தேசிய மக்கள் சக்தியின் வாயளவு பேச்சின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் செயலாகச் சிறிலங்காப் பொலிசார் அவரின் திருவுருவச் சிலையை அதனை நிறுவியவர்களுக்கோ அல்லது தற்காலிகமாக அதற்கு அனுமதித்த யாழ் மாநகரசபையின் முதல்வருக்கோ எந்தவித தகவலும் தெரிவிக்காது தன்னிச்சையாக அகற்றிச் சென்றமை, ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் தாயகத்தில் சிறிலங்காப் படையினது ஈழத்தமிழர்களைத் தாங்கள் எப்படியும் நடத்துவோம் என்னும் சிங்கள பௌத்த பேரினவாத இனவெறியில் இன்று வரை எவ்வித மாற்றமும் இல்லாது தொடர்கின்றது என்பதற்கான சமகால உதாரணமாக உள்ளது என்பதனை இலக்கு பதிவு செய்கிறது.
அத்துடன் ஈழத்தமிழர் மக்கள் இறைமையின் அடையாளமாகிய திலீபனின் திருவுருவச்சிலை அகற்றல் மீண்டுமொரு இனஅழிப்பின் அடையாளமா? என்கின்ற அச்சமும் இலக்குக்கு எழுகின்றது. இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கான ஈழத்தமிழரின் தாயகம் முழுவதும் திலீபனின் திருவுருவச் சிலை அகற்றலால் மக்கள் கிளர்ந்து எழுந்து திருவுருவச் சிலை அகற்றலுக்கு எதிராக நீதி கோரி மீளவும் திருவுருவச் சிலையை அதே இடத்தில் நிறுவுமாறு போராடி வருகின்றனர். இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் மீன்வளத்துறை அமைச்சரும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர் சிலை அகற்றப்பட்டதற்கும் அரசாங்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென அறிவித்தார்.
ஆயினும் அவரது கூற்று உண்மைக்கு மாறானது என்பதை வெளிப்படுத்தும் வகையில் சிறிலங்காவின் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ 29.09.2026 இல் சிறிலங்காப் பொலிஸ் படையினரே நீதிமன்றத்தைக் கலந்தாலோசித்துச் சிலையினை அகற்றியதாக சிலை அகற்றலை அரசாங்கம் நியாயப்படுத்துகிறது என்கிற உண்மையை கொழும்பில் ஊடகவியலாளர்க்கு தெரிவித்தார். கூடவே அவர் “நாட்டின் சட்டம் தடைசெய்யப்பட்ட இயக்கம் ஒன்று தன் கொடியையோ சின்னத்தையோ வைத்து தன்னை வளர்க்க முற்படுவதை அனுமதிக்காது” என்கிற நியாயப்படுத்தலை ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியுள்ளார்.
1987 முதல் 2026 வரை 39 ஆண்டுகள் தியாகி திலீபனின் திருவுருவ நிழல்படங்கள் ஓவியங்கள் அனுமதிக்கப்பட்ட அதே நல்லூரில் திருவுருவம் வெண்கலச் சிலையாகப் பிரதியீடு செய்யப்பட்டவுடன்தான் அது தடை செய்யப்பட்ட இயக்க அடையாளமாகிறதா? தியாகி திலீபனின் திருவுருவம் அறவழிப் போராட்டத்தின் வலிமைக்கான உலக அடையாளம் என்பது கூட தேசிய மக்கள் சக்தியினருக்குத் தெரியவில்லையா?
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரே ஈழத்தமிழரின் அறவழிப்போராட்ட வரலாற்றின் அனைத்துலக ஒளிவீச்சாக தியாக தீபம் திலீபன் திகழ்கின்றார் என்ற உண்மையை மறுத்து, நல்லூரில் நடந்த அந்த உலக வரலாற்று நிகழ்வின் நினைவேந்தலையே தடை செய்யப்பட்ட இயக்கக் கொடியாகவும் சின்னமாகவும் சிறுமைப்படுத்தி வரலாற்றுத் திரிபுவாதத்தையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பிரதிநிதியாகத் தொடர்ந்து முன்னெடுக்கிறது என்பதை மீண்டும் உலகிற்கு உறுதி செய்துள்ளார்.
அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியாக தனது ஆரம்பத்தைக் கொண்ட தேசிய மக்கள் சக்தி ஈழத்தமிழ் மக்கள் உடைய விடுதலை’ இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கமென “மக்கள் விடுதலை” என்ற அடிப்படைக்கோட்பாட்டுக்கே எதிராக தொடர்ந்தும் வைத்துக் கொண்டு எவ்வாறு எல்லா இலங்கை மக்களிடையிலும் நல்லிணக்கத்தையும் ஏற்புடைய மாற்றங்களையும் கொண்டு வர முடியும் என்கின்ற கேள்வி தேசிய மக்கள் சக்தி அமைச்சரவை பேச்சாளரின் நியாயப்படுத்தலைப் பார்க்கையில் இலக்குக்கு எழுகிறது. இதுதானா தேசிய மக்கள் சக்தியின் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்க முயற்சியா என்பதனைச் சிறிலங்காவின் பிரதமரிடமும் சிறிலங்காவின் அரசத்தலைவர் அநுரகுமார திசநாயக்காவிடமும் அனைத்து உலகிலும் உலக இனமாக உள்ள ஈழத்தமிழினம் கேட்க வேண்டும் என்பது இலக்கின் இவ்வாரக் கருத்தாகவுள்ளது.
மேலும் 1981இல் சிறிலங்கா அரசாங்கத்தின் யாழ்ப்பாண நூலக எரிப்பைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் 80000 வாக்குகளை தனதாக்கி மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதே பண்பாட்டு இனஅழிப்பு செயலை தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலையை அகற்றியதன் மூலம் செய்து தனது தேர்தல் பேச்சுக்கள் வெறும் கவர்ச்சி மொழிகள் என்பதனை தனக்கு வாக்களித்தவர்களுக்கே நிரூபித்துள்ளது என்பதனை இலக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
இந்நிலையில் தியாகி திலீபனின் திருவுருவத்தை மீளவும் அவ்விடத்தில் நிலைநிறுத்துமாறு தாயகத்திலும் அனைத்து உலகிலும் ஈழத்தமிழர்கள் எழுப்பியுள்ள நீதிக்கான கோரிக்கையை தேசிய மக்கள் சக்தியின் அரசத்தலைவர் அநுரகுமார திசநாயக்கா நடைமுறைப்படுத்துவதே ஈழத்தமிழர்களின் மனங்களுக்கு அவரது படையினர் ஏற்படுத்தியுள்ள காயங்களுக்கான மருந்தாக அமையும் என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது. இலண்டனில் 03.10.2026 சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு பிரித்தானியத் தமிழர்கள், பிரித்தானியப் பிரதமரின் 10ஆம் இலக்க இல்லத்திலிருந்து வெளிவிவகார அமைச்சு வரை, சிறிலங்காவின் தியாகி திலீபனின் திருவுருவச்சிலை அகற்றலை ஈழத்தமிழரின் அடிப்படை மனித உரிமைகள் மேலான வன்முறையாக வெளிப்படுத்திச் சிறிலங்காவைக் கண்டித்து பேரெழுச்சி கொண்டெழுவது ஈழத்தமிழரின் அடிப்படை மனித உரிமைக்கான உலக நீதிக்கான குரலாக அனைத்து உலக நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.
இலங்கைத் தீவின் நவீன அரசியல் வரலாற்றில் 1921 இல் சிங்கள பெரும்பான்மை பிரித்தானிய காலனித்துவத்தால் நாட்டின் அரசியல் அதிகார சமூகமாக மாற்றப்பட்டது முதல் இன்று வரை, உலகம் அரசியல் சிக்கல்களையும் கொந்தளிப்புக்களையும் அனுபவிக்கும் காலகட்டங்களில், சிங்கள பௌத்த பேரினவாதம் தனது ஈழத்தமிழர்கள் மீதான மனித உரிமைகள் மீறல்களையும், மக்கள் உரிமைகள் மீறல்களையும், இனஅழிப்புச் செயற்பாடுகளையும் வேகப்படுத்தி, உலகின் கவனம் ஈழத்தமிழர் தேசிய பிரச்சினையில் கவனச்சிதைவு பெறுவதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஈழத்தமிழர்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை ஒடுக்குவது வரலாறாக உள்ளது. இன்றும் உலக அரசியல் பொருளாதாரம் பாதுகாப்பு அமைதி என்பன மிக மிகச் சிக்கலான நெருக்கடிகளை எதிர்நோக்கத் தொடங்கியுள்ள நிலையில் சிங்களப் பெரும்பான்மை ஈழத்தமிழர்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை ஒடுக்கத் தயங்காது.
இதற்கு உதாரணமாகவே சிறிலங்காவின் மத்திய வங்கியின் 2026ஆம் ஆண்டுக்கான சமூக பொருளாதாரத் தரவு அறிக்கையில் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் படி வடமாகாணத்தின் மக்கள் தொகை 1150148 ஆக இருக்கையில் வடமாகாணத்தின் மக்கள் தொகை 557000 ஆக அரைவாசி மக்கள் தொகை குறைக்கப்பட்டு பதியப்பட்டுள்ளமை அமைகிறது. பலாலியில் தனியார் காணிகளில் இராணுவ வைத்தியசாலையும் வேகமாக கட்டமைக்கப்படத் தொடங்கியுள்ளது. இவைகள் மீண்டும் ஒரு ஈழத்தமிழினஅழிப்பு நடைபெற்றால் அதனை மூடிமறைப்பதற்கான முன்னேற்பாடா என்கிற நியாயமான சந்தேகத்தை எழுப்புகிறது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தமக்கு இடையில் உள்ள விருப்பு வெறுப்புக்களை மறந்து தாயகத்தையும் மக்களையும் காக்கும் நோக்கைப் பொதுநன்மையாகக் கருதி ஒன்றிணைதல் என்பது காலத்தின் தேவையாகிறது என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது. இதற்கு தியாகி திலீபனின் திருவுருவச் சிலை அகற்றலுக்கான நீதி கோரும் போராட்டத்தில் அனைத்து ஈழத்தமிழரும் ஒன்றிணைவது முதற்படியாக அமைய வேண்டும் என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
ஆசிரியர்




