தியாக தீபம் திலீபனின் 12ம் நாள் உண்ணாநோன்பு அவன் உயிர்பிரிதலுடன் நிறைவுற்ற இந்நாளில், இறுதி நாள் நினைவுகளையும் அவர் உடலம் யாழ் பல்கலைகழக மருத்துவ பீடத்திற்கு கையளிக்கப்பட்டது வரையான நிகழ்வுகளையும் பகிர்கிறார் அவர் உற்ற தோழன் ராஜன்.
இறுதியாக பன்னிரு நாட்கள் பசித்திருந்த எங்கள் உறுதியின் உறைவிடம், தியாக தீபம் திலீபன் இந்திய, இலங்கை கூட்டு சதிக்கு எதிராக மக்களை கிளர்ந்தெள வைத்து இன்று வானகம் சென்றான்.
இன்றைய தினம் இந்தியாவிலிருந்து நெடுமாறன் ஐயாவும் வந்திருந்தார் அவருடன் ஈரோஸ் தலைவர் பாலகுமாரன் அண்ணனும் இரண்டாவது தடவை வந்திருந்தார். எங்கும் ஒரு வித நிசப்தம் நிலவியது. எமது மருத்துவ அணி திலீபனின் உயிர் பிரியும் தருணம் நெருங்கி விட்டதற்கான அறிகுறிகள் தென்பட்ட போது அதனை உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் தகுதிவாய்ந்த வைத்தியராக, வைத்திய நிபுணர் சிவகுமார் அவர்களை வேண்டிக் கொண்டபோது அவர் மனமுவந்து முன்வந்து பரிசோதனை செய்து திலீபனின் மரணத்தை 10:48 மணியளவில் அறிவித்து திலீபனின் கால்களில் விழுந்து வணங்கினார்.
திலீபனின் தந்தையார் ஐயோ என தலையில் கைவைத்து குளறி அழுதது இன்றும் என் மனக்கண்ணில் அழியாத நினைவாக இருந்து வாட்டுகிறது. இந்நிகழ்வை தொடர்ந்து அங்கிருந்த மக்களும் ஓ..வென அழத்தொடங்கினர். அண்ணா.. அண்ணா… என்று இளையோரும், தம்பி, ராசா, குஞ்சு, அப்பு என்று தம் குடும்ப உறவு ஒன்றைப் பிரிந்த வேதனையில், உறவு முறை சொல்லி ஈழத்தமிழினம் மட்டுமல்ல உலகத்தமிழரே அழுத குரல் வானுலகு நோக்கி சென்ற திலீபனை ஒருமுறை திரும்பி பார்க்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கண்கள் குருடாக, காதுகள் செவிடாக அதிகார மமதையில் இருந்த இந்திய இலங்கை அரசுகளின் கண்களிலோ காதுகளிலோ எதுவும் ஏறவில்லை. ஏன் இன்றுவரை தமிழ் தேசியம் என்பதன் வரைவிலக்கணம் தெரியாது தமிழருக்காக போராடுவதாக கூறிக்கொண்டு தமிழினத்தின் கருவறுத்த, கருவறுத்துக் கொண்டிருக்கும் கொலைகார போலிகளின் காதில் கூட அன்றும் விழவில்லை இன்றும் விழவில்லை.
அமைதியாக வாழ விரும்பிய ஈழத்தமிழினைத்தின் அமைதியை குலைத்து வந்த இலங்கை அரசும், அமைதி காப்பதாக வந்த இந்திய அரசும் சாத்வீகத்தின் எதிரிகள் என்பதையும், மனிதாபிமானத்தை மறந்தவை என்பதையும் திலீபன் உலகெங்கும் உரக்க உரைத்து விட்டு சென்றிருந்த போதும், எமதமைப்பின் மாபெரும் வெற்றிகளின் போது எம்முடன் உறவாடி எம்மை வீழ்த்தி 2009 இன் அவலங்களை தந்த உலக நாடுகளும் அந்த வரிசையில் சேர்ந்து கொண்ட போதும் இவ்வுலகில் மனு நீதி செத்துவிட்ட தென்பது உறுதியாகிய ஓர் நிலையிலே நாம் எமது விடுதலையை நோக்கி பயணிக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
திலீபனின் உடல் எடுத்து செல்லப்பட்டு உருமறைப்பு உடை மாற்றப்பட்டு .வீரனாக மக்கள் போராளிகள் இறுதி வணக்கம் செலுத்துவதற்காக நல்லூர் மேடைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த வேளையிலும் திலீபனின் உடைமைகளான அந்த வெள்ளை சேட் கறுப்பு நீளக் காற்சட்டை இறுதியாக அவர் பாவித்த பேனா மேடையில் அவர் வாசித்த புத்தகங்கள். அவர் இருந்த கதிரை. கட்டில். அவர் கையில் கட்டிய Q&Q மணிக்கூடு, என்பவற்றை அவரின் ஒரே சொத்தாக இருந்த சிறிய கருப்பு உடுப்பு பெட்டியில் பாதுகாப்பாக எடுத்து வைத்துக்கொண்டேன். அந்த கறுப்பு உடுப்பு பெட்டிக்கு ஓர் வரலாறு உண்டு. அது தலைவர், பாலா அண்ணா, திலீபன் மூவரையும் இந்திய பிரதமரின் அழைப்பின் பேரில் பூரி குப்தா அழைத்து செல்லப் போவதாகவும் அதில் தீலிபனும் வரவேண்டும் என்று தலைவர் கேட்டுக்கொண்டவுடன் அதற்கான ஆயத்தம் செய்வதற்கு வேண்டிய சிறு கறுப்பு உடுப்பு பெட்டி தான் அது (அதனை அந்த காலங்களில் வர்த்தகர்கள் 007 ஜேம்ஸ் பொண்ட் சூட்கேஸ் என்று சொல்வார்கள்).
எதையுமே தனக்கென வைத்திருக்காத திலீபன், அன்று அண்ணை சொன்னதும் விழுந்தடித்து கடைத்தெரு சென்று அந்த உடுப்பு பெட்டியை வாங்கியதும், அதில் சில உடைகளை வைத்து எடுத்து கொண்டு சுதுமலை அம்மன் கோவிலிலடியில் இருந்து ஹெலியில் கையசைத்து சென்றதும் நினைவில் வருகிறது. அவரின் நினைவாக எம்மிடம் இருந்த மேற்சொன்ன பொருட்களெல்லாம் அந்த கறுப்பு உடுப்பு பெட்டியில் வைத்து பாதுகாப்பாக எடுத்து வைத்தேன்.
பின்னொரு நாளில் இவை எமது தமிழீழ தேசிய நூதன சாலையில் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பது என் எண்ணமாக இருந்தது. எனினும் விரைவிலேயே ஆரம்பிக்கபட்ட இந்திய இராணுவ நடவடிக்கை எம்மை தலை மறைவு வாழ்வுக்கு தள்ளிய போதும், திலீபனின் ஆவணங்கள் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கில் அந்த பெட்டியை எடுத்து சென்று புன்னாலை கட்டுவனில் உள்ள எமது ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் பாதுகாப்பாக வைத்தேன். ஆனால் அவர்கள் எமது ஆதரவாளர்கள் என்பதால் தாக்கப்பட்டு அவ்வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன் அவர்களின் வீடும் தரைமட்டமாக்கப்பட்டது. திலீபனின் நினைவு பொருட்களும் எமக்கு கிட்டாமல் போனது.
விடுதலைப்புலிகள் எந்த சூழ்நிலையிலும் இறந்த காலத்தை எண்ணி அழுபவர்களோ மனம் சோர்ந்து படுப்பவர்களாகவோ தலைவராலும், தளபதிகளாலும் வளர்க்கப்படவில்லை. எல்லோரும் சிங்கள இன அழிப்பாளரிடமிருந்து எம் மண்ணை எப்படி விடுவிக்க வேண்டும் என்று சிந்திக்க வளர்க்கப்பட்டவர்கள். எம்மை தன்னுடனேயே கூட்டித் திரிந்து மக்கள் பணி செய்து தன்னைப் போல் வரவேண்டும் என்று வளர்த்தெடுத்த ஆயிரக்கணக்கான போராளிகளின் அர்ப்பணிப்பில் அவனது கனவாவான யாழ் கோட்டையில் எமது கொடி பறக்க வேண்டும் என்பது முதல் மக்களுக்கான பல்வேறு பணிகளை 1990 இன் பின்னர் எம் அமைப்பு செயலுரு கொடுத்து திலீபனின் பல்வேறு கனவுகளை நனவாக்கியது.
திலீபனின் பூதவுடல் நல்லூரில் மக்கள் போராளிகளின் கண்ணீர் அஞ்சலியை தொடர்ந்து திலீபனால் நியமிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் பிரசாத், தீலிபனின் உடல் அவர் கால்கள் பட்ட 435 கிராமங்களிற்கும் யாழ் குடா நாடு முழுவதும் மக்கள் மரியாதை செலுத்துவதற்கு உரிய வகையில் ஒழுங்கு செய்தார். எந்த வீதியால் சென்று வரவேண்டும் என்ற விபரங்களையும் தந்து காசி அண்ணாவையும் என்னையும் அறிவுறுத்தினார். இந்த ஒழுங்கமைப்பிற்குரிய அனைத்து வேலைகளையும் முழு அரசியற் போராளிகள் பிரசாத் தலைமையில் ஒழுங்கு படுத்தினார்கள்
வீதி வீதியாக தீபம் ஏந்தியும் மலர்கள் தூவியும் மக்கள் தங்கள் இறுதி மரியாதையை கண்ணீருடன் செலுத்தினார்கள். 28-9-1987 மதியம் அளவில் சுதுமலை அம்மன் மைதானத்ததில் மக்கள் கண்ணீர் வெள்ளத்தில் பிரசாத் தலைமையில் இறுதி வணக்க உரைகள் நடந்து தீலிபன் விரும்பிய படி யாழ் பல்கலைகழக மருத்துவ பீடத்திற்கு அவரின் புகழுடல் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சமுதாய மருத்துவ துறை பேராசிரியர் டாக்டர் சிவராஜா அவர்களிடம் பின்னாளில் எமது விமானப்படை தளபதியாகவிருந்து தீலிபன் நாளில் வீரமரணம் அடைந்த சங்கர் அண்ணா மற்றும் தேவர் அண்ணா ஆகியோர் திலீபன் உடலை உத்தியோக பூர்வமாக கையளித்தார்கள்.
ஆனால் திலீபன் நீ எங்கே ஐயா போகிறாய்? என்னும் காசியண்ணா வழிநெடுகிலும் ஒலிபெருக்கியில் அழைத்த வாசகமும், குரலும் அந்த ஒலியும் இன்னமும் அன்று யாழ் குடா நாட்டில் வாழ்ந்த மக்களின் காதுகளிற்குள்ளும் இன்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும், என் காதுகளிலும் இன்றும் ஒலித்து கொண்டிருக்கிறது.
எமது தலைவர் தன் வாழ்நாளின் மூன்றில் இரண்டு நாட்களை எமது மக்களின் விடுதலைக்காகவே அப்பணித்து பணி புரிந்தார். அவ்வாறான தளபதிகளையும் போராளிகளையும் உருவாக்கினார். இன்றும் அவர் விதைத்த வீர விதைகள் உலகெங்கும் உறங்கு நிலையில் உள்ளன. தலைவர் அவர்கள் மாவீரர் நாளிலும், திலீபன் நினைவு நாளிலும் உணாவிரதம் மேற்கொள்வது வழக்கம். அவ்வாறே பல போராளிகளும் மக்களும் கூட திலீபனின் நினைவாக இன்றும் உண்ணா நோன்பிருந்து அவன் வலியை நினைவு கூருவதுடன் தம் உள உறுதி தளராமல் போராட வேண்டும் எனும் சிந்தனையை வளர்த்தவர்களாகவே இருப்பதும் இன்றைய அரசின் நெருக்கடிகளும் நிச்சயமாக ஓர் மாபெரும் மக்கள் புரட்ச்சிக்கு வழிசமைக்கும் என நம்புவோம்.
அன்பான தமிழ் பேசும் உலகத் தமிழர்களே, ஒன்றாய் சிந்திக்கும் காலம் தமிழருக்கு வந்து விட்டது வரலாற்று காலம் முதல் போராடினோம், நாடுகளை ஆண்டோம், எம்மவர் சூழ்ச்சிகளாலும் எதிரிகள் சதிகளாலும் நாடற்ற ஓர் இனமாக இன்றும் தொடர்கிறோம்.
கோடிக்கணக்கில் இன்று உலகெங்கும் பரந்து கிடக்கின்ற தமிழினத்திற்கு ஒரு நாடு வேண்டும் இதற்கு எப்படி உலகத் தமிழராக எங்கள் அறிவை கூட்டாக பயன் படுத்த வேண்டும் என்று எல்லோருமாக சிந்திப்போம், செயற்படுவோம், செயற்படுத்துவோம்.
“திலீபன் நீ எங்கே ஐயா போகிறாய்” என்று கேட்டு வழியனுப்பினோம், இப்போ உலகத் தமிழர் நாம் எங்கே போகின்றோம்? என எல்லோர் மனங்களிலும். எங்களை நாங்களே ஒரு கேள்வியை கேட்டு, நாடு ஒன்று அமைக்க பாடுபட வேண்டும் என்று கேட்டு எனது பன்னிரண்டு நாட்களிலும் எழுந்த நினைவு பகிர்வை நிறைவு செய்கிறேன்.