எம்மைக் கட்டிப்போட்ட திலீபன்

1,030 Views

தியாக தீபம் திலீபனின் உண்ணாநோன்பின் 11ம் நாள் நினைவுகளைப் பதிவிடுகிறார் முன்னைநாள் யாழ். மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் ராஜன் அவர்கள்,

இன்று திலீபனின் உண்ணா நோன்பின் 11ம் நாள், அவரின் உடல் முற்றாக செயலிழந்து, இதய துடிப்பும் மூச்சும் பலவீனமாகி அசாதாரண நிலையை எட்டி விட்டது. அவரின் சாவு எப்போதும் நிகழலாம் எனும் நிலை. எம் முன்னே கிடக்கும் தோழனை ஒருசொட்டு நீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தவோ, எம்மிடம் உள்ள மருத்துவ வளங்களைப் பயன்படுத்தவோ முடியாத திலீபனின் கண்டிப்பான உத்தரவு, போராட்டத்தின் உறுதி, என்றும் எம் உறுதியிலிருந்து விலகக்கூடாது என்ற எம் தலைமையின் வளர்ப்பு என்று பல்வேறு காரணங்கள் எம்மை கட்டிப்போட்டிருந்தன.

தொண்டைமானாற்றில் நடைபெற்ற சண்டையில் திலீபனின் வயிற்றில் வெடி பட்டு யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டு, துப்பாக்கி சூட்டு காயத்தால் சிதைவடைந்த சிறுகுடலின் இரண்டு அங்குலம் வரையான சிறு பகுதி அகற்றப்பட்டு சிகிச்சையளிக்க பட்ட போது, மூன்றே நாட்களில் மருத்துவ முகாமுக்கு வந்து தொடர் சிகிச்சையும் ஓய்வும் பெற்று சில வாரங்களிலேயே களப்பணிக்கு திரும்பிய தோழன்.

மருத்துவ பிரிவின் வளர்ச்சியை ஏற்படுத்தியவன், மருத்துவ பீடத்தை உதறி தள்ளி போராட்டத்தில் இணைந்தவன். இன்று மருத்துவ வசதிகளை புறக்கணித்து தன் இனமான எழுச்சியின் அடையாளமாய், தமிழன் தன் இனத்திற்காய் எவ்வகையான உச்சம் தொடும் தியாகத்தையும் செய்ய தயங்காதவன் எனும் கருத்தை மெய்ப்பிக்க எம்மை கணங்களை எண்ண வைத்து காலத்தையும் கடவுளையும் சபிக்கவைத்து கண்மூடி கிடக்கிறான்.

யாழ். மாவட்ட குச்சொழுங்கை எங்கும் பம்பரமாய் திரிந்த திலீபன், இன்று நினைவிழந்து கிடக்கின்ற வேளையில்,  33ஆண்டுகளின்பின் அவனோடு சுற்றித் திரிந்து அரசியல் பணி செய்த அவரது நண்பர்களினதும், தாக்குதல் நடத்திய அவனது நண்பர்களும் நினைவுகளாய் என் மனதில் நிழலாடுகிறது.

ஓர் குடும்பமாய் நாங்கள் வாழ்ந்ததும் , ஒன்றாக கூடி இராணுவ பொலிஸ் நிலையங்களை சுற்றி காவலரண்களை அமைத்து காவல் காத்ததும், யாழ். குடாநாட்டு வீதிகளில் சைக்கிளில் திரிந்து அரசியல் பணி செய்து அமைப்பை வளர்ப்பதற்காக இளைஞர்களையும், யுவதிகளையும் இணைத்துக் கொள்வதற்காக பாடசாலைகள், கோயில்கள், வாசிகசாலைகள் எல்லாம் மக்களைக் கூட்டி, இளைஞர்கள், யுவதிகளைக் கூட்டி கலந்துரையாடல் செய்ததும், அந்தக் கலந்துரையாடலுக்கு திலீபனை அழைத்து, திலீபனும் வந்து மக்களோடு மக்களாக கலந்துரையாடல், கருத்துப் பரிமாற்றங்கள், கேள்வி பதில்கள் நடத்தியதும் இன்று நெஞ்சில் நிழலாடுகிறது.

இந்த வகையில் 33ஆண்டுகள் பின்னும் திலீபனுடன் சேர்ந்து பழகியவர்களில் என் மனதில் இன்று நினைவிற்கு வருபவர்களின் பெயர்களை இங்கு குறிப்பிட்டு ஆக வேண்டும். அந்த வகையில் இந்த நினைவுகளை பகிர்ந்து கொள்வதை சில நண்பர்கள் விரும்புவார்கள். சில நண்பர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால் வரலாறு பதிவுகளை பதிந்தே செல்லும் என்பதை அவர்கள் விரும்பியோ விரும்பா விட்டாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் சில பதிவுகளை நான் இங்கு பதிவிட விரும்புகிறேன்.

1987ஆம் ஆண்டிற்கு முன் யாழ். மாவட்டத்தில் திலீபன் அரசியல் பணி செய்யத் தொடங்கிய காலத்தில் திலீபனுடன், திலீபனுக்கு முன் அரசியல் பணி செய்தவர்களான கந்தையா அண்ணன், திலீபனுக்கு முந்தைய யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்தவர். அதற்கு முன்னர் திலீபனை இயக்கத்திற்கு இணைத்த சுகந்தன் யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாக இருந்தவர். பார்த்திபன் யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்தவர். சுகந்தன் சாவடைந்தார், பார்த்திபன், கந்தையா அண்ணன் ஆகியோர் வெளிநாட்டில் இருக்கின்றனர்.

சுகந்தனுக்கு முன்னர் யாழ். மாவட்டத்தில் அரசியல் பணி செய்தவர்கள் பண்டிதர் அண்ணா, மாத்தையா அண்ணா, காக்கா அண்ணா. காக்கா அண்ணா நாட்டில் இருக்கின்றார். மாத்தையா அண்ணா சாவடைந்தார். பண்டிதர் அண்ணா வீரச்சாவடைந்தார்.  இவ்வாறு செயற்பட்ட ஒவ்வொருவரதும் அர்ப்பணிப்பும் பணிகளுமே பிற்காலத்தில் பெரும் முப்படைகளைக் கொண்ட இயக்கமாக வளர்வதற்கு அடித்தளமாக இருந்ததென்றால், அது மிகையாகாது. அந்த வகையில் யாழ். நகர பிரதேசத்திற்கு வேலை செய்தவர்கள் காண்டீபன், விதுரன், கிரி, டானியல். இவர்களில் காண்டீபன், விதுரன், கிரி, ஆகியோர் வெளிநாடுகளில் இருக்கின்றனர். டானியல் வெளிநாட்டிற்கு வந்து சாவடைந்தார். குருநகர் பிரதேசத்திற்கு பொறுப்பாக இருந்த வாசன் வீரமரணம். தேவதாஸ் வீரமரணம், கலிஸ்டர் வெளிநாட்டிலிருக்கின்றார்.

அரியாலைப் பிரதேசம் றிச்சட், மலரவன் ஆகியோர் வெளிநாட்டிலிருக்கின்றனர். அகிலன் வீரமரணமடைந்தார். கோப்பாய் பிரதேசம் செய்தவர்கள். முரளி, காந்தி.  முரளி யாழ். மாவட்ட மாணவர் அமைப்பிற்கு பொறுப்பாக இருந்தவர். இவர்களுடன் நிரஞ்சன் இருந்தார். இவர்களில் முரளி, காந்தி வீரமரணம், நிரஞ்சன் வெளிநாட்டிலிருக்கின்றார்.

அச்சுவேலி பிறேம் அண்ணா, அமுதன் வெளிநாட்டில் இருக்கின்றனர். திருநெல்வேலி அரசியல் வேலைகள் செய்தவர்கள் சரா, நிஸாம். இருவரும் வீரமரணம்.  புன்னாலைக்கட்டுவன் ராஜன் வெளிநாட்டிலிருக்கின்றார். சூட் வீரமரணம். சுண்ணாகம் சுதன் வெளிநாட்டிலிருக்கின்றார். கஜன் நாட்டுப்பற்றாளராகினார். மானிப்பாய் மயூரன் வெளிநாட்டில் சாவடைந்தார். பாரத் வீரமரணமடைந்தார். அன்பு வீரமரணம்.

காங்கேசன்துறைப் பிரதேசத்தில் அரசியல் பணியாற்றிய கபிலன் வெளிநாட்டிலிருக்கின்றார். தெல்லிப்பளைப் பிரதேசத்தில் பணியாற்றிய மதி வீரமரணம். மல்லாகம் பிரதேசம் செய்த ரஞ்சன் வெளிநாடு வந்து சாவடைந்தார். வட்டுக்கோட்டை பிரதேசம் செய்த பிரசாத் வீரமரணம். ரசாத் வெளிநாட்டிலிருக்க வேண்டும். முஸ்லிம் பிரதேசம் செய்த பாரூக் வீரமரணம். தீவகம் எழிலன் வெளிநாட்டிலிருக்கின்றார். காரைநகர் அகிலன் வெளிநாட்டிலிருக்கின்றார்.

இவர்கள் எல்லோரும் வலிகாமப் பிரதேசத்தில்  திலீபனுடன் சேர்ந்து அரசியல் பணி செய்தவர்கள்.

தென்மராட்சிப் பிரதேசத்தில் திலீபனுடன் சேர்ந்து அரசியல் பணி செய்தவர்கள் கேடில்ஸ், பாப்பா, தினேஸ் வீரமரணம். பாக்கி குஞ்சு, மேத்தா ஆகியோர் வெளிநாட்டிலிருக்கின்றனர்.

வடமராட்சிப் பிரதேசத்தில் அரசியல் பணி செய்தவர்களில் குணம் அண்ணா, ஜெயா, ரவி, தங்கச்சி, சுக்கிளா ஆகியோர் வெளிநாடுகளில் இருக்கின்றனர். மேஜர் செங்கதிர், வீரமரணம்.

இப்படி பலர் திலீபனுடன் இருந்தவர்களில் வீரமரணம் அடைந்தவர்களும், சாவடைந்தவர்களும், வெளிநாட்டில் வாழும் நண்பர்களும் இருக்கின்றார்கள். இந்தப் பதிவுகள் மூலம் அந்த நண்பர்கள் திலீபனின் நினைவுகளை குறிப்புகளாக ஒவ்வொருவரும் பதிவு செய்ய வேண்டும் என்று இந்த வேளையிலே நான் கேட்டுக் கொள்கிறேன்.

அவருடன் பழகிய நண்பர்கள், ஜொனி அண்ணா, கிட்டண்ணா, மேஜர் அல்பேட், சங்கர், கண்ணாடி ராஜன், பைப், தீபன், நீர்வேலிப் பிரதேச அக்காச்சி ஆகியோர் வீரமரணமெய்தி விட்டனர். பப்பா, நந்தி அண்ணா, சிறி அண்ணா, ரவி அண்ணா, சண்முகம் அண்ணா, மதன் அண்ணா, சாந்தன் அண்ணா, பிரபா அண்ணா, சாஜகான் அண்ணா, முத்தண்ணா, சுப்பண்ணா, சுபாஸ் அண்ணா, ஜெகன், கொடி குப்பண்ணா, டிஸ்கோ ஆகியோர் வெளிநாட்டில் இருக்கின்றனர். ஊத்தை ரவி சாவடைந்தார்.

திலீபனை மிகவும் உலுப்பிய ஒரு நினைவு என் மனதில் தோன்றுகின்றது அந்நிகழ்வு 1984 நவம்பர் மாதத்தில் நடந்தது. அன்றையதினம் சுழிபுரம் பகுதியில் எமது சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த அரசியல் பிரிவு போராளிகள் ஆறு பேர் புளொட் அமைப்பினரால் சுட்டு கொல்லப்பட்டு புதைக்கப் பட்டிருந்தனர். அப்புதைகுழியை தோண்டி அவர்களின் உடலை பரிசோதனைக்காக வெளியே எடுத்த போது திலீபன் அந்த உடம்பில் செய்யப்பட்டிருந்த சித்திரவதைகளைப் பார்த்து திலீபன் கண்ணீர் சிந்தியதையும், அதி உச்ச கோபத்தில் கதறியதையும் மறக்க முடியாது.

யாழ். பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டு, யாழ். குடாநாடு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட போது, அதன் பின்பு தேசியத் தலைவர் இந்தியாவிலிருந்து யாழ் வந்து இறங்கி, அரசியல் வேலை செய்பவர்கள் அனைவரையும் இன்று சந்திக்க வருகின்றார் என்று சொல்லி, திருநெல்வேலியில் ஒரு வீட்டில் பத்து பதினைந்து பேர், முதன்முதலாக தலைவரைச் சந்திக்கப் போகின்றோம் என்ற  ஆவலோடும், ஆரவாரத்தோடும், அமர்ந்திருந்து எல்லோரும் சந்தோசப்பட்டோம். தலைவர் திலீபன், கிட்டண்ணா இரண்டு பேருடனும் வந்து நாங்கள் இருந்த மண்டபத்திற்குள் நுழைந்தார்.

கிட்டண்ணா ஒரு மாணவன் போல் கைகட்டி அமைதியாக, பயந்த சுபாவத்துடன் நின்றதை அன்று தான் நான், பார்த்தேன்.  என்னுடன் நின்றவர்களும் பார்த்தார்கள். திலீபன் அண்ணாவும், கிட்டண்ணாவும் எங்களை ஒவ்வொருவரையும் எந்த  பிரதேசங்களில் பணியாற்றுகிறோம் என்று தலைவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.  தலைவர் எல்லோரையும் பார்த்து ஒரு புன்முறுவலுடன் முதலாவதாக கேட்ட கேள்வி இன்றும் என் மனதில் பசுமையாக நிற்கின்றது. “சரி நீங்கள் எல்லாரும் அரசியல் வேலை செய்கிறனீங்கள், இன்று காலை பேப்பரில் வந்த தலையங்கங்களை சொல்லுங்கள் பார்ப்போம்” என்றார்.

அந்தக் காலத்தில் நாங்கள் எல்லோரும் பேப்பர் படிப்பதனால் தப்பித்தோம். எல்லோரும் சொன்னோம். எனவே அந்தக் கலந்துரையாடல் சந்தோசத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டு, நிறைவடைந்தது. அந்த நேரத்தில் திலீபனும் கிட்டண்ணாவும், சந்தோசமாக இருந்ததை மறக்க முடியாது.

முப்பத்தி மூன்று ஆண்டுகள் கடந்தாலும், இவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கை என்பது எங்கள் வரலாறாகி, இன்றும் இவர்களின் நினைவுகள் புதைகுழியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் நினைவுகள் என்பனவும் எங்கள் நெஞ்சை விட்டு அகலாது. அவரது கனவை மக்கள் புரட்சி மூலம் ஏற்படுத்த வேண்டிய ஒரு கட்டாய சூழலில் நாங்கள் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதைத் தான் உணரக்கூடியதாக இருக்கின்றது.

இந்த மக்கள் புரட்சி என்றால் என்ன, அந்தப் புரட்சி எப்படி உருவாகப் போகின்றது. அதற்குரிய காலம் தான் எங்களுக்கு எப்பொழுது பிறக்கப் போகின்றது என்பது எல்லோரின் மனங்களிலும் எழுகின்ற ஒரு கேள்வியாகவும் “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்று நாம் ஒவ்வொருவரும் சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலை இன்றைக்கு இல்லை என்பதையும்  இன்றைய யதார்த்தம் உணர்த்தி நிற்கின்றது.

அந்த வகையில், “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்று புதுவை இரத்தினதுரை எழுதிய வரிகளை நாங்கள் எல்லோரும் நிதர்சனமாக்க வேண்டிய ஒரு சூழலில், ஒரு கட்டாயத்தில், புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆகவே எங்களுடைய எஞ்சிய வாழ்நாளை  அர்த்தமுள்ளதாக்க வேண்டும் என்றால், மாவீரர்கள், எங்கள் நாட்டிற்காக தியாகம் செய்த நாட்டுப் பற்றாளர்கள், மக்கள் எல்லோருடைய தியாகத்திற்கும் தீர்வாக “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்று எங்கள் சொந்த மண்ணை நாங்கள் உரிமைகளுடன் ஆளக்கூடிய ஒரு சூழலை களத்திலும் புலத்திலும் உருவாக்கி நம் தாயகம் நோக்கிய பயணத்தை தொடர்வதன் மூலமே சாத்தியமாகும்.

Leave a Reply