தியாக தீபம் திலீபனின் உண்ணாநோன்பின் பத்தாம் நாள் நினைவுகளுடன் திலீபனையும், தோழர்களையும் அவர்கள் நினைவுடன் எம்முன் உள்ள பணிகளையும் பதிவிடுகிறார் முன்னைநாள் யாழ். மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் ராஜன் அவர்கள்,
பத்தாம் நாள் திலீபனை நாங்கள் தான் பார்க்க முடிந்தது. அவரால் எங்களைப் பார்க்க முடியாத நிலை, நினைக்க முடியாத நிலை. மேடையில் நிற்கவும் வேண்டும். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் நின்றவர்களுக்கு தலை சுற்றுகிறதா? தலை இடிக்கிறதா? அல்லது தலையில் யாரும் பாரம் வைத்து விட்டார்களா? மனம் அழுகிறது.
கண்ணீரை காணவில்லை, உறுதியும், இனமான உணர்வும் மட்டுமே எஞ்சியிருக்க, உடல் உணர்வுகளும், செயற்பாடுகளும் மந்தமாகி எம்மில் இருந்து திலீபன் தூரமாகிப் போகிறான் என்பதும், இந்த தாங்க முடியாத துயரத்தையும், எம் எதிரே தோன்றவுள்ள நெருக்கடிமிக்க போராட்ட நாட்களையும் எண்ணிப் பார்க்க முடியவில்லை.
பத்தாம் நாள் அங்கு நின்ற இலட்சக்கணக்கான மக்கள் எல்லோரும் இந்திய அரசை நம்பி ஏமாந்து விட்டோம் என்ற உணர்வுடன் குழறி அழுதார்கள். திரு. டிக்சித் ஒன்பதாம் நாள் நேர்மையான முடிவு எடுத்திருந்தால், முள்ளிவாய்க்கால் அவலம் கூட நடந்திருக்காது.
33 ஆண்டுகளிற்கு முன் இந்தியாவின் அரசியல் சதுரங்க ஆட்டத்தை உண்மையான சதுரங்க ஆட்ட வீரன் திலீபன் விளங்கித் தான் இந்த முடிவை எடுத்தாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. 1986 இல் லெப். கேணல் பைப் என்று அழைக்கப்படும் போராளி ( தற்போது வீரமரணம் அடைந்து விட்டார்) காயப்பட்டு சிறுப்பிட்டியில் உள்ள அவரின் சொந்த வீட்டில் இருக்கும் போது, இரவு திலீபன் வானில் அவரை பார்க்க சென்றிருந்தார். போகும் போது புன்னாலைக்கட்டுவன் பிரதேசப் பொறுப்பாளராக இருந்த என்னையும் அழைத்துச் செல்வார். அப்போது எனக்கு வான் ஓட பழக்கி விடுவார். முதன்முதல் எனக்கு மோட்டார் சைக்கிள் பழக்கியவர் மேஜர் அல்பேட். வான் ஓடப் பழக்கியவர் திலீபன். முதல் நாள் பைப் வீட்டிற்கு திரும்பும் ஒழுங்கை மதிலை உரசிக் கொண்டு வானை திருப்பி விட்டேன். ஆனால் திலீபனோ நான் பயப்பட்ட மாதிரி நடந்து கொள்ளாது, எனக்கு ஊக்கம் தருவது போல் கதைத்து வான் ஓடக் கற்றுத் தந்தார்.
பைப் வீட்டை போய் அவருடன் சதுரங்கம் விளையாடுவார். பைப்பின் அக்கா அம்மா உணவு பரிமாறுவார்கள். மாணவப் பருவத்தில் விளையாடத் தொடங்கிய சதுரங்க வீரன், சதுரங்க விளையாட்டை இறுதி வரை விளையாடி மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறான்.
1983 இலிருந்து என்னுடன் பழகிய திலீபன், எனக்கு தெரிந்து விடுதலைக்காய் சிந்திக்காமல் இருந்திருப்பாரானால், அது அவர் வயித்தில் ஒப்பிரேசன் செய்யும் போது மயக்கிய வேளை மட்டுமாகத் தானிருக்கும். அடுத்து உண்ணாவிரதம் இருக்கும் போது பத்தாம் நாள் முதலான கடைசி மூன்று நாட்களும் என்று தான் என்னால் கூறமுடியும். அப்படிப்பட்ட ஒரு நண்பனை இழந்து 33 வருடங்கள் ஆனாலும் அவனுடன் பழகிய நாட்கள், நடந்த சம்பவங்கள் எல்லாம் மறக்கப்படாமல் பதிவு செய்யப்படவேண்டிய, பாதுகாக்க வேண்டிய, எம்மிடம் இருந்து அடுத்த சந்ததிக்கு கடத்தப் பட வேண்டியதும். அதற்காக நாம் எல்லோரும் உழைப்பதும் தான் திலீபன் மற்றும் மாவீரர்கள் எல்லோருக்கும் செய்யும் காணிக்கையாகவிருக்கும்.
இந்த வேளையில், திலீபன் மற்றும், கிட்டண்ணாவுடன் சேர்ந்து உழைத்த நண்பர்களும் நினைவுக்கு வந்து போகின்றார்கள் இதில் பலபேர் மாவீர்களாக இருக்கின்றார்கள் சில பேர் பல்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். அவர்களையும், அவர்கள் நாட்டின் விடுதலைக்காய் உழைத்த நாட்களையும் மறக்க முடியாது. யாராலும் மறைக்கவும் முடியாது. இதற்கு ஒரு நல்ல உதாரணம், இன்று வாழும் பல நண்பர்களுக்கும் தெரியும். காலத்தின் தேவை கருதி இந்த வரலாற்று பதிவில் பதிவிடுகிறேன்.
1993 இற்கு பின்னர் நிதர்சனம் நிறுவனத்திற்கு பொறுப்பாக புதிய போராளிகள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் புதிய சிந்தனையோடு நிர்வாகம் நடத்தத் தொடங்கினார்கள். அதில் ஒரு விடயமாக நிதர்சனம் தொலைக்காட்சியின் வரலாற்றை ஒரு புத்தகமாக எழுதி அண்ணையிடம் (தலைவரிடம்) காட்டினார்கள். எழுதியவர் பரதன் அண்ணாவின் பெயரை குறிப்பிடாது தவறுதலாக விட்டுவிட்டார். தலைவர் எழுதியவரை அழைத்து, தம்பி வரலாறுகளை உள்ளபடி எழுத வேண்டும். அதில் எழுதும் போது தவறுகள் விடக்கூடாது. பரதன் பெயர் வராமல் நிதர்சனம் வரலாறு இருக்க முடியாது என்று அறிவுறுத்திவிட்டு, எதிரியானலும் சரி, துரோகியானாலும் சரி, விலகியவர்களானாலும் சரி, அவரவர் அமைப்பில் இருந்து செய்த வேலைகளை வரலாறு என்று எழுதும் போது குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
எங்கள் இயக்க வரலாறு என்பது அவரவர் தங்கள் வரலாற்றை எழுதும் போது தான் முழுமை பெறும் என்றும், அண்ணை புதுவை இரத்தினதுரை அவர்களுடன் கதைக்கும் போது ஒரு தடவை கூறியதாக புதுவை அண்ணா கூறினார்.
இந்த வேளையில் ஒன்றை நான் குறிப்பிட வேண்டும். தலைவர்கள் நல்லவர்கள். ஆனால் தகவல்களை சில பேர் கற்பனையிலும், தவறுதலாகவும் தெரிவிப்பதால், தலைவர்கள் தவறான முடிவுகளை எடுத்ததும் உண்டு. அவர்களும் மனிதர்கள் தானே. உலகத்தில் யாரும் தவறே செய்யவில்லை என கூறினால், அது மிகைப்படுத்தலாகி விடும்.
விடுதலைப்புலிகள் அமைப்பு இல்லை என்றாகிய பின்பும், புலி எதிர்ப்பு கருத்துக்களை முன்வைத்தும், புலி ஆதரவு கருத்துக்களை முன்வைத்தும் தமிழ் தேசிய அரசியல் செய்வோர், தழினத்தின் தேசிய அரசியலின் இலக்கினில் ஏதாவது ஒன்றை தமிழ் மக்களிற்கு பெற்றுக் கொடுத்தார்களா?
70 ஆண்டுகளாகியும் சிங்கள ஆட்சியாளர்களுடன் அகிம்சைப் போராட்டம், ஆயுதப் போராட்டம் நடாத்திய போதும் எங்கள் உரிமைகளை நிலைநாட்ட முடியாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
இந்த போராட்டங்கள் இவ்வளவு காலமும், பெற்ற வெற்றிகள், எம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை விருத்தி, உலகின் சுயநல போக்கு பற்றிய புரிதல், இழந்த உயிர்கள், சொத்துக்கள், புலம்பெயர்ந்த வாழ்வின் இன்பங்கள், துயரங்கள், வளர்ச்சிகள் எல்லாவற்றிக்கும் அடிப்படையாக அமைந்தன.
இந்நிலையில் தமிழர் மீதான இன அழிப்பை நிறுத்த உலகம் ஏற்கும் மனித குலத்துக்கான, ஓர் தேசிய இனத்துக்கான நீதியை வலியுறுத்தி பெற நாம் என்ன செய்தோம்? செய்து கொண்டிருக்கின்றோம்? என்று நாம் செல்லும் பாதையை மீளாய்வு செய்து எம் பாதையையும் செப்பனிட்டு புதிய திறன் கொண்ட அணியாக பயணிக்க வேண்டியுள்ளது. திலீபன் விரும்பிய தமிழரின் சமதர்ம சோஷலிச தேசத்தை உருவாக்க அணிதிரள்வோம்.