சிங்கள மக்களுக்கு தமிழர்களின் பிரச்சினைகளை தெளிவு படுத்த வேண்டிய தேவை இன்னும் உள்ளது, அதற்கு மொழி அவசியம்….

இலங்கையில் யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் நிறைவு: சிறையில் இருக்கும் தமிழ்  அரசியல் கைதிகளின் நிலை என்ன? (காணொளி) - BBC News தமிழ்

ஒரு அரசியல் கைதியின்சிறைப்பட்டறிவு- விடுதலையின் பின் இலக்கு ஊடகத்துடன் தனது அனுபவங்களை பகிர்கின்றார் செல்லையா சதீஸ்குமார்(இறுதி பகுதி)

 கேள்வி

நீங்கள் சிறையில் இருந்த காலப்பகுதிகளில் உங்கள் மனைவி எவ்வாறான சிக்கல்களை எதிர்கொண்டார், எவ்வாறு அவற்றைக்கடந்து வந்தார் என்று கூற முடியுமா?

பதில்

ஓம், கணவன், மனைவியுடன் இல்லை என்றால் எங்களுடைய சமூகத்தில பேச்சே வேறு தான். அது கைது செய்யப்பட்டு கணவன் சிறையில் இருந்தாலோ, காணாமல் போயிருந்தாலோ, இல்லை மரணித்திருந்தாலோ சமூகத்தின் பார்வை வேறுதான். ஓர் அனுதாபமோ, அந்தக் குடும்பத்திற்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையும் இருக்காது.  எவ்வாறெல்லாம் தவறாக சித்தரிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் துன்பப்படுத்தி போடும் ஒரு பெண்ணை. இந்த சூழலில் எனது மனைவி கடுமையான நெருக்கடிகளையும் வேதனைகளையும் சந்தித்தார். என்னுடைய வழக்கு தொடர்பாக காவல்துறைக்கு நீதி மன்றங்களுக்கு வந்திருந்தாலும், கடுமையான வார்த்தைப்பிரயோகங்களால் தான் அவர்கள் பேசுவார்கள். அத்தோடு அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான போராட்டங்களில் கலந்து கொண்டாலும் அதன் பின் விசாரணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது அவரை மிகவும் பாதித்திருந்தது.

இலங்கையைப் பொறுத்தவரையில் எந்தவொரு வழக்கும் ஓரிரு வருடங்களுக்குள் முடிவுக்கு வராது என்று தெரியும். குறைந்தது ஒரு பத்து வருடமாவது எடுக்கும். இந்த காலப்பகுதியில் மனைவியின் தந்தையார் தான் குடும்ப செலவுகளையும் வழக்கு செலவுகளையும் கவனித்து வந்தார். அதனால் நான் ஒரு முடிவு எடுத்தேன். மனைவியையும் மகளையும் இனி நாட்டில் வைத்திருக்க கூடாதென்று. அதனால் என்னுடைய நிலத்தில் பாதியை விற்று விட்டு,  மனைவியை இந்தியாவிற்கு அனுப்பி அங்கிருந்து  பிரான்சுக்கு சென்றார். அவருக்கு அந்நாட்டு குடியுரிமையும் கிடைத்துவிட்டது. நான்கு வருடத்திற்கு பின் மகளையும் எடுத்துக்கொண்டார். அதுவரையிலும் மகள் மனைவியின் குடும்பத்துடன் இருந்தாள். இப்போது பிரச்சினையில்லை. மகள் அங்கு உயர்தரம் படிக்கிறாள்.

கேள்வி-

சரி, நீங்கள் சிறையில் வழக்கு நடவடிக்கைகளோடு புத்தகங்களையும் எழுதியுள்ளீர்கள், அத்தோடு படித்து பரீட்சைகளையும் எழுதியுள்ளீர்கள் இது குறித்து கூறுங்கள்.

பதில்

ஒவ்வொரு சிறைச்சாலையும் அதில் உள்ளவர்களின் செயற்பாடு மற்றும் மன நிலைகள் மாறு பட்டிருக்கும் ஒரு சிறைச்சாலையில் உள்ள செயற்பாடுகள் நடைமுறைகள் மற்ற சிறைச்சாலைகளில் இருக்காது. தமிழர்கள் என்றாலே துவேசத்துடன் தான் நடந்துகொள்வார்கள். கெட்டவார்த்தைகள் அதிகம் எம்மை நோக்கி பேசுவார்கள். கடுமையாக நடந்துகொள்வார்கள்.

சில சிறைச்சாலைகளில் சிறை அதிகாரிகளுடன்  கதைக்க முடியாது. என்னை மகசீன் சிறைச்சாலைக்கு மாற்றிய பின் சூழல் கொஞ்சம் மாற்றம் பெற்றது. சிறை அதிகாரிகளுடன் கதைக்க முடிந்தது. முக்கியமாக அனுராதபுர சிறைச்சாலையை விட மாறுபட்டிருந்தது. கொஞ்சம் நாகரீகமாக நடந்துகொண்டார்கள்.

ஓரளவு புத்தகங்கள் படிப்பதற்குக் கிடைத்தது. எழுதுவதற்கும் வசதிகள் கிடைத்தன. எனது வீட்டில் இருந்து வரும் பொருட்களை எடுத்து வைத்து பின் தருவார்கள்.  நான் அந்த சிறைக்கு செல்லும் போது பலர் இருந்தனர். 1996ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்கள் கூட இருந்தார்கள்.  இந்த சூழலில் நான் கவிதைகள், கதைகள் எழுத ஆரம்பித்தேன். நிறைய எழுதியுள்ளேன். ஆனால் சிறைக்குள் கலவரங்கள் வரும் போது அவை எரிக்கப்பட்டு விடும். அதே போல் சிறை அதிகாரிகளால் சோதனைக்குள்ளாக்கப்படும் போதும் நான் எழுதி வைத்திருந்த நிறைய என்னுடைய எழுத்துக்கள் அழிக்கப்பட்டு விட்டன.

இதையடுத்து சிறையில் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை என சில மாற்றங்களைக்கொண்டு வந்தார்கள். அதன்போதுதான் 2012ம் ஆண்டு முதல் புத்தகம் எழுதினேன். அதைத் தொடர்ந்து ஆறு புத்தகங்களை எழுதினேன்.

கேள்வி

இன்னும் எத்தனை பேர் விடுதலைக்காக காத்திருக்கின்றனர்?

என்னுடைய விடுதலைக்குப் பின் தமிழ் அரசியல் கைதிகள் என்ற தலைப்புக்குக் கீழ் மொத்தம் 24 கைதிகள் இருக்கின்றனர். இவர்களை இரண்டாகப்பிரிக்கலாம்.

அதில் பத்துக் கைதிகள் நீதி மன்றங்களால் தண்டிக்கப்பட்ட தண்டனைக்கைதிகள். அதிலும் இரண்டாகப்பிரித்தால் அதில் உள்ளவர்களில் இருவர் மரணதண்டனைக்கைதிகள். ஏழு பேர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். ஒருவருக்கு இரு நூறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மிகுதி 14 பேர் உள்ளனர். அவர்களை நாம்   விளக்கமறியல் சந்தேக நபர்கள் என்று கூறுவோம்.  அவர்களுக்கு எதிராக மேல் நீதி மன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டு வழக்கு விசாரணைக்கு முகம் கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்களின் வழக்கு விசாரணையையடுத்து நீதி மன்றத்தால் விடுவிக்கவும் முடியும் தண்டிக்கவும் முடியும்.

இந்த தரப்புக்கும், நல்லிணக்கம் என்று பேசப்படுகின்ற, அதாவது ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற வகையில், யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் முடிந்துவிட்டன என்று பேசப்படுகின்ற காலத்தில் அவர்களும் சுதந்திரக்காற்றை சுவாசிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்ற காலத்தில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சொன்னால், சட்ட நீதிக்கு அப்பால், அரசியல் தீர்மானம் ஒன்று ஏற்படுத்த வேண்டும்.   சட்ட நீதி என்று போனால் மேலும் அவர்களின் சிறைக்காலம் நீளும். ஆகவே அரசியல் தீர்மானம் ஒன்று எடுத்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்தால் தான் இந்த 24 கைதிகளுக்கும் விடுதலை கிடைக்கும்.

இதை நாம் இரண்டு பிரிவாக பார்க்கலாம்,

1 – இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசினுடைய அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள ஜனாதிபதிக்குரிய உயர் அதிகாரம். அந்த அதிகாரத்தில் அவர் ஓர் மன்னிப்பையோ, அல்லது தண்டனைக்குறைப்பையோ செய்ய முடியும். இது நீதி மன்றங்காளால் தண்டிக்கப்பட்ட கைதிகளுக்கு மாத்திரம் செய்ய முடியும். இந்த அடிப்படையில்தான் என்னுடைய விடுதலையும் சாத்தியப்பட்டிருக்கின்றது.

2- வழக்குக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கின்ற 14 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் தான் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

ஆகவே சட்டமா அதிபருடனும் நீதி அமைச்சருடனும் ஓர் பேச்சுவார்த்தையை நடத்தி ஜனாதிபதி ஒரு ஆலாசனையை வழங்கி, தீர்வு காண முடியும் என்று கடந்த கால பட்டறிவுகள் சொல்லியிருக்கு. அதாவது நாட்டினுடைய தேச நலனை அடிப்படையாகக் கொண்டு அவாகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை சட்டமா அதிபர் மீளப்பெற வேண்டும். அவ்வாறு அவர்களின் வழக்குகள் மீளப்பெறப்பட்டால் இந்த 14 சந்தேக நபர்களும் விடுதலை பெறுவார்கள். இந்த இரண்டு வழியும் தான் அவர்கள் 24 பேரும் விடுதலை பெறுவதற்கு இருக்கும் வழி என்று நான் நினைக்கின்றேன்.

கேள்வி-

விடுதலைக்குப் பின் உங்களுடைய மன நிலை எவ்வாறு உள்ளது? என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

பதில்-

நான் சிறையில் இருந்து வெளியில் வரும் போது கண்ணீரோடு தான் வந்தேன். ஏனெனில் ஏனையவர்களும் விடுதலை பெற வேண்டும். நான் அவர்களின் விடுதலைக்காக உதவுவேன் என்று அவர்களும் நம்புகின்றனர். ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஆழமாக உள்ளது.

நான் உண்மையிலேயே முதலில் நன்றி சொல்ல விரும்புவது ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்களுக்குத்தான். அவர்கள் தான் பல நெருக்கடிக்கு மத்தியில் எமது பிரச்சினைகளை பேசினார்கள். அது எமது விடுதலைக்கும் பெரும் உதவியாக உள்ளது. அத்தோடு சமூக செயற்பாட்டாளர்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

கேள்வி-

உங்களுடைய கைது, விடுதலை குறித்து  சிறையில் உள்ள சிங்கள சகோதரர்களின் மன நிலை என்ன?

முதலில் எமக்கு மொழிப்பிரச்சினை உண்டு. நாம் சிங்கள மொழியை கற்றிருக்க வேண்டும். அவர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். இது வந்து சதீசுக்கும் சம்பந்துக்கும் இடையிலான உரையாடலுக்கு இல்லை. இது இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள இரு மொழிகளையும் இருவரும் கற்றுத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் எம்முடைய பிரச்சினைகளை அவர்களுக்கு கூற முடியும். எம்மைக் கைது செய்பவர்கள் சிங்கள இராணுவத்தினர். அவர்களுக்கு நாம் சொல்வது புரியாது. எனக்கு அவர்கள் சொல்வது புரியாது. இதனால் நிறைய சிக்கல்களை நாம் எதிர்கொள்கின்றோம்.

தமிழர்களின் பிரச்சினைகள் அங்குள்ள சிங்கள மக்களுக்கு தெரியாது. நாம் பழகிய வரையில் அவர்களுக்கு எதுவும் தெரியாது. விடுதலைப்போராட்டம் குறித்து அவர்கள் ஒரு கற்பனையில் இருந்தார்கள். எம்முடன் பேசிய பின் அந்த கற்பனையில் இருந்து அவர்கள் நொறுங்கிப் போனார்கள். நாம் ஏன் போராடுகின்றோம் என்றே அவர்களுக்குத் தெரியாது.  இதன் பின் நான் சிங்கள மொழி கொஞ்சம் படித்துக்கொண்டேன்.  நாம் அவர்களின் மொழியில் எங்களுடைய பிரச்சினைகளை சொல்லும் போது அவர்களுக்கு நாம் வஞ்சிக்கப்படுகின்றோம் என்பது புரிகின்றது.  எனவே எமது பிரச்சனைகளை அடித்தட்டு சிங்கள மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். சிங்கள மக்களுக்கு தமிழர்களின் பிரச்சினைகளை தெளிவு படுத்த வேண்டிய தேவை இன்னும் உள்ளது, அதற்கு மொழி அவசியம்….