மத்திய கிழக்கில் 10 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் உள்ளதாக தகவல்!

மத்திய கிழக்கின் 14 நாடுகளில் தற்போது 10 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் வசித்து வருவதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த தரவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி வரையான தரவுகளின்படி, மொத்தம் 10 இலட்சத்து 7 ஆயிரத்து 855 இலங்கையர்கள் மத்திய கிழக்கில் தங்கியுள்ளனர்.

இதன்படி ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3 இலட்சத்து 50 ஆயிரம் இலங்கையர்களும், சவுதி அரேபியாவில் 2 இலட்சத்து 46 ஆயிரத்து 139 இலங்கையர்களும், குவைத்தில் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் இலங்கையர்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கட்டாரில் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் இலங்கையர்களும், அதைத் தொடர்ந்து ஜோர்தானில் 14 ஆயிரத்து 500 இலங்கையர்களும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஓமானில் 32 ஆயிரம் இலங்கையர்களும் பஹ்ரைனில் 13 ஆயிரத்து 130 இலங்கையர்களும் உள்ளதாகத் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர ஈரான், சிரியா, ஏமன் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளிலும் சிறிய அளவிலான இலங்கையர்கள் உள்ளனர்.  மத்திய கிழக்கில் உள்ள வெளிநாட்டுப் பணியாளர்களில் இலங்கையர்கள் கணிசமான பங்கினை வகிக்கின்றனர்.

குறிப்பாக வீட்டுப் பணி, கட்டுமானத் துறை, விருந்தோம்பல் மற்றும் சுகாதாரத் துறை என்பவற்றில் அவர்கள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் அனுப்பும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான தூணாக விளங்குகின்றது.

இந்தநிலையில் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல் நிலையை அடுத்து, பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.