ஐ.நா தனக்கு தானே நிர்ணயித்த காலஎல்லை முடிந்தது – அடுத்தது என்ன?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 51 ஆவது அமர்வை தொடர்ந்து இலங்கை தொடர்பான அறிக்கையை அதன் தலைவர் இந்த வாரம் வெளியிட்டுள்ளார்.

வழமைபோல இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மென்மையான வார்த்தைகளால் கண்டனங்களும், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் கரிசனைகளும், சிங்கள மக்கள் சந்திக்கும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் காத்திரமான கருத்துக்களும், சிங்கள மக்கள்மீது பயன்படுத்தப்பட்ட படைத்துறை வன்முறைகள் தொடர்பில் கடுமையான வார்த்தைகளும் கொண்டதாக வெளிவந்துள்ள அறிக்கையில் தமிழர் தரப்பு தொடர்பிலும் சில கருத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இலங்கையில் படையினரின் பிரசன்னத்தை குறைப்பது, சுகாதாரத்துறையை விட டைத்தரப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவது தொடர்பிலும் அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டபோது கண்டுகொள்ளப்படாத படையினரின் நடவடிக்கைகள் சிங்கள மக்கள் மீது படையினரின் நடவடிக்கைகள ஏவி விடப்பட்டபோது கண்டுகொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கில் படையினரின் பிரசன்னம், காணாமல்போனவர்கள் போராட்டம் அதன் மீதான படையிரின் அச்சுறுத்தல்கள் மற்றும் முன்னாள் போராளிகள் மீதான வன்முறைகள் தொடர்பிலும் வழமைபோல கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அறிக்கையில் இறுதியாக பரிந்துரைக்கப்பட்ட 17 விடயங்களில் வடக்கு கிழக்கில் படையினர் வசம் உள்ள காணிகளை மீள ஒப்படைப்பது, அங்கு படையினரின் பிரசன்னத்தை குறைப்பது, படைத்துறை செலவீனங்களை குறைப்பது, மனித உரிமை அமைப்பு மற்றும் நீதித்துறை போன்றவற்றை சுயாதீனமாக்குவது, காணாமல்போனோர் தொடர்பில் அமைக்கப்பட்ட அலுவலகத்தின் செயற்பாடுகளை சுயாதீனமாக்குவது, உண்மைகளை கண்டறிவது, மத வழிபாட்டு தலங்களை அமைக்கும்போது ஏனையவர்களின் கருத்துக்களை கேட்பது பயங்கரவாத தடைச்சட்டத்தை அனைத்துலக விதிகளுக்கு அமைவாக பயன்படுத்துவது போன்ற பரிந்துரைகள் தமிழ் மக்களுடன் தொடர்புபட்ட விடயங்களாக இலங்கை அரசுக்கு முன்வைக்கபபட்டுள்ளன.

அதேசமயம், ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்புரிமை நாடுகள் இலங்கையின் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பில் தொடர்ந்து கவனித்து அறிக்ககைளை அனுப்ப வேண்டும், மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் தீர்மானம் 46/1 இல் பரிந்துரைக்கப்பட்டவற்றை மீள நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கையில் அனைத்து தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் அனைத்துலக நீதிப் பொறிமுறைக்கு அமைய விசாரணைகள் செய்யப்பட வேண்டும், அது அனைத்துலக வலையமைப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஊடாக இடம்பெறவேண்டும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் குற்றமிழைத்தவர்களின் சொத்துக்களை முடக்குதல் மற்றும் பயணத்தடைகளை ஏற்படுத்துதல் போன்ற வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் போன்ற பரிந்துரைகள் உறுப்பு நாடுகளை நோக்கி முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் பரிந்துரைகள்  எதற்கும் கால எல்லைகளோ அல்லது நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடுகளோ வழங்கப்படவில்லை. மாறாக தமிழ் கட்சிகள் கேட்டது போல புதிய தீர்மானத்திற்கும் பரிந்துரை செய்யப்படவில்லை.

2021 ஆம் ஆண்டு மார்ச்சில் இடம்பெற்ற 46 அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 46/1 இல் மேற்கூறப்பட்ட அனைத்து விடையங்களும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. அதற்கு மேலதிகமாக இனநல்லிணக்கப்பாடு மற்றும் நீதி வழங்குதல் தொடர்பிலான பரிந்துரைகளை இலங்கை நிறைவேற்றுகின்றதா என்பதை அவதானித்து 48 ஆவது அமர்வில் வாய்மொழியிலான அறிக்கையும், எழுத்து மூலமான அறிக்கை 49 ஆவது அமர்விலும், 51 ஆவது அமர்வில் அடுத்த நடவடிக்கை என்ன என்பது தொடர்பிலான தீர்மானமும் எட்டப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எந்த பரிந்துரையையும் இலங்கை நிறைவேற்றவில்லை என்பது உலகம் அறிந்ததே இந்த நிலையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குமு தனது 46/1 தீர்மானத்தில் கூறப்பட்டதை நிறைவேற்றுமா என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாகும்.