மலையக மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்த ஐ.நா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்-கணபதி கனகராஜ்

119 Views

இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி கனகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடிமைத்தனத்தின் சமகால வடிவமாக இலங்கையில் மலையக தமிழர்களின் வாழ்வியல் காணப்படுகிறது என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாளர் ரெமோயா ஒபொகடா மனித உரிமைப் பேரவையில் மலையக மக்களின் யதார்த்த நிலையை எடுத்துரைத்துள்ளார்.

இந்நிலையில் இவரின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி கனகராஜ்,

“இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரான மலையக மக்களின் அவலங்கள் தொடர்பிலும், அவர்கள் அடிமைத்தனமாக நடத்தப்படுவது தொடர்பிலும், இலங்கையில் இந்த மக்கள் மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகளுடனேயே வாழ்கிறார்கள் என்பதையும் வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச மட்டத்திற்கு அதுவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

ரேமோயா ஒபொகாடோ வின் மலையக மக்கள் தொடர்பான அறிக்கை ஆரம்பகட்ட தகவல்களாகவே இருக்கின்றன. இருப்பினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 200 வருட வரலாற்று அவலங்களை உலகின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருப்ப து ஆரோக்கியமான விடயமாகும்.

இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் பெற்றவுடன் முதலாவதாக மலையக தமிழ் மக்களின் பிரஜாவுரிமையிலேயே கை வைத்தது. அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு நாடற்ற பிரஜைகளாக்கப்பட்டனர். இது உலக வரலாற்றில் மிகப்பெரும் மனித உரிமை மீறலாகும். மலையக மக்களின் உழைப்பை உறிஞ்சி நாட்டுக்குத் தேவையான அன்னிய செலாவணியை உழைத்துக்கொண்டு. ஒரு சாதாரண
பிரஜைக்கான ஆகக்குறைந்த மட்ட மதிப்பைக் கூட மலையக மக்களுக்கு வழங்கவில்லை.

இலங்கையில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அது மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மறுக்கப்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் மிருகங்களைப் பிரிப்பது போல் மனிதர்களைப் பிரித்தார்கள். மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப் படவில்லை. கடந்த 70 வருட காலத்தில் அவ்வப்போது நடைபெற்ற போராட்டங்கள், அரசியல் தொழிற்சங்க அழுத்தங்கள் காரணமாக தவிர்க்கமுடியாமல் மிகக் குறைந்த மட்டத்தில் அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும். இன்று வரை அரசு நிர்வாகத்துறை எமக்கு எட்டாக்கனியாகவே காணப்படுகிறது.

அரசு நிர்வாகத்துறையையும், , பெருந்தோட்ட நிர்வாக துறையையும் பெரும்பான்மை சிங்கள இனத்தவர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். மலையக மக்கள் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையில் பெரும்பான்மை இனத்தவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது போன்ற நிலைமையே இன்றும் காணப்படுகிறது. தோட்டத் தொழிலாளர்கள் தற்போது இருக்கின்ற வீட்டுக்கு கூட காணி உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. தோட்டக் குடியிருப்பாளர்களை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஒரு குறுகிய கால முன்னறிவித்தளுடன் வெளியேற்றப்படலாம் என்ற சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றன.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளையும் ஒரு உள்ளக பொறிமுறை மூலமாக தீர்த்து வைக்க இலங்கை அரசாங்கங்களுக்கு முடியும். ஆனால் அது இதுவரை நடைபெறவில்லை.

எதிர்காலத்திலும் அது நடைபெறும் என எதிர்பார்க்க முடியாது. காலத்துக்குக் காலம் பெரும்பான்மை அரசியல்வாதிகளால் அனுதாப த்துக்குரிய சமூகமாக மலையக சமூகம் பார்க்கப்படுகிறதே தவிர அவர்கள் இந்த நாட்டில் பூரணத்துவமான உரிமையுடனும், ஏனைய சமூகங்களுக்கு நிகராக வாழ தகுதி உடையவர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படுவதில்லை. பெரும்பான்மை அரசியல் தலைமைகள் சில சலுகைகளை அறிவித்து விட்டால் மலையக மக்களை திருப்தி படுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

பெருந்தோட்டங்களை பொறுத்தவரையில் கீழ்நில பெருந்தோட்டங்களை சிங்கள இனத்தவர்களுக்கு பிரித்துக் கொடுத்து அவர்கள் சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றி இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான அரச மானியங்கள் தாராளமாக வழங்கப்படுகின்றன. ஆனால் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற மாவட்டங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் 22 பெருந்தோட்ட கம்பனிகளுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டு அந்த கம்பனி தோட்டங்களில் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கும், சொல்லொண்ணா அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டி ருக்கிறார்கள்.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மலையக அரசியல் தலைமைகள் உச்ச அளவில் அழுத்தங்களையும்,
நிர்பந்தங்களையும் கொடுத்தாலும் அதற்கான தீர்வு அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அடிமைத்தனத்தின் சமகால வடிவ அறிக்கையாளர்  ரெமோயா ஒபோகாடாவின் அறிக்கை மலையக அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு உந்து சக்தியாகவும் அதே நேரத்தில் இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஒரு நிர்ப்பந்தமாகவும் அமையும் என எதிர்பார்க்கலாம்.

கடந்த வாரத்தில் இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ஒபோகாடாவின் அறிக்கையின் சாரம்சம் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அது சம்பந்தமாக எவ்விதமான உள்ளடக்கமும் அறிக்கையில் இடம்பெறவில்லை .

தற்போதும் இலங்கை அரசாங்கத்துக்கு இந்த விடயத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லாமல் மலையக மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களின் சமூக அரசியல் பொருளாதார பிரச்சனைகளை இனங்கண்டு தீர்த்து வைப்பதற்கு இயலுமை இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் அடிமைத்தனத்தின் சமகால வடிவ விசேட அறிக்கையாளர் மலையக மக்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துக்கள் இலங்கையில் சாதகமாக பரீட்சிக்கப் படாவிட்டால் இவ்விடயம் சர்வதேச மட்டத்தில் பேசப்படுவது தவிர்க்கமுடியாத தாகும். மலையக மக்கள் சம உரிமைகளையும், சம அந்தஸ்தையும் பெற்று வாழ்வதற்கு பிரித்தானியா இந்தியா இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து செயற்படவேண்டும்.

இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அடிமைத்தனத்தின் சமகால வடிவ விசேட அறிக்கையாளரின் அறிக்கை அடித்தளமாக அமையும் என்பது எமது எதிர்பார்ப்பாகும் எனவும் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply