அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆசிரியர் சங்கம்!

தற்போது கல்வி சீர்திருத்தம் ஒன்றினை கொண்டு வந்திருப்பதாக இந்த அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அது கல்வி சீர்திருத்தம் அல்ல அது பாடத்திட்ட சீர்திருத்தமே. 2023 ஆம் ஆண்டு மாறவேண்டிய பாடத்திட்டம் மாறவில்லை அந்த வகையிலேயே 2026 ஆம் ஆண்டுக்காக இந்த பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் யோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

நேற்றையதினம் ஆசிரியர் இடமாற்றம் குறித்து நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர்,

பாடசாலை நேரம் ஆனது 2 மணிவரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் பாடசாலையில் அதிபர்கள் – ஆசிரியர்கள் இரண்டு மணி மட்டுமல்ல இரவுவரை கூட பணி புரிகின்றார்கள். பாடசாலை அதிபர், ஆசிரியர்களுடன் பேசாமல் தன்னிச்சையாக இந்த தீர்மானத்தை எடுத்து இரண்டு மணி வரை பாடசாலை நேரத்தை நீடித்துள்ளனர். என்ன தேவைக்காக இவ்வாறு நேரத்தை நீடித்தீர்கள் என்ற கேள்விக்கு இதுவரை பதில் வழங்கவில்லை.

1-6 ஆகிய வகுப்புகளுக்கான பாட நேரமே 50 நிமிடங்கள் என அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய வகுப்புக்களை எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்து இதுவரை எந்தவிதமான திட்டமும் இல்லை.  மலையகப் பிரதேசங்களில் தற்போது கூட இரண்டு மணிவரை பாடசாலைகள் நடைபெறுகின்றன. அந்தவகையில் இவ்வாறான பாடசாலைகள் எவ்வாறு செயல்படுவது என்று கூட ஒரு திட்டம் இல்லை. முஸ்லிம் பாடசாலைகள் தொடர்பாக இதுவரை ஒரு தீர்மானம் எடுக்கப்படவில்லை.

40 இலட்சம் மாணவர்கள் குறித்து ஒரு திட்டமிடாத செயல்பாடாகவே நாங்கள் இதனை பார்க்கின்றோம். எங்களுடன் பேசாமல் பாடசாலை நேரத்தை இரண்டு மணிவரை அதிகரித்தது தவறு என்று நாங்கள் அரசாங்கத்திற்கு கூறியிருந்தோம். இருந்தும் அரசாங்கம் ஆனது தமது செயற்பாடுகளில் பின்வாங்கவில்லை.
இது அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை துன்பப்படுத்துகின்ற செயற்பாடு. தேவை ஏற்படும் பட்சத்தில் அவர்களே நேரத்தை அதிகரித்து கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடத் தயார். ஆனாலும் அரசாங்கத்தின் இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். எனவே எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி இலங்கை முழுவதும் அதிபர் ஆசிரியர்கள் ஆகிய நாங்கள் அனைவரும் இணைந்து அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்- என்றார்.