ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தற்போதைய சூழ்நிலையில் ஆதரவு வழங்காது என கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்,
தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் பிளவுகள் ஏற்பட வேண்டும் என சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு எந்தவொரு குழப்பமும் எங்களுக்குள் இல்லை. கூட்டணியாக இருந்தாலும் கருத்து சுதந்திரம் உள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தீபாவளி நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு எமக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கொழும்புக்கு வெளியில் இருந்ததால் நாம் பங்கேற்கவில்லை. கொழும்பில் இருந்த மனோ கணேசன் நிகழ்வில் பங்கேற்றார். தீபாவளி என்பது தமிழர்களின் பண்டிகை. அதற்கு அழைப்பு விடுத்தால் செல்ல வேண்டியது தமிழர்களின் மரபாகும்.
தீபாவளி நிகழ்வுக்கு சென்றதால் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்கு ஆதரவு என்ற முடிவுக்கு வரக்கூடாது. அத்தகையதொரு தீர்மானத்தை இன்னும் நாம் எடுக்கவில்லை.
வெள்ளையர் அல்லாத இந்திய வம்சாவளி ஒருவர் இங்கிலாந்து பிரதமராக தெரிவாகியுள்ளார். இது பெருமைப்பட வேண்டிய விடயமாகும். பல தசாப்தங்களுக்கு முன்னர் வெள்ளையர்கள் எம்மை ஆண்டனர். அந்த மண்ணில் தெற்காசிய நாட்டவர் ஒருவர் வெள்ளையர்களை ஆள்வது மகிழ்ச்சி. இங்கிலாந்தில் இளம் பிரதமர் ஒருவர் பிரதமராக வந்திருப்பதுபோல, இலங்கையிலும் எதிர்காலத்தில் இளம் ஜனாதிபதி ஒருவர் தெரிவாக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.