அரசியல் கைதிகளின் விடுதலையும் இழையோடும் அரசியல் நிலைமையும் – பி.மாணிக்கவாசகம்

134 Views

அரசியல் கைதிகளின் பிரச்சினை குறித்து அரசாங்கம் – குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியிருப்பது தமிழ்த்தரப்பில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 8 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டிருக்கின்றார். இதுவே தமிழ்த்தரப்பின் வரவேற்புக்குக் காரணம்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து விடுதலைப்புலிகளின் காலம்தொட்டே அரசாங்கத்திடம் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வந்துள்ளன. தாகம் தீர்க்க தண்ணீர்கூட அருந்தாமல் விடுதலைத் தாகத்துடன் உண்ணா நோன்பிருந்த தியாகி தலீபன் தொடக்கம் பலரும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்திருக்கின்றனர். தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி அன்று உண்ணாவிரதமிருந்து சாவைத் தழுவிக்கொண்ட தியாகி திலீபனின் குரல் ஆட்சியாளர்களின் செவிகளில் ஏறவில்லை.

இதேபோன்றுதான் பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்பவற்றின் கீழ் சந்தேகத்தின்பேரில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி அவர்களது உறவினர்களும் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும், மனித உரிமைகள் அமைப்பினரும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ஆனால் இவர்களுடைய வேண்டுதல் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இதுவரையில் இருந்து வந்திருக்கின்றது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் அல்லது பயங்கரவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களையே அரசாங்கம் நீண்ட காலமாகத் தடுத்து வைத்திருக்கின்றது. அவர்கள் மீது முறையான சட்ட நடவடிக்கைகள் எடுப்பதில் வேண்டுமென்றே கால தாமதம் செய்யப்படுகின்றது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான நியாயமான போராட்டத்தையே அரசாங்கம் பயங்கரவாதம் என வரையறுத்திருக்கின்றது. அரசியல் உரிமைகளுக்காகப் போராடியவர்களுக்கு உதவினார்கள் அல்லது அவர்களுடன் இணைந்து செயற்பட்டார்கள் என்பதே கைது செய்யப்பட்டவர்கள் மீதான அதிகாரிகளின் பயங்கரவாதக் குற்றச்சாட்டாகும்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவே இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்பது அரசாங்கத்தின் அரசியல் ரீதியிலான வாதம். அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கமைய இராணுவ நடவடிக்கைகள் அதாவது விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதுடன் பயங்கரவாதமும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாகிவிட்டது. யுத்தம் முடிவுக்கு வந்த 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நாட்டில் விடுதலைப்புலிகள் சார்ந்த பயங்கரவாதச் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதையும் அரசாங்கம் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கின்றது.

அதேவேளை, யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இராணுவத்தின் பொதுமன்னிப்பு உத்தரவாதத்தை ஏற்று படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாகிய 13 ஆயிரம் பேர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்டார்கள். யுத்தம் முடிவுற்றதையடுத்து நாட்டில் பயங்கரவாதம் தலையெடுக்கவில்லை என்பதை இந்த நடவடிக்கை மேலும் உறுதிப்படுத்தியிருக்கின்றது என்றே கொள்ள வேண்டும்.

எனவே, பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டால், பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. பல ஆண்டுகளாக எந்தவித விசாரணைகளுமின்றி பலர் இன்னும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற தண்டனை வழங்கப்பட்டவர்களும் இவர்களில் அடங்குவார்கள்.

இராணுவத்துடன் நேரடியாக ஆயுதமேந்திப் போராடியவர்களைப் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் விடுதலை செய்ய முடியும் என்றால், சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களையும் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை அ,னுபவிப்பர்களையும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்திருக்க வேண்டும் அல்லவா? ஏன் அதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செய்யவில்லை? அவர் செய்திருக்காவிட்டாலும், அவருக்குப் பின்னர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியாளர்களாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்திருக்க வேண்டும். அவர்களும் அதனைச் செய்யவில்லை.

இது ஒருபுறமிருக்க, தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராடினார்கள். ஆக அவர்களது நோக்கம் அரசியல் சார்ந்தது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே அவர்கள் போராடினார்கள். அதனடிப்படையிலேயே ஈழக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருந்தது. தமிழ் மக்கள் இறைமையுடன் தங்களது பிரதேசங்களில் தமக்கான நிர்வாக அதிகாரங்களைக் கொண்டவர்களாக ஆட்சி நிர்வாகம் நடத்த வேண்டும். நாட்டின் ஆட்சி உரிமையில் பங்காளிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

உலகின் வேறிடங்களில் நடைபெறுகின்ற பயங்கரவாதச் செயற்பாடுகளைப் போன்று வெறுமனே இரத்த வெறிகொண்டு ஆட்களைக் கொன்றொழிப்பதற்காக பயங்கரவாத நோக்கத்தை அவர்கள் கொண்டிருக்கவில்லை. இதனை இப்போது ஜனாதிபதியாக அதிகாரம் பெற்றிருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க தொடக்கம் மகிந்த ராஜபக்ச வரையிலான அனைத்து அரசியல் தலைவர்களும் பேரின அரசியல் செயற்பாட்டாளர்களும் நன்கறிவார்கள். ஏனெனில் பயங்கரவாதிகள் என இவர்களால் சித்தரிக்கப்பட்ட, இன்னும் சித்தரிக்கின்ற விடுதலைப்புலிகளுடன் சமாதானத்திற்கான போர் ஓய்வு ஒப்பந்தம் செய்து இதே அரச தரப்பினர்தான் உலகின் பல நாடுகளில் ஓடியோடி பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

இத்தகைய பின்புலத்தில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களை யுத்தம் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் கடந்த பின்னரும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி சிறைச்சாலைகளில் தடுத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயமாக முடியும்?

அரசியல் உரிமைகளுக்காக அரசியல் விடுதலைக்காகப் போராடியவர்களை அரசியல் போராளிகள் என்றே வகைப்படுத்தி இருக்க வேண்டும். அவர்களைப் பயங்கரவாதிகள் என தங்களது பேரினவாதத்திற்காகவும் பேரின வெறியுணர்வு கொண்ட அரசியல் நலனுக்காகவும் பெயரிட முடியாது. அவ்வாறு பெயரிட்டு சந்தேக நபர்களை நீண்டகாலத்திற்குத் தடுத்து வைத்திருப்பதும் நியாயமாகாது.

அரசாங்கம் அவர்களை பயங்கரவாதிகள் என்று வகைப்படுத்தி நோக்குவதை நிறுத்தி அவர்களை அரசியல் கைதிகளாக ஏற்று அனைவரையும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் பேரின ஆட்சியளார்கள் எவருக்கும் அத்தகைய அரசியல் முதிர்ச்சி இன்னும் ஏற்படவில்லை. தமிழ் மக்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற இனவாத அரசியல் மாயையில் இருந்து அவர்கள் இன்னும் வெளிப்படாமையே இதற்கான காரணமாகும். சிங்கள பௌத்த தேசியம் என்ற மிக ஒடுங்கிய அரசியல் உளவியலில் ஆழ்ந்து கிடக்கின்ற இவர்கள் இன்னும் தெளிவடையாதிருப்பது கவலைக்குரியது.

அதிகாரங்கள் இருக்கின்றன என்பதற்காக ஆட்சியாளர்கள் தாங்கள் விரும்பிய எல்லாவற்றையும் செய்யலாம் என்ற அரசியல் உளப்பாங்கு தவறானது. இனவாத அரசியல் ரீதியில் அவர்களை ஆதரித்த சிங்கள மக்களே அதனை முகத்திலடித்தாற்போன்று நாட்டின் நிறைவேற்றதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதி ஒருவரை நாட்டை விட்டே ஓடச் செய்து அழுத்தமாக உணர்த்தியிருக்கின்றார்கள்.

இத்தகைய அரசியல் பின்புலத்தில் இன்னும்  பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உயிர்ப்புடன் வைத்து தமிழ் அரசியல் கைதிகளை சட்டநடவடிக்கைகளின் கீழேயே கையாள வேண்டும் என்று பிடிவாதம் கொண்டிருப்பது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல. குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களுக்குப் பேராதரவு வழங்கிய சிறுபான்மை தேசிய இன மக்களாகிய தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைக் கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டியது முக்கியம். தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு எல்லோரிலும் பார்க்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகமாகவே உண்டு.

அந்த வகையில்தான் அவர் இப்போது 8 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டிருக்கின்றார் என்று கொள்ள முடியாது. ஏனெனில் தமக்குரிய அரசியல் கடப்பாட்டின் அடிப்படையில் அவர் இந்த விடுதலை உத்தரவை வழங்கியிருப்பாரேயாகில், அவர் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு அறிவித்தீருப்பார். அது நடக்கவில்லை. ஆக, இந்த 8 அரசியல் கைதிகளின் விடுதலை என்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கை என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.

பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து, நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்கின்ற பாரிய பொறுப்பில் அவர் ஜனாதிபதி என்ற ரீதியில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருக்கின்றார். அரசாங்கத்துக்கு உள்ளேயும், நாட்டு மக்களிடமிருந்தும் அதேபோன்று சர்வதேச மட்டத்திலும் இந்த சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. இந்த நிலையில் நாட்டின் சிறுபான்மை இன மக்களாகிய தமிழ்த்தரப்பின் அரசியல் ரீதியான ஆதரவைப் பெறுகின்ற நோக்கம் இந்த அரசியல் கைதிகளின் விதலையில் இழையோடியிருப்பதை உணர முடிகின்றது. ஆனாலும் 8 தமிழ் அரசியல் கைதிகள் ஒரே தடவையில் விடுதலை செய்யப்படுவது என்பது வரபேற்புக்கு உரியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அரசியல் இலாபத்தைக் கருத்திற் கொண்டு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைப் பிய்த்துப் பிடுங்கும் நிலைமையில் கையாள்வதை முறையான அரசியல் செயற்பாடாகக் கொள்ள முடியாது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாமற்செய்து தண்டனைக் கைதிகள் உட்பட அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டியது அவசியம்.. அத்தகைய ஓர் அரசியல் நகர்வே சிறுபான்மைத் தேசிய இனமாகிய தமிழ் மக்களின் அரசியல் ஆதரவைப் பெறுவதற்கான உறுதியான நேர்மையான நடவடிக்கையாக அமையும்.

Leave a Reply